Last Updated : 15 Jun, 2017 09:55 AM

 

Published : 15 Jun 2017 09:55 AM
Last Updated : 15 Jun 2017 09:55 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 33: உன் சீர் புகழ்பாடி இன்புற்றிருப்பேன்

பதவி, பணம், பெரும் செல்வாக்கு, புகழ் ஆகியவற்றுடன் பவனிவந்த பாண்டியப் பேரரசின் முதலமைச்சரான திருவாதவூராரைக் கூவியழைத்துத் திருவடிப்பேறு தந்து, மணிவாசகராக்கினான் இறைவன். மெய்யடியவர்களுடன் கலந்து, இறையின்பச் சுவையை மனிதவுடலிலேயே பெற்று, இறைவனின் சீர்மையை அறிந்தும், உணர்ந்தும் உயிர் அனுபவம் அடைந்தார் மணிவாசகர்.

கல்வி-கேள்விகளில் கரைகண்டு, கவிபாடவும் வல்லமைகொண்ட மணிவாசகரின் திருவாக்கால் இவ்வனுபவத்தைத் திருவாசகத் தேனாக்கத் திருவுள்ளம் கொண்ட இறைவன், தன் சீர்பாடித் திளைத்திருந்த மணிவாசகரை, அச்சீர் மறக்கச் செய்தான்; மனிதவுடலிலேயே மணிவாசகரை இன்னும் சிலநாள் இருக்குமாறு பணித்தான்.

மனிதவுடலில் மீண்டும்

இந்நிகழ்வை, “மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்வூனே புக, என்தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்!”, என இறைவனிடமே தம்மை இவ்வுலகில் அலையச் செய்ததை முறையிடுகிறார்.

“தாங்க முடியாத இத்துயரை எனக்கு ஏன் தந்தாய் என்று உன்னைக் கேட்கமாட்டேன்! ஏன் தெரியுமா? உன் திருவடிப்பேறு பெறும் தகுதியோ அறிவோ உழைப்போ என்னிடம் இல்லை என்பது எனக்கே தெரியுமே! எதற்கும் உதவாத என்னை உன் பேரருளாலும், பெருங்கருணையாலும் உய்யக்கொண்டாய்; சிறிது காலம் உன் திருவடிப் பேறு அருளி, இறையின்ப விடுதலை நல்கினாய்! அதுவே, என் தகுதிக்கு மிகமிக அதிகம்! இப்போது, நீ என்னை, மனிதவுடலில் கிடந்து உழலுமாறு செய்தது, முற்றிலும் சரியானதே!”, என்றார் மணிவாசகர்.

உன் சீர்பாடும் நாள் எப்போது வரும்?

மீண்டும், இறைவனை நோக்கி, “என் தலைவனே! நான் தகுதியற்றவனே ஆனாலும், பெருமானே! முன்பு செய்ததுபோல, அடியேனுடைய அறியாமையை அறிந்து, மன்னித்து, நீயே அருள்செய்து, மறுபடியும் என்னைக் கூவியழைத்துப் பணிகொள்ளும் நாள் எப்போது என்று கூறுவாய்! அந்நாளை எண்ணி, உன் திருவடிகளைச் சிந்தித்து, உன் சீர்புகழ்பாடி இன்புற்றிருப்பேன்”, என்று அகம்குழைந்து வேண்டும் நமக்கான திருவாசகம்:

மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ்

ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்!;

ஆனால், அடி யேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து,

கோனே! கூவிக்கொள் ளும் நாள் என்று? என்று? உன்னைக் கூறுவதே! (திருவாசகம்:33-4)

இறைவன் திருவடிகளில் அவன் சீர்பாடும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எண்ணி ஏங்குகின்றார் மணிவாசகர். இத்திருவாசகத்தை ஒத்த அப்பர் பெருமானின் தனிப்பாடலொன்று இங்கு குறிப்பிடத்தகுந்தது.

உன்னை மறந்தும், உனக்கு நான் இனியனாய்...

"இறையவனே வாழ்க! உன்னை எப்போதும் நினைத்திருக்க என்னை நீ விடுவதில்லை! உறுதிகொண்டு உன்னையே எண்ணுவதற்கு நான் முயற்சித்தால், அப்போதே அவ்வெண்ணத்தை மறக்கச் செய்து, வேறொரு பொருளில் என் மனம் ஈடுபடுமாறு செய்கிறாய்! எப்போதாவதுதான் உன்னை நினைக்கிறேன்; இருந்தாலும், இனியவனாய், பல துன்பங்களிலிருந்தும் என்னைக் காக்கிறாய்! உன்னையே மறந்துவிட்டு, உனது அன்பினைப் பெறுகின்ற என்னைப்போல் எவரேனும் இருக்கின்றனரா என்பதை எனக்குச் சொல்வாய்!", என்றார் அப்பர்.

நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய்!, நீ; நினையப் புகில்,

பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;

உன்னை எப்போதும் மறந்திட்டு, உனக்கு இனிதா இருக்கும்

என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே! (தமிழ்மறை: 4.112.4)

இறைவனைத் தொடர்ந்து நினைக்காத குறையைப் பொருட்படுத்தாமல் அருள்பவன் இறைவன் என்கிறார் அப்பரடிகள். தன்னைத் தவிர, இறைவனின் அருளைப் பெறும் அனைவரும், இறைவனையே தொடர்ந்து நினைப்பதாகக் கூறுகிறார் அப்பர்பிரான்.

