Last Updated : 06 Jul, 2017 10:38 AM

 

Published : 06 Jul 2017 10:38 AM
Last Updated : 06 Jul 2017 10:38 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 36: ஓருருவாய நின் திருவருள்

மெய்ப்பொருளான இறைவனை அடைவதற்கான மெய்யறிவைப் பெறுவதே நம் பிறவி நோக்கம் என்பதை மறந்துவிட்டு, நிலையில்லாத பொய்ப்பொருளான கைப்பொருளைச் சம்பாதிக்கவே வாழ்நாளை வீணாக்கிவிட்டோம். மீதமிருக்கும் குறைந்த நேரத்தை வீணாக்காமல், இறைவனிடம் நாம் வேண்டுவது எது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை இறைவனிடமே விட்டுவிடுவது புத்திசாலித்தனம் என அறிவுரை தருகிறார் மணிவாசகர்.

முட்டிய பின் பணிவதைவிட . . .

‘சாவதற்காக யாரும் மருந்து உண்ணமாட்டார்கள்’ என்பது பழமொழி. நன்மை தருவதை விட்டுவிட்டு, தீமை தருவதை இறைவனிடம் எவரும் கேட்க மாட்டார்கள்தாம். ஆனாலும், நமக்கு நன்மை தருபவை எவை, தீமை தருபவை எவை என்று சரியாகத் தீர்மானிக்கும் ஆற்றல் நம்மிடம் இல்லை. அறியாமையால், நமக்குத் தீமை தருவதைக் கேட்டுப் பெற்று, தீமையை அனுபவித்து முட்டிய பிறகு, இறைவனிடமே மீண்டும் பணிந்து சென்று வேறு ஒன்றைக் கேட்பதை விட எளிதானது, நாம் கேட்டுப் பெறவேண்டியவை எவை என்று முடிவுசெய்வதை இறைவனிடமே விட்டுவிடுவதாகும்.

பாதாளம் ஏழுக்கும் கீழ் சென்று தேடிய திருமாலுக்கும், பல உலகங்களுக்கு மேலே பறந்து நோக்கிய பிரம்மனுக்கும் காட்சி தராத சிவபெருமான், நம் உடலில் இருந்து, விரும்பி நம்மை ஆட்கொள்கிறான்; இந்நிகழ்வு, இறைவனின் எளிமையாலும், கருணையாலுமே தவிர, நம் திறமையால் இல்லை. இறைவனாக விரும்பி நமக்கு எதைத் தருகிறானோ, அதுவே நமக்குரிய சிறந்த பொருளாக இருக்கும் என்பது உறுதி. எனவே, அவன் விரும்பித் தருவதையே, நாமும் மகிழ்வோடு வேண்டிப் பெற்றுக்கொள்வோம்.

உன்னிடம் நீங்காத அன்பைத் தருவாய்இறைவா

ஒருவேளை இறைவன் நம்மிடம், “உனக்கு வேண்டும் பரிசு ஒன்றை கட்டாயம் என்னிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டே தீரவேண்டும்”, என்று சொன்னால், நாம் மறக்காமல் அவனிடம் கேட்க வேண்டிய பரிசு, “உன்னையே விரும்பும் மனமும், எப்போதும் நினைக்கும் சிந்தனையும், உன்னிடம் நீங்காத அன்பும் தருவாய்”, என்று கேட்கச் சொல்கிறார் மணிவாசகர். இந்த அறிவுரையை நமக்கு வழங்கிய திருவாசகம் இதுதான்:

வேண்டத் தக்கது அறிவோய்நீ; வேண்ட முழுதும் தருவோய்நீ!

வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ; வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீயாது அருள்செய்தாய்; யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன்தன் விருப்பன்றே!

(திருவாசகம்:33-6)

எவ்வளவு பொருத்தமான அறிவுரை என்று எண்ணிப் பாருங்கள்.

வேண்டத்தக்கது சிவமே

இத்திருவாசகத்தை நுட்பமாக கவனித்தால், "நான் வேண்டத்தக்கபொருள், மெய்ப்பொருளாகிய நீயே (அறிவோய்நீ); நான் வேண்டுவதால், உன்னையே முழுவதும் தருவாய் நீயே!" என்று மணிவாசகர் கேட்பது புரியும். வேறு எந்தப் பொருளும் மெய்ப்பொருளாகிய இறைவனுக்குச் சமமாகாது. ‘அவனையே’ தருமாறு நாம் வேண்டினால், எல்லையற்ற கருணையாளனான இறைவன் ‘ஞானப்பொருளான தன்னையே’ நமக்குத் தந்துவிடுவான். பிறகென்ன? அனைத்தும் நிகழ்ந்துவிடும் அல்லவா?

இப்படி, சிவத்தையே கேட்டுப்பெற்றுச் சிவமாகவே ஆனார் மணிவாசகர். இதை, தில்லையில் அருளிய கோயில் திருப்பதிகத்தில், அவர் திருவாக்காலேயே சொல்லிவிட்டு, இறைவனுக்கு ‘ஏமாளி’ என்று பட்டமும் சூட்டுகிறார் பெருமான்.

