Last Updated : 13 Jul, 2017 10:31 AM

 

Published : 13 Jul 2017 10:31 AM
Last Updated : 13 Jul 2017 10:31 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 37: பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே!

திருவாசகத்தின் சிறப்பே, சாமானிய மனிதர்களும், அவரவர் நிலையில், அவரவர் மொழியில், இறைவனிடம் நேரடியாகத் தங்கள் குறையைத் தெரிவிப்பதற்கும், தனிப்பட்ட முறையில் பேசுவதற்கும் ஏற்ற வகையில் பல பாடல்களைக் கொண்டுள்ளதாகும். எண்ணப் பதிகத்தில், மணிவாசகர் இறையருள் கிட்டுவதற்குத் தாமதமாவது குறித்து மிகவும் வருந்தி, மனமுருகி, ஊனையும், உயிரையும் உருக்கும் ஆறு பாடல்கள் அருளியுள்ளார்.

சிவனோடு உரையாட, சிவனோடு உறவாட . . .

ஆயிரம் வார்த்தைகளில் விளக்கப்படவேண்டிய செய்தியை, ஒரு ஓவியம் எளிதில் விளக்கிவிடும். ஆயிரம் ஓவியங்கள் விளக்கும் கருத்தை, ஒரு இன்னிசைத் துணுக்கு ஆழ்மனதில் பதித்துவிடும். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய தேவார மும்மூர்த்திகளின் பாடல்களுக்கான பண்ணிசையை அவர்களே அமைத்துக் கொடுத்துள்ளார்கள்; திருவாசகப் பாடல்களுக்கு யாப்பு உண்டே தவிர, எந்தப் பண்ணில் பாடவேண்டும் என்ற இசை வழிகாட்டுதல் இல்லை;

அதனால் பொருத்தமான இசையில் திருவாசகப் பாடல்களைப் பாடமுடியாத பெருங்குறை அன்பர்களுக்குண்டு. இதனால், “திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்னும் பழமொழி நடைமுறை அனுபவத்தில் வராமல் போனது.

எண்ணப் பதிகத்திலிருந்து ‘பாருருவாய’ மற்றும் ‘பத்திலனேனும்’ என்று தொடங்கும் சாமானியருக்கான இரு பாடல்களை, இசையமைப்பாளர் இளையராஜா அவர்களே தேர்ந்தெடுத்து, இசையமைத்து வெளியிட்டுள்ளது தமிழர்களுக்குக் கிடைத்த வரம்.

மணிவாசகரே இசையானார்

இவ்விரு பாடல்களும் இளையராஜாவின் இசையில் உயிர்பெற்றெழுந்து நம் ஊனையும் உயிரையும் உருக்குகின்றன; பண் அமைப்பதற்காக, மணிவாசகரே இளையராஜா ஆனாரோ என்றே எண்ணுகின்றன நம் மனங்கள். இப்பாடல்களின் ஆழ்ந்த பொருளில், பல காலங்கள் ஊறித் திளைத்திருந்தால் மட்டுமே, இத்தகைய தெய்வீக இசை சாத்தியம்.

இவ்விசை, வான்கலந்து, ஊன்கலந்து, உயிர்கலந்து நம்மை இறைவனுடன் சங்கமித்தது. நாதத்துக்கே தலைவனான நாதாந்த நாயகன் சிவபெருமான், இசைஞானிக்குத் தன்னையே தந்திருப்பான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. திருவாசகப்பொருள் உணர்ந்த இசை ஞானியின் இசையில் அனைத்துத் திருவாசகங்களும் சாமானியர்களைச் சென்றடைய, சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து வேண்டுவோம்.

இறைவனிடம், பிறவி நீங்கப் பக்தியும், பக்தி உண்டாக அடியவர் கூட்டத்தில் இருப்பதுவும், அடியவர் கூட்டத்தில் இருப்பதற்கு இறைவன் அருளையும் நாம் வேண்ட, நமக்குத் திருவாசகம் தந்தவர் மணிவாசகர். இறைபக்தி இல்லாதவர்கள், இறைப்பற்று இல்லாதவர்கள், இறைவனை வணங்காதவர்கள், அவன் திருவடிகளைக் காண விருப்பம் இல்லாதவர்கள் என்று ஆன்மவிடுதலைக்கான எந்தத் தகுதியும் இல்லையே என்று வருந்துபவர்களுக்காக, 'பத்திலனேனும்" என்று தொடங்கும் திருவாசகத்தை அருளினார்;

மணிவாசகரின் கருணையைப் போற்றுவதா, மணிவாசகராகவே மாறி, இசை வடிவத்தில் நம் உள்ளமெல்லாம் நிறைந்த இசை வாசகம் இசைத்த இளையராஜாவைப் போற்றுவதா, இவ்விருவருள்ளும் நிற்கும் சிவபெருமானின் கருணையைப் போற்றுவதா என்று உருகும் மனதோடு இப்பாடலின் பொருளைக் காண்போம்.

