Last Updated : 27 Jul, 2017 10:53 AM

 

Published : 27 Jul 2017 10:53 AM
Last Updated : 27 Jul 2017 10:53 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 38: விழுகின்ற என்னை விடுதி கண்டாய்

னிதகுலம் என்பது பல்வேறு குணங்களையும் பல்வேறு செயல்பாடுகளையும் பல்வேறு நிலைப்பாடுகளையும் கொண்ட மனிதர்களின் கூட்டம். குணம், செயல்பாடு, நிலைப்பாடு ஆகியன ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேறுபடுவதைப் போல், ஆன்மிக வழிபாட்டுத் தேவைகளும் வேறுபடும். தேவாரம் உள்ளிட்ட மற்ற திருமுறைப் பாடல்கள் இறைவனின் பேராற்றலைப் போற்றித் துதிக்கவும், கருணையைப் பாடிப் பரவசமடையவும் மிகவும் துணைசெய்கின்றன.

ஆனால், ஒவ்வொரு தனிமனிதனும் தன் சிறுமைகளையும், குற்றங்குறைகளையும் மனம்விட்டு இறைவனிடம் பேசி, தனக்கான விடுதலையையும் கருணையையும் இறைவனிடம் கேட்க உதவும் மொழியையும் வெளியையும் அவற்றிலிருந்து பெற இயலவில்லை.

மனிதனுக்கான இறைமொழி

இறைவனுடன் மனம்விட்டுப் பேச விரும்பும் மனிதனுக்கான மொழியாகவும், வெளியாகவும் திருவாசகம் திகழ்கிறது. திருவாசகத்தின் ஒவ்வொரு பாடலிலும், தன் சிறுமைகளை விரிவாகக் கூறி, இத்தனை தாழ்ந்த எனக்கும் அருள் புரிந்தாயே என்று வியந்து ஒருவரால் பாட முடியும் போது, இறைவனின் கருணையின் பெருமையை அவர் நெஞ்சார உணர்கின்றார்; ‘தான்’ என்னும் அகங்காரம் அடியோடு ஒழியுமாறு, ஒருவர் தன் சிறுமைகளை, தன் வாயாரக் கூறிப்பாடத் துணைசெய்யும் திருவாசகங்கள், மொத்த மனிதகுலத்துக்கே விடுதலைதரும் ஆற்றல்மிக்க இறைமொழிகளாகின்றன.

வாழ்க்கையில் தவறே செய்யாதவர் என்று யாருமில்லை. செய்யக்கூடாத தவறைச் செய்துவிட்டேன்; எனக்கு மன்னிப்பே இல்லை என்ற குற்றவுணர்வில் அல்லல்படுபவரும், தவறுக்கு வருந்தி இறைவனிடம் அடைக்கலம் புகுந்தால், கடைத்தேற்றிக் காப்பான் கருணைவள்ளல் இறைவன் என்ற உறுதிப்பாட்டையும் ஆறுதலையும் தருவது திருவாசகம். திருவாசகத்தின் இவ்வாற்றலை உணர்த்தும் உரைகல், திருவாசகம் படிக்கும்போது ஆறாக ஊற்றெடுக்கும் கண்ணீர்; பக்குவப்படும் மனம் சொல்லும், இது எனக்கான திருவாசகம் என்று.

இடைச்செருகல் இல்லாத திருவாசகம்

ஒவ்வொரு தனிமனிதனும் இறைவனிடம் பேசும் மொழி ஆற்றலை, திருவாசகப் பாடல்கள் எவ்வாறு தருகின்றன என்று நோக்குவோம். தன் சிறுமைகளையும் குற்றங்குறைகளையும் விரிவாகக் கூறி, இவ்வளவு கீழ்மையான நிலையில் இருக்கும் தனக்கு, அருள்புரிந்ததை வியக்கும் வகையில், வருந்தி அதிலிருந்து மீட்குமாறு விண்ணப்பிக்கும் வகையில் திருவாசகப் பாடல்கள் அமைந்துள்ளதால், இறைவனிடம் பேசும் மொழியாற்றல் தனிமனிதர்களுக்குச் சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. இத்தகைய உணர்வுதரும் திருவாசகப் பாடல்களை, வேறு யாராலும் எழுத முடியாததால், இடைச்செருகலாகப் போலிப் பாடல்கள் திருவாசகத்தில் இல்லை.

