Last Updated : 03 Aug, 2017 10:30 AM

 

Published : 03 Aug 2017 10:30 AM
Last Updated : 03 Aug 2017 10:30 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 39: அறுபத்து மூவரில் மணிவாசகர் உண்டா?

தி

ருவாசகத்தேன் தந்த வள்ளலும் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவருமாகிய மாணிக்கவாசகர், சைவத் திருத்தொண்டர்களாகிய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கொள்ளப்படவில்லை என்பது பெரும்பான்மையான சைவசமய அன்பர்களுக்கே பெருவியப்பைத் தரும். நாயன்மார்களின் எண்ணிக்கையைப் பாடும் சுந்தரரின் திருத்தொண்டர்தொகையை அடியொற்றி, திருத்தொண்டர் திருவந்தாதியை நம்பியாண்டார் நம்பிகள் அருளினார். இவ்விருவர் நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை அருளினார் சேக்கிழார் பெருமான்.

திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமானை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளாரா என்பதில் எழுந்த ஐயமே மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா என்ற ஐயத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. இக்கேள்விக்கான அறிவுபூர்வமான விடையை வரலாற்றுப் பார்வையுடன் தேடுவோம்.

கணக்கீடு தோன்றிய முறை

இறைவன் ‘தில்லைவாழ் அந்தணர்’ என்று (தொகையடியாரைக் குறித்து) சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுக்க, பதினொரு பாடல்களில், அறுபத்தொரு தனியடியார் திருத்தொண்டர்களையும் எட்டுத் தொகையடியார்களையும் பாடி, திருத்தொண்டர் தொகையை நிறைவுசெய்தார் சுந்தரமூர்த்தி நாயனார். இறைவனே எடுத்துக்கொடுத்த முதலடியில், தொகையடியார்களான தில்லையில் வாழும் அந்தணர்களையும் மற்ற தொகையடியார்கள் எழுவரையும் பத்தாவது பாடலிலும் பாடியுள்ளார்; மற்ற பாடல்கள் அனைத்திலும் தனியடியார்கள் மட்டுமே பாடப்பட்டுள்ளனர்.

திருத்தொண்டர் திருவந்தாதி

திருமுறைகளைத் தொகுத்து அருளிய நம்பியாண்டார் நம்பிகள், இத் ‘திருத்தொண்டர் தொகை’யிலிருந்து ‘திருத்தொண்டர் திருவந்தாத’என்னும் சார்புநூல் ஒன்றைச் செய்தார்.

சுந்தரர் பாடிய ஏழாம் பாடலில் வரும் ‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்னும் அடியைத் தொகையடியாராகக் கருதிய நம்பியாண்டார் நம்பி, அதற்கு, தமது திருத்தொண்டர் திருவந்தாதியில், ‘கபிலர், பரணர், நக்கீரர் முதலாக நாற்பத்து ஒன்பது கடைச் சங்கப்புலவர்கள்’ என்று குறிப்பிட்ட தொகையடியார்களுக்கு ஏற்றிப் பாடிவிட்டார். மற்ற அறுபது தனியடியார்களுடன், சுந்தரரையும், அவர்தம் பெற்றோர் சடையனார் – இசைஞானியம்மையார் இருவரையும் சேர்த்து, திருத்தொண்டர்கள் அறுபத்து மூவர் என்று கொண்டு பாடிவிட்டார்.

சேக்கிழார் பெருமான், திருத்தொண்டர்தொகையையும் திருத்தொண்டர் திருவந்தாதியையும் அடிப்படையாகக்கொண்டு, பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். பெரிய புராணத்தில்தான் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு விரிவாகச் சொல்லப்படுகிறது.

‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற வரிக்கு நம்பியாண்டார் நம்பிகள் கூறும் ‘பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப் புலவோர்’ என்ற கருத்தில் முற்றிலும் மாறுபட்டுள்ளார் சேக்கிழார் பெருமான்.

‘திருத்தொண்டர் தொகை’யை உற்றுநோக்கினால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ போல் பல சிறப்புப் பெயர்களைக் காணலாம். இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று பல தனியடியார்களையும் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறித்துள்ளது தெளிவு.

