Last Updated : 09 Jun, 2016 10:55 AM

 

Published : 09 Jun 2016 10:55 AM
Last Updated : 09 Jun 2016 10:55 AM

ஸ்ரீராமானுஜர் 1000: பெருமாளைத் தமிழில் வாழ்த்திய பெண்கள்

ஸ்ரீராமானுஜரின் சீடர்களும், அவரைப் பின்பற்றுபவர்களும் தங்களை அடியேன் ஸ்ரீராமானுஜ தாசன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொண்டவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, வணக்கம், நமஸ்காரம் போன்றவற்றைக் கூறாமல் தாம் இன்னாருக்கு தாசர் என்றே சொல்லி மகிழ்வர்.

இதுபோன்ற பழக்கம் எம்மதத்திலும், எந்த மகானை முன்னிட்டும் காணப்படுவதாகத் தெரியவில்லை. இன்றைக்கும் இவ்வாறு சொல்லிக்கொண்டு ஆனந்தம் அடையும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உண்டு. ஆத்மாவுக்கு ஆண், பெண் பேதமில்லை என்பதால், ஆண், பெண் பாலின வேறுபாடுகளைக் குறிக்காமல், தாசர் என்று கூறிக் கொள்வதே சிறந்தது என்பர் சான்றோர்.

அக்காலத்தில், ஸ்ரீராமானுஜர் சீடர்களாகச் சிலரை ஆட்கொண்ட விதம் புதுமையாக இருக்கும். இதில் அரங்க மாளிகை, வங்கிபுரத்து நம்பி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அரங்க மாளிகை

ஸ்ரீரங்கத்து அரையர்களில் ஒருவர் ராஜ மகேந்திரர். இவரது மகன் அரங்க மாளிகை. அரையர்களோ அரங்கன் திருவடிகளைப் போற்றி வாழ்பவர்கள். ராஜ மகேந்திரர் மகனோ விரும்பத்தகாத வழிகளில் சென்றுகொண்டிருந்தார்.

இவனுக்குப் பணிவு, அடக்கம் ஏதுமில்லை. மேலும் கெட்ட சகவாசங்களும் அதிகமாக இருந்தன. அவரைத் திருத்தி நல்வழிப்படுத்த இயலாமல், அரையர் மட்டுமல்ல அரங்கன்பால் அன்புள்ளம் கொண்ட நல்லுள்ளங்களாலும் இயலவில்லை. இதனைக் கேள்விப்பட்ட உடையவர், அரங்க மாளிகையை நெறிப்படுத்த எண்ணம் கொண்டார்.

தமது சீடர்களை அழைத்து, அரங்க மாளிகை எங்கிருந்தாலும் அழைத்து வருமாறு கூறினார். தகாத இடத்தில் இருந்த அரங்க மாளிகையை எப்படியோ கஷ்டப்பட்டு, உடையவரிடம் இழுத்து வந்துவிட்டார்கள். உடையவர், அரங்க மாளிகையை அரங்கன் சன்னிதிக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்துவித்தார்.

பின்னர் பெருமாளின் புகழை எடுத்துக் கூறினாராம். தனது கால்களில் விழுந்து வணங்கிய அரங்க மாளிகையை, ஆசீர்வதித்தார் உடையவர். அன்று முதல் அரங்கன் சேவையில் ஈடுபட்டார் அரங்க மாளிகை.

வங்கிபுரத்து நம்பி

எம்பெருமானாருடைய சீடர்களில் ஒருவர் வங்கிபுரத்து நம்பி. கிருஷ்ண ஜெயந்தியன்று பெருமாள் புறப்பாட்டின்பொழுது, மண்டபத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதில் எம்பெருமானாரின் சீடர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருபுறம் கோஷ்டியாக நின்றிருந்தனர்.