பத்திலன் ஏனும், பணிந்திலன் ஏனும்

“எம்பெருமானே! உன் மேல் பக்தி இல்லாதவனாக இருந்தாலும், பற்று இல்லாதவனாக இருந்தாலும், இதுவரை உன்னைப் பணிந்து வணங்காதவனாக இருந்தாலும், ஞானியர் போற்றிப் பாடி, அடைய விரும்பும் உன் உயர்ந்த பைங்கழல் திருவடிகளைக் காணும் பித்து இல்லாத வெற்று மனிதனாக நான் இதுவரை இருந்துவிட்டாலும், உன்னையே நினைந்து பிதற்றும் எல்லையற்ற அன்பு உன்பால் இதுவரை எனக்கு இல்லை என்பது உண்மையே ஆனாலும், என்னுடைய பிறவிநோயை நீக்கி, உன் திருவடிகளில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முத்துப் போன்றவனே! மாணிக்க மணியைப் போன்றவனே! எப்போதும் உன்னையே நினைந்து, “என் முதல்வனே! முறையோ?” என்று உன்மேல் எல்லையற்ற அன்போடு முறையிட்டு, நான் உன்னைத்தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறேன்; இனிமேலும் உன்னைப் பிரிந்து இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது; எனவே என்னை அழைத்துக்கொள்”, என்று இறைவனிடம் முறையிடுகிறார் மணிவாசகர்.

பத்து இலன் ஏனும், பணிந்திலன் ஏனும், உன் உயர்ந்த பைம் கழல் காணப்

பித்து இலன் ஏனும், பிதற்றிலன் ஏனும், பிறப்பு அறுப்பாய்; எம்பெருமானே!

முத்து அனையானே! மணி அனையானே! முதல்வனே! முறையோ? என்று

எத்தனையானும் யான் தொடர்ந்து, உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே.

(திருவாசகம், எண்ணப் பதிகம்: 4)

மணிவாசகரின் இறையன்பையும், பக்தியையும், இறைப்பற்றையும் உலகே அறியும். இருந்தும்கூட, இவை எதுவும் இல்லாத நம்போன்றோரின் தகுதிக் குறைவை, தமக்கே நேர்ந்ததுபோல் கசிந்துருகும் மணிவாசகரின் ஈடு இணையற்ற கருணைக்கு நெஞ்சார நன்றி செலுத்துவோம். இறைவனுடன் பேசுவதற்கு எள்ளளவுத் தகுதிகூட தமக்கு இல்லை என்று வருந்தும் மனிதர்களும் இறைவனுடன் பேசுவதற்கு வழிகாட்டும் திருவாசகம் இது.

காணவும் நாணுவனே

கடும் வறுமையில் வாடிய கண்ணபிரானின் ஆருயிர் நண்பர் குசேலர், தம் மனைவியின் ஆலோசனைப்படிக் கண்ணபிரானைக் காணச்சென்றார்; வெகுநாட்கள் நண்பனைக் காணச்செல்லாத குற்றவுணர்வில் கூனிக் குறுகினார்; மிகுந்த அன்போடு, தம்மை ஆரத்தழுவி வரவேற்ற கண்ணபிரானைக் காணவும் நாணினார் குசேலர்.

இக்காட்சியை நினைவுபடுத்துகிறது எண்ணப் பதிகத்தின் ஐந்தாவது பாடல். “எம் பெருமானே! நிலையானவனே! உன் திருவடிகளைக் காண்பதையும் இழந்ததால் வறுமையுற்றேன்; கண்கள் களிப்புறப் பார்த்துப் போற்றுவதையும் இழந்தேன்; வாயால் போற்றித் துதிப்பதையும் இழந்துவிட்டேன்; என்னுடைய அற்பத்தன்மையால் உன்னை எண்ணி உருகுகின்ற இயல்பையும் நான் இழந்துவிட்டேன்; இவற்றால், பிறகு முழுமையாகக் கெட்டுவிட்டேன். அதனால், இனிமேல் நீயே என் கண்முன்னே வந்தாலும், உன்னைப் பார்ப்பதற்கும் நாணுகின்றேன், கூசுகின்றேன்!”, என்று கதறினார் மணிவாசகர். (தாணு-நிலையானவன்)

காணும் அது ஒழிந்தேன் நின் திருப்பாதம்; கண்டு கண் களிகூர,

பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே,

தாணுவே, அழிந்தேன்; நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால்

காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.

(திருவாசகம், எண்ணப் பதிகம்: 5)

அடியவர்கள் இடைவிடாது மனதாலும், கண்களாலும் திருவடிகளைக் காணவேண்டும், வாயால் போற்றிப் பாடித் துதிக்கவேண்டும்; அவ்வாறு செய்தால் இறைவனையே எண்ணி உருகும் இயல்பு நம்மிடம் தாமாக வந்துவிடும். பிறகென்ன? இறைவனின் திருக்காட்சியை கண்ணாரக் கண்டு, பதமுத்தியைப் பெற்றுப் பேரின்பமடையலாம் என்பது இத்திருவாசகத்தினைப் பாடுவதால் கிடைக்கும் பெரும்பேறாகும். “பத்திலனேனும்” பாட்டுக்கு இளையராஜா அமைத்த பண்ணிலேயே இப்பாடலையும் தேன்மழையாகப் பாடி சிவனருளைப் பெறலாம்.

இறைவனே இல்லை என்று மறுத்து, இறைநிந்தனை செய்து வாழ்ந்ததற்காக வருந்துவோரும் விடுதலையடைந்து, உய்வு பெறுவதற்காக, மணிவாசகப் பெருமான் மனமுருகி வேண்டும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)
தொடர்புக்கு: krishnan@msuniv.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x