சேக்கிழாரின் அறிவுநுட்பம்

‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று அறியப்படுபவர் ஒரு ‘தனியடியாரே’ என்பதால்தான், ‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ பூண்டு வாழும், அவரல்லாத ஏனைய தொகையடியார்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி அடிகள் மீண்டும் குறிப்பிட்ட நுட்பத்தைத் தெளிந்துரைக்க சேக்கிழாரையன்றி வேறு யாரால் இயலும்?

இத்துணை தெளிவாக விளக்கினாலும், நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தைப் பற்றி மறுப்பு ஏதும் கூறாது, சரியான விளக்கத்தைச் சேக்கிழார் பெருமான் பாடிச் சென்றது, நம்பியடிகள் பால் சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பையும் தாம் கொண்ட கருத்தில் சேக்கிழாருக்கு இருந்த உறுதியையும் விளக்குகிறது.

மணிவாசகரின் காலம்

‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப்பட்ட அத்தனியடியார் மாணிக்கவாசகர்தாம் என்பதை நிறுவுமுன், மாணிக்கவாசகரின் காலம் சுந்தரருக்கு முற்பட்டது என்று நிறுவ வேண்டும்.

மணிவாசகர் காலத்தை ஒன்பதாவது நூற்றாண்டு என்பது பெரும்பான்மைத் தமிழ் ஆய்வாளர்களின் கருத்து. அவர்களது ஆய்வு முடிவுகள் புறச்சான்றுகள் கொண்டே முடிவு செய்யப்பட்டுள்ளன.

தில்லை மரங்களே சாட்சி

சிதம்பரம் நடராசர் திருக்கோயில், ஒருகாலத்தில் கடல் சூழ்ந்து தில்லை மரங்கள் நிறைந்த பெரும் பகுதி காடாக இருந்ததால் ‘தில்லைவனம்’ என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். நாளடைவில் அப்பெயர் தில்லை என்றும், தில்லையம்பதி என்றும் மாறியது. இத்தலத்தின் தலவிருட்சம் தில்லை மரமேயாகும்.

காலப்போக்கில், கடல் தில்லையிலிருந்து விலகி உப்பங்கழி சூழ்ந்து விளங்கி, பின் அதுவும் நீங்கி, தில்லையை அடுத்து பத்துக் கிலோமீட்டர் (சாலை வழியாகப் பதினைந்து கிலோமீட்டர்) தொலைவு சென்று பிச்சாவரத்தில் நிற்கிறது; பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளில் (உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடாகும்) தில்லை மரங்கள் நிறைந்து காணப்படுவதைக் காணலாம்.

தில்லையை ஒருகாலத்தில் கடல்சூழ்ந்து இருந்ததும், பின் கடல் பின்வாங்கி உப்பங்கழி சூழ்ந்து இருந்ததும், தற்போது உப்பங்கழியும் பின்வாங்கி ‘பிச்சாவரம் சதுப்புநிலத் தில்லைமரக் காடுகளாக’க் காட்சியளிப்பதில் என்ன பெரிய செய்தி இருந்துவிடப் போகிறது என்று சலிப்படைய வேண்டாம். அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது மாணிக்கவாசகரின் கால வரலாறு.

ஞானசம்பந்தர் பார்த்த உப்பங்கழி சூழ்ந்த தில்லை

திருஞான சம்பந்தப் பெருமானின் பாடலில்

மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்

கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்(திருமறை: 1.866.1-2)

‘மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்து ஓச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள்’ என்ற பொருளில் பாடப்பட்டுள்ளது. எனவே, திருஞானசம்பந்தப் பெருமான் வாழ்ந்த காலமான ஏழாம் நூற்றாண்டில் தில்லையை ஒருபக்கம் உப்பங்கழிகள் சூழ்ந்திருந்தன என்பது தெளிவாகிறது.

மணிவாசகரின் பாடல்களில் தில்லைக் கோயிலை எப்படிக் குறிப்பிட்டுள்ளார் என்று அடுத்த வாரம் காண்போம்.

(வாசகம் தொடரும்)
தொடர்புக்கு: krishnan@msuniv.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x