ஆனால் வங்கிபுரத்து நம்பி மட்டும் வழக்கத்திற்கு மாறாக, பெண்கள் நின்றிருந்த பகுதியில் போய் நின்றார். பெருமாள் ஆராதனை முடிந்த பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

வங்கிபுரத்து நம்பியிடம் வந்தார் முதலியாண்டான். வழக்கத்திற்கு மாறான செயலின் காரணம் கேட்டார். அதற்கு நம்பி, பெண்கள் பெருமாளை எப்படிப் போற்றிப் புகழுகிறார்கள் என்று பார்க்கச் சென்றதாகக் கூறினார். முதலியாண்டானுக்கும் அதனை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

அவர்கள் எப்படிப் பணிந்து போற்றினர் என்று கேட்டார். அவர்கள் நேரிடையாகப் பேசுவது போல், பெருமாளிடம் பால் சாப்பிடு, பழம் சாப்பிடு என உபசரித்தார்கள். வண்ண உடைகளையும், பொன் பூணுலையும் அணிந்துகொள் என்று பாசமாகக் கூறினார்கள். பின்னர் பெருமாள் நூறாண்டு வாழ ஆசீர்வதித்தார்கள் என்று கூறி முடித்தார் வங்கிபுரத்து நம்பி.

இதனை கேட்ட முதலியாண்டான், நம்பியிடம், அந்த நேரத்தில் அருகில் இருந்த இவர் என்ன செய்தார் என்று கேட்டார். நம்பியோ `விஜயீ பவ` என்று கோஷமிட்டதாகக் கூறினார். அங்கு போய் நின்றும் தமிழ் மொழியில் வாழ்த்த வாய் வரவில்லையே, சம்ஸ்கிருத மொழியில் வாழ்த்திவிட்டீர்களே என்று கூறிச் சிரித்தாராம் முதலியாண்டான்.

தாழம்புதரும் தடாவுணவும்

மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவருக்கு, குசேலர் போலப் பல பிள்ளைகள். அவர்களுக்கு தினம்தோறும் உணவளிக்க முடியாததால் அவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று பிரசாத உணவைத் தன் பிள்ளைகளுடன் சென்று உண்பாராம்.

அப்போது கொடுக்கின்ற பிரசாத அளவைவிட அதிகமாகத் தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் தருமாறு தொந்தரவு செய்வாராம். பல நாட்களாக இந்தப் பிரசாதப் போராட்டம் நடப்பதாகவும், சமாளிக்க முடியவில்லை எனவும் எம்பெருமானாரிடம் பரிசாரகர்கள் தெரிவித்தனர்.

எம்பெருமானாரும் அவரை உடனே அழைத்து வரச் சொன்னார். இப்படி ஒரு ஏழ்மை வர என்ன காரணமோ என்று எண்ணிய அவர், இறைவன் அருளால் அவருக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று வாழ்த்தி, தனியாக போய் வசிக்குமாறு கூறினார்.

உடையவர் மீது பெரு மதிப்பு வைத்திருந்த அவர், உடனடியாக காவிரிக் கரையில் இருந்த தாழம்புதருக்கு அருகே குடிசையொன்றைக் கட்டி, தன் பிள்ளைகளுடன் வசிக்கத் தொடங்கினார்.

அன்று முதல் தினமும் அவரது இல்லம் தேடி ஒரு தடா (பெரிய பாத்திரம்) அளவுக்குப் பிரசாத உணவு வந்தது. அவரும் அவரது பிள்ளைகளும் பசியாற உண்டனர். இந்த நேரத்தில் ரங்கம் கோயிலில் தினமும் ஒரு தடா உணவு காணாமல் போவதாக புகார் வந்தது. எம்பெருமானாரும், பல பிள்ளைகள் பெற்ற அந்த வறியவர் எங்கே என்று கேட்டார்.

பலர் தெரியவில்லை என்று கூற, காவிரிக்கு ஸ்நானம் செய்யச் சென்ற ஒருவர், வறியவர் பிள்ளைகள் காவிரிக் கரையில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டதாகக் கூறினார். எம்பெருமானார் தன் சீடர்களுடன் அங்கு சென்றார். வறியவர் குடும்பத்தைக் கண்டார். வாழ்க்கை எப்படிப் போகிறது, உணவுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.

அவரோ தினமும் ஒரு தடா அளவில் உணவினை ரங்கநாதன் என்ற பெயருடையச் சிறுவன் கொண்டுவந்து தருவதாகவும், அவ்வுணவே தங்கள் அனைவருக்கும் போதுமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார். ரங்கநாதன் காப்பாற்றுவார் என்று தான் கூறிய சொல்லைக் காப்பாற்றிவரும் அரங்கனின் பெருமையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் உகுத்தாராம் உடையவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x