Last Updated : 29 Jun, 2017 10:16 AM

 

Published : 29 Jun 2017 10:16 AM
Last Updated : 29 Jun 2017 10:16 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 35: அன்பினில் விளைந்த ஆரமுதே

‘உடலும் மனமும் நலம் பெற யோகா செய்யுங்கள்’ என்ற சர்வதேச யோகா தினச் செய்தியைக் கண்டதும், ‘நலவாழ்வின் பயன்தான் என்ன?’, என்று கேட்டது மனம். ‘நலமாக வாழ்வதே பயன்தானே’ என்று பதில் கிடைத்தது. ‘வாழ்வின் பயன்தான் என்ன?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டது மனம். வாழ்வு என்றால், கற்பது, கற்றதைப் போல் நின்று வாழப் பயிற்சி பெறுவது, அதன்வழி தொடர்பயணம் செய்வதுமாகும்; வாழ்வின் பயன், உயிர் நலம் பெற்றுத் திருவடிப்பேறு (முழு விடுதலை) அடைவதுமாகும்.

பெற்ற பிள்ளைகள் செய்த தவறுகளைப் பெற்றவர்கள் மன்னிப்பார்கள். நம் எல்லோருக்கும் தாய் தந்தையான அம்மையப்பனோ, தன்னை நினைத்துக்கூடப் பார்க்காத மனிதர்களின் தவறுகளையும் மன்னித்து, எதையும் எதிர்பாராமல், தேவைப்படும் அனைத்தையும் தருகிறான். கருணையே வடிவான இறைவனுக்கு ஒப்பு யாருமில்லை என்பதை “அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!” என்கிறார் மணிவாசகர்.

அமுதினும் உயர்ந்த ஆரமுது

பாற்கடல் அமுதம் உண்டு பெற்ற நீண்ட ஆயுளும் ஒருநாள் முடிவுக்கு வந்து, தேவர்களும் மரணமடைவார்கள்; தேவர்களுக்குப் பாற்கடல் அமுதத்தைத் தந்துவிட்டு, கொடிய நஞ்சைத் தானுண்ட சிவபெருமானோ சாவா மூவா இறைவன்; என்றென்றும் இருந்து பேரின்பம் அருள்பவன் என்கிறது சிலப்பதிகாரம்.

விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும்

உண்ணாத நஞ்சுண்டு இருந்து அருள் செய்குவாய்.

(சிலப்பதிகாரம் : வேட்டுவவரி).

தன் திருவடிகளை வந்தடைந்த அடியவர்களுக்குப் பாற்கடல் அமுதினும் உயர்ந்த, அன்பினில் விளைந்த, அரிய அமுதாகிய மரணமில்லாப் பேரின்பப் பெருவாழ்வைத் தருகிறான் சிவபெருமான். ‘அன்பினில் விளைந்த ஆரமுதே!’ என்று இறைவனைப் பாடும் மணிவாசக வரி, இறைவனை அடைந்தால் மரணமில்லாப் பெருவாழ்வும் பேரானந்தமும் பெறலாம் என்ற தெளிவைத் தருகிறது.

முழுமைக் கல்வி

உலக வாழ்வு, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வாழ்வு என்ற இரு பகுதிகளைக் கொண்ட நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக அறக்கல்வி உள்ளது. உலக வாழ்வுக்குக் கைப்பொருள் (பணம்) சம்பாதிக்க வேண்டும்; பிறவிப் பயன் அடைய மெய்ப்பொருள் சம்பாதிக்க வேண்டும். இவ்விரண்டையும் தருவதே முழுமைக் கல்வியாகும்.

பொய்மையே பெருக்கி . . .

கல்வி என்றாலே பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே என்றாகிவிட்டது; இவ்வுலகில் மகிழ்ச்சியுடன் வாழ, குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோர் நலத்தைப் பேணுவதற்குப் பணம் அவசியம்தான். அந்தப் பணத்தைச் சம்பாதிக்கவும், சம்பாதித்ததைப் பொன்னாகவும், சொத்தாகவும், பணமாகவும் சேமித்துப் பாதுகாக்கவும், பொருட்களைப் பெருக்கவுமே வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவழித்துவிடுகிறோம்; அதனால் மெய்ப் பொருளைச் சம்பாதிக்க வேண்டிய காலம் சுருங்கிக்கொண்டே வருகிறது. ‘பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்’ என்று தம் நிலைமையை இறைவனிடம் சொல்லி வருந்துகிறார் மணிவாசகர்.

உடைந்த ஊசியைக்கூட இவ்வுலகத்திலிருந்து யாரும் எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும், தேவைக்கும் அதிகமாகப் பணம் சேர்த்து, தேவையுள்ள சகமனிதர்களுக்கு அவை கிடைக்கவிடாமல் பெரும்பாவம் செய்து, வாழ்நாளையும் வீணடித்துவிடுகிறோம். இறுதியில் பிறவிப் பயனை அடையாமலேயே இறக்கிறோம்.