மனிதகுலத்துக்கான விடுதலை

மணிவாசகர் தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளும் சிறுமைகள் மனிதகுலம் முழுவதற்கும் பொருத்தமாக இருக்கிறபோது, தனக்குப் பொருத்தமான திருவாசகத்தை அடையாளம் காணும் ஒருவன், எளிதில் தனது சிறுமைகளையும் இறைவனின் பெருமைகளையும் மனப்பூர்வமாக உணர்கிறான்; ஆணவமும், ‘தான்’ ‘தனது’ என்னும் பார்வைகளும் தவறு என்றுணர்ந்து மாற்றம் அடைகிறான்; சக மனிதர்களின் தேவைகளின் நியாயத்தை உணர்கிறான்; தன்னைத் தொண்டுக்கு ஆட்படுத்தும் மனநிலை பெறுகிறான். ஆன்ம விடுதலைக்கான எளிய பாதையை மனித குலத்துக்குக் கட்டமைத்துத் தந்தது திருவாசகம் மட்டுமே.

கைப்பொருள் ஈட்டவும், புறவுலகைத் தொழில்நுட்பத்தால் மாற்றவும் அறிந்துகொண்ட மனிதனின் புற அறிவு, அனைத்தையும் இயக்கவும், மாற்றவும் தன்னால் முடியும் என்ற கர்வம்கொண்டு, இறைவனின் இருப்பையும் கருணையையும் மறுக்கும்; அத்தகைய மனநிலையில், இறைவனே முன்னால் நின்று, அருள்அமுதை ஊட்டினாலும், ‘நீ இறைவனல்லன்’ என்று மறுக்கவும் செய்யும்; இறைமறுப்புக் கொள்கை மிகப் பழமையானது.

இறைமறுப்பு என்னும் ஏழ்மை

இறைமறுப்புக் கொள்கையில் பலகாலம் வாழ்ந்து, இறைவனை இகழ்ந்ததை, ‘ஏழைத் திருத்தாண்டகம்’ பதிகத்தில் பதினோரு பாடல்களில் பாடி வருந்துகிறார் அப்பர் பெருமான் . மெய்ப்பொருளாம் இறைவனை இழந்ததையே ஏழ்மை என்கிறார் மணிவாசகர்; “எண்ணிலேன் திருநாமம் ஐந்தெழுத்தும், என் ஏழைமை அதனாலே” என்பது திருவாசகம். அருளமுதம் தரவந்த இறைவனைப் ‘பித்தன்’ என மறுத்து இகழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், பின்பு, செந்தமிழால் ‘பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!’ என்று பாடித் துதித்தார். சமயக் குரவர்கள் நால்வரில், மாணிக்கவாசகரும் அப்பரும் சுந்தரரும் இறைவன் அருளமுதத்தை முதலில் மறுத்தவர்கள்தாம்.

தீயில் விழும் விட்டில்பூச்சி

இறைமறுப்புச் செயலைத் தாம் செய்ததாகக் கூறும் மணிவாசகரின் வாக்குமூலத்தைக் கேட்போம்: “தேனினை உண்ட வாயோடு, வண்டுகள் கிண்டிக்கொண்டிருக்கின்ற கொன்றைமலர் மாலையை முடியில் அணிந்த உத்தரகோசமங்கைக்கு அரசே!, வளர்கின்ற தீயினைச் சுற்றி வட்டமிட்டு, இறுதியில், அதிலேயே விழுந்து தன்னை அழித்துக்கொள்ளும் விட்டில்பூச்சி; அதுபோல, இந்த உலக வாழ்வே இன்பம் என்று நினைத்து, அதிலேயே விழுந்து என்னை நானே அழித்துக்கொண்டிருக்கிறேன். என் வழியில் நின்று, நீ உன் அருள் அமுதை, என் வாயில் ஊட்ட வந்தாய். நான் அதை ஏற்காமல் மறுத்து விட்டேனே!” என்று வருந்தும் திருவாசகம், நம் ஊனையும் உயிரையும் உருக்குகிறது. (வெறி - தேன்; அறுகால் - ஆறுகால் உடைய வண்டு)

செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்

விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்

உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே!