நெல்லைக் கொடுத்துப் பதரை வாங்கிய பித்தன்

இறைவனைப் பார்த்து, “எந்த வியாபாரத்திலும், கொடுப்பதும் வாங்குவதும் முறையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும். இறைவா! நான் உன்னிடம் ஒரு பண்டமாற்று வியாபாரத்துக்காக வந்தேன். என்னிடம் இருந்ததோ, என்னுடைய உயிர் குடிகொண்டிருந்த, இருள் திணிக்கப்பட்ட, கொடுமையான வல்வினைகள் குடிகொண்டிருந்த ஒரு வீடு;

அதாவது, என் பொத்தை ஊன்உடம்பு. உன்னிடம் இருப்பதோ, ஒளி பொருந்திய, வினைகள் தீண்டமுடியாத, பேரின்ப நிலைத்த முத்தி வீடு; நீ ஒரு சரியான ஏமாளி! நான் தந்த வல்வினைகள் குடிகொண்டிருந்த இருண்ட வீட்டை வாங்கிக்கொண்டு, உன்னுடைய ஒளிமயமான பேரின்ப வீடாகிய திருவடிகளை எனக்குச் சூட்டிவிட்டாய்! நம் இருவரில் யார் சாமர்த்தியசாலி? இந்த வணிகத்தில் நான் பெற்றதோ, முடிவில்லாத ஆனந்தம்! நீ என்னிடமிருந்து பெற்றது என்று ஏதும் உண்டா?

என் சிந்தையே கோயிலாகக் கொண்ட திருப்பெருந்துறையில் வாழும் எம் சிவபெருமானே! என் உடலையே உன் இருப்பிடமாகக் கொண்டதால், பேரின்ப வீடாகி விட்டது என்னுடல்! என் தந்தையே! ஈசனே! உன்னுடைய எல்லையற்ற இக்கருணைக்கு கைமாறாக உனக்குத் திருப்பிச் செய்ய என்னிடம் உருப்படியான பொருள் எதுவும் இல்லாமலிருக்கிறேன்!” என்றார் மணிவாசகர்.

‘நெல்லைக் கொடுத்துப் பதரை வாங்கிய பித்தனைப் போல் ஆகிவிட்டாய் நீ’ என்று இறைவனைப் பழிப்பதுபோலப் பாடி, இறைவனது பிரதிபலன் கருதாத, பெருங் கருணைப் பேரருளைப் போற்றிப் புகழ்கிறார் மணிவாசகப் பெருமான்.

இப்படி, லாபமே இல்லாத வணிகம் செய்யும் கருணை, இறைவனின் கருணை மட்டுமே ஆகும். இங்கு, மணிவாசகர் கேலி செய்வதுபோல் புகழ்ந்து பேசுவது, இறைவனுடைய எல்லையற்ற கருணையின் பெருமையைச் சொல்லித் துதித்து, நமக்கெல்லாம் வழிகாட்டவே என்பதை நினைவில் வைப்போம்.

நமக்கான திருவாசகம்

இப்படி, வேண்டத்தக்கது எது என்பதை இறைவனிடமே விட்டுவிடுவது நல்லது என்றாலும், மனசுதான் கேட்கமாட்டேன் என்கிறதே! நமக்கு மட்டுமல்ல, மணிவாசகருக்கும்தான். இப்படிப் பாடி, தாம் பெற்ற பெரும்பேற்றை நம்முடன் பகிர்ந்துகொண்ட பெருமான், நம் போன்றோர் இறைவனிடம் பேசும் வகையில், நமக்கான திருவாசகம் ஒன்றை, வடித்துத் தந்தார்; நம் எண்ணத்தை இறைவனிடம் பகிர்ந்துகொள்ளும் நமக்கான திருவாசகம் ஒன்றை இப்போது கேட்போம்.

“சிறப்பையே வடிவமாக உடைய எங்கள் சிவபிரானே! அழகான செந்தாமரை மலர் போன்ற அரிய உருவத்தையுடையனே! என்னருமை ஆரமுதே! இப்பூமியில் தோன்றுகிற பல்வேறு உடல் பிறவிகள் எனக்கு வாராமல் அறவே நீக்கி, நீ அருள வேண்டும். உன்னிடத்தில் நீங்காத பேரன்புப் பக்தியையும் நான் பெறவேண்டும். அப்படிப்பட்ட பேரன்புப் பக்திமைப் பண்பு, என்னிடம் நிலையாக இருக்க, உன்னடியவர்கள் கூட்டத்தின் நடுவில் இருக்கும் தகுதியை நான் பெறவேண்டும்; உன் அடியவர் கூட்டத்தில் இருக்கும் தகுதியைப் பெறுவதற்கு, ஈடு இணையற்ற, உன் திருவருளை நான் பெறவேண்டும். அத்தகைய ஒப்பற்ற வடிவமாகிய உன்னுடைய திருவருளைக் காட்டி அடியேனையும் ஆட்கொண்டு அருள்வாயாக”, என்று அற்புதமாகப் பாடினார் பெருமான்.

பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும்; பத்திமையும் பெற வேண்டும்;

சீர் உரு ஆய சிவபெருமானே, செம் கமல மலர் போல

ஆர் உரு ஆய என் ஆர் அமுதே, உன் அடியவர் தொகை நடுவே,

ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி, என்னையும் உய்யக்கொண்டருளே!

(திருவாசகம்:44.1)

இறைவன், அருளே வடிவமானவன் என்பதால், அதனை ‘ஓருருவாய நின் திருவருள்’ என்றார். பிறவி நீங்கப் பக்தியும், பக்தி உண்டாக அடியவர் கூட்டத்தில் இருப்பதுவும், அடியவர் கூட்டத்தில் இருப்பதற்கு இறைவன் அருளும் வேண்டும். இதனால், ‘அடியவர் கூட்டம்’ பிறவி நீங்குவதற்குரிய ‘கருவி’ என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார் மணிவாசகர்.

இறைவனுடன் பேசுவதற்கு எள்ளளவுத் தகுதிகூட தமக்கு இல்லை என்று வருந்தும் மனிதர்களும் இறைவனுடன் பேசுவதற்கு வழிகாட்டும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)
தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x