பொய்ப் பொருட்களைப் பெருக்குவதிலேயே வாழ்நாளைக் கழித்துவிட்டு, இறைவனை அறியும் மெய்யறிவு பெறுவதற்கான பொழுதைச் சுருக்கிவிடும் செயலானது, தீவினைகள் பெருகி, பிறவிகளில் உழலும் கொடிய நரகத்தில் நம்மைத் தள்ளிவிடும்.

மெய்யறிவுக்குப் பயன்படாத ‘புழுத்தலை’

மனித உடலில் எப்போதும் இளமையாக இருப்பது மூளைதான். மனித மூளையின் படத்தைப் பார்த்தால், கொழுத்த புழுக்கள் பல, பின்னிக்கிடப்பதுபோல இருக்கும். இறைவனை அறியும் மெய்யறிவுக்குப் பயன்படுத்தப்படாத மூளை இருக்கும் தம் தலையை, பயனற்ற புழுக்களைக் கொண்ட ‘புழுத்தலை’ என்கிறார் மணிவாசகர். பொய்யறிவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அது புழுத்தலையாகிறது. ‘தலையில் என்ன களிமண்ணா இருக்கு?’ என்று தவறுசெய்த மாணவனைக் கடிந்துகொள்ளும் கணித ஆசிரியரைப் போல், வாழ்க்கைப் பாடத்தில் மெய்ப்பொருள் கணக்கை மொத்தமாகத் தொலைத்துவிட்ட நம் எல்லோருக்குமாகச் சேர்த்துத்தான் ‘புழுத்தலைப் புலையனேன் தனக்கு’ என்று தம்மையே நொந்துகொள்கிறார் மணிவாசகர்.

சிவபதம் அளிக்கும் செல்வம்

அத்தகைய புழுத்தலைப் புலையனாகக் கீழ்நிலையில் இருந்தாலும், அன்பினால் இறைவனைத் தொழுதால், அவன் நமக்கு மாற்றுக் குறையாத அருட்செல்வமாகிய செம்மையான சிவபதம் அருள்வான்; ‘செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே’, என்று இறைவனே உண்மையான செல்வம் என்கிறார் மணிவாசகர், “இவ்வுலகிலேயே உன்னை உறுதியாகச் சிக்கெனப் பற்றிக்கொண்டேன். நீ என்னைவிட்டு இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?” என்றார் இறைவனிடம் உறுதியாக. (‘இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! எங்கு எழுந்து அருளுவது இனியே!‘)

மனிதப் பிறவி என்னும் வாய்ப்பு இருக்கும்போதே, அன்பால் இறைவனைச் சிக்கெனப் பிடித்து, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வழி இது என்று நமக்குச் சொல்லித் தருகிறார்.

இறைவனைச் சிக்கெனப் பிடிப்போம்

நாம் இறைவனையே நினைக்காமல் இதுவரை இருந்துவிட்டாலும், ‘அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!’ என்று தொடங்கும் இத்திருவாசகத்தைப் பாடினால் சிவபதம் கிடைப்பது உறுதி என்று முழங்குகிறது, ‘செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே’ என்னும் வரி. நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; இப்பிறவியிலேயே அன்பினால் இறைவனைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டால், அவன் நம் இதயக்கோயிலிலேயே எழுந்தருளுவான். திருவாசகத்தின் ஆற்றல் அப்படி!

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்! எங்கு எழுந்து அருளுவது இனியே!

(திருவாசகம்:பிடித்த பத்து:3)

ஆற்றல்மிக்க அன்பால் இறைவனை அழைக்கும் இத்திருவாசகத்தைப்பாடி வாழ்வைப் பயனுள்ளதாக ஆக்குவோம்.

தன்னை அறிந்தால் சிவனை அறியலாம்

மெய்ப்பொருளை ஈட்டுவது, தன்னை அறிதல், சிவனை அறிதல், சிவனை அடைதல் என்னும் மூன்றுபடிகளில் நிகழும்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தான் இருந்தானே.

(திருமந்திரம் 2355).

தன்னை அறிதல் என்பது “உடல் அல்ல, மனம் அல்ல. தான் என்பது உயிர் !” என்று அறிவதும், எல்லையற்ற கருணைகொண்ட இறைவன் உயிர்களுக்குத் தந்த கருவிகளே இவ்வுலகமும், உடலும், மனமும் என்றும், சிவபதம் அடைவதே வாழ்வின் பயன் என்றும் அறிவதாகும். தன்னை அறியும் அறிவைப் பெற்றவன், தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான் என்கிறது திருமந்திரம். இனி, இறைவனிடம் நாம் வேண்டிப் பெற வேண்டிய பொருட்கள் எவை என்று கூறும் திருவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)
தொடர்புக்கு: krishnan@msuniv.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x