வழி நின்று, நின் அருள் ஆர்அமுது ஊட்ட மறுத்தனனே!

(திருவாசகம்: நீத்தல்விண்ணப்பம்:5)

தானே வந்து, வழிமறைத்த இறைவன், ‘அமுதை வாங்கிக்கொள்’ என்று கையில் தந்திருந்தால். ஒருவேளை, அதை உண்ணாமல் வீணாக்கிவிடலாம் என்று ஊட்டிவிட அல்லவா முயன்றிருக்கிறான்! அப்படி முயன்றும், அருளமுதை வேண்டாம் என்று மறுத்துவிட்டதற்காக மிகவும் வருந்துகிறார் மணிவாசகர். இறைவன் நமக்குத் திருமுறைகள் மூலம் அருள்தருவதைச் சுலபமாக அலட்சியம் செய்துவிடுகிறோம். அல்லது, மறுத்துவிடுகிறோம்.

இறைமறுப்பைச் செய்யும் மனிதர்கள், தங்கள் தேடலின் முதிர்ச்சி நிலையில், இறைவனின் இருப்பை அறிந்து, இறைவனைப் பழித்ததற்காகவும், ‘இறைவனே இல்லை’ என்று மறுத்ததற்காகவும் வருந்துவர். காரணம் கூறி, பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுவர். அத்தகைய மனிதர்களுக்காகப் பிறந்த திருவாசகத்தைக் காண்போம்.

அருள் அறியாமையால் மறுத்தனன்

“என் கண்மணியினும் சிறந்த மாணிக்கமணியே! என்னுடைய அறியாமையால், நீ ஊட்டிய அருளமுதத்தை உண்ண மறுத்துவிட்டேன். அதற்காக, நீ என்னை வெறுத்து, கைவிட்டு விடாதே! உத்தரகோசமங்கைக்கு அரசே! என்னுடைய மொத்த வினையையும் நீக்கி, அடியேனை ஆண்டுகொள் இறைவா! சிறுநாய்களின் பொய்களைப் பொறுக்கும் பெரியவர்களைப் போல், நீயும், உன்னை மறுத்த என்னை மன்னித்து ஆட்கொண்டு அருள வேண்டும்” என்கிறது இத்திருவாசகம்.

மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே!

வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி

ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,

பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

(திருவாசகம்:நீத்தல் விண்ணப்பம்:6)

கிடைப்பதற்கரிய தங்கக் கிண்ணம் ஒன்று கையில் கிடைக்கப்பெற்ற குழந்தை, அதைப் பாதுகாக்காமல், கண்ட இடத்திலும் போட்டுத் தொலைத்துவிடுவதற்குக் காரணம், தங்கக் கிண்ணம் மதிப்புமிக்கது என்பதைக் குழந்தை அறியாததே ஆகும். உலகப் பொருள் தொலைந்ததால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை; இங்கு தொலைக்கப்பட்டதோ, அறிவே வடிவான அருளமுதம். ‘அருள் அறியாமை’க்குக் காரணமான வினைகளை நீக்கி, ஆண்டுகொள்ள வேண்டுகிறார். “என்னைப் போன்ற சிறுநாய்களின் பொய்யினை இவ்வுலகின் பெரியவர்கள் பொறுத்தருள்வார்கள்; நீயோ, எல்லாப் பெரியவர்களையும்விட, மிகப் பெரியவன். ஆகவே, நான் அறியாமையால் மறுத்த உன் அருளமுதத்தை, சிந்தாமல், சிதறாமல் எனக்குத் திருப்பித்தருவது உன்னுடைய கடமை” என்று இறைவனிடம் உரிமை வழக்காடும் இப்பாடல் நமக்காகப் பிறந்த திருவாசகம்.

சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவராகிய மணிவாசகர், அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரா என்ற கேள்விக்கான அறிவுபூர்வமான விடையை அடுத்த வாரம் காண்போம்.

(வாசகம் தொடரும்)
தொடர்புக்கு: krishnan@msuniv.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x