தீமை, நன்மை முழுவதும் இறைவனே!

பேசுகிற நாவாகவும், நினைக்கிற மனமாகவும் இறைவனே இருக்கிறான் என்கிறார் மணிவாசகர் “இறைவா!, பேசுகிற நாக்கு முதல், அந்நாவுக்குக் கட்டளைகூறும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் உள்ளிட்ட அகக் கருவிகள் அனைத்தும் நீயே! நினைக்கும் மனத்துக்குத் தெளிவும், திகைப்பும் தருபவனும் நீயே! மனதின் தெளிவால் விளையும் நன்மையாகவும், திகைப்பால் வரும் தீமையாகவும் இருப்பவனும் நீயே!” என்று கூறும் பெருமான், உண்மை இறைவனைப் பற்றி விரிவாகச் சொன்னால், அவனையன்றி வேறாய் நிற்கும் பொருள் எதுவுமில்லை என்கிறார். “சிவலோகநாதனே! உன்னையன்றி, தெளிவடையும் வழி எனக்கு ஏதுமில்லை! நான் திகைப்படைந்து கலங்கினால், என்னை நீ தேற்றித் தெளிவிக்க வேண்டாவோ?” என்று கசிந்துருகிக் கேட்கும் மணிவாசகரின் திருவாசகம் இதுதான்:

கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ!

தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ!

வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின்,

தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ? (திருவாசகம்: 33-5)

நம் பேச்சு, செயல் யாவும் இறைவன் தந்தது. நாம் ஒன்றை அறிவதும், அறியாமலிருப்பதும் (தேறும்வகை/திகைப்பு) அவனருளாலே நிகழ்வது. தீமை, நன்மை என்று நாம் ஏது செய்தாலும் இறைவனையே சென்றடையும்.

இறைவனுக்கு மேலாக, வேறாக எப்பொருளும் இல்லை!

மெய்ப்பொருளான இறைவனை, அவனது அருள்சக்தியை, முழுவதும் விரித்துச் சொன்னால் இறைவனைவிட மேலான, இறைவனுக்கு வேறாய் நிற்கும் தன்மை உள்ள பரிசுப்பொருள் என்று இங்கு எதுவும் இல்லை (மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின், வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை) என்றார் பெருமான்.

அத்தகைய மெய்ப்பொருளான இறைவனை, அவனது அருள்சக்தியை, எங்ஙனம் விரித்துச் சொல்ல? (தேறும் வகை என்?) அதைச் சொல்லும் வழிதெரியாமல் மணிவாசகர் திகைக்கிறார். இறைவனே எல்லாமாய் நிற்கும் தன்மையை எடுத்துக்கூறி, தம் திகைப்பை, மயக்கத்தை நீக்கித் தெளிவு தருமாறு வேண்டுகிறார் மணிவாசகர்.

நன்மை, தீமை அனைத்தும் இறைவனுக்கே போகும்!

இறைவன் அனைத்து உயிர்களுக்குமான பல்வகை உடல்களைப் படைத்து, அனைத்து உயிர்களின் உள் உறைந்தும் இருக்கிறார். எனவே, நாம் சக மனிதர்களுக்குச் செய்யும் நன்மை, தீமை அனைத்தும் இறைவனுக்கே போய்ச் சேருகின்றன. இதை அறிந்துகொண்டால் மனிதர்கள் எவ்விதத் தீமையையும் செய்யத் துணிய மாட்டார்கள்!

பித்தனைப் போலேகைப்பிரம்பாலே பட்ட அடி!

வந்தியின் கூலியாளாய், பித்தனைப் போல் பிட்டுக்கு மண்சுமந்த இறைவன் முதுகில், பாண்டிய மன்னன் கைப்பிரம்பாலே பட்ட அடி, மன்னன், மணிவாசகர் உள்ளிட்ட மக்களனைவரின் முதுகிலும் விழுந்ததைக் கண்ட பட்டறிவால் மணிவாசகர் இதைச் சொல்கிறார். இறைவன் எங்கும் நிறைந்துள்ளதால் இது நிகழ்ந்தது. இன்றைய உலகில் இறைவனின் திருப்பெயரால் சிலர் நிகழ்த்தும் கொடுஞ்செயல்களை முக்காலமும் உணர்ந்த மணிவாசகர் கண்டுகொண்டே, அற்புதமான இத்திருவாசகத்தை நமக்கு அருளியுள்ளார். பேச வாயும், செயலாற்றக் கை,கால்களையும், வழிநடத்த அறிவையும் தந்த இறைவனே, அறிவு எழுப்பும் குழப்பங்களையும் நீக்கியருள வேண்டும் என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர்!

முரண்பாடுகளில் முழுமுதற் கடவுளைக் காணும் நுட்பம்!

மணிவாசகப் பெருமான் நமக்குத் தந்த பெருங்கொடைகளுள் ஒன்று, முரண்பாடுகளில் முழுமுதல் இறைவனைக் கண்டுகொள்வது எப்படி என்னும் நுட்பமே! திருவாசகமெங்கும் இந்த நுட்பம் திகழக் காணலாம்.

இறைவனுக்கு எதிரானதீய சக்தியின் இருப்பு

‘இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்தவன்’ என்ற உண்மைக்கு முரண்பாடாக, அத்தகைய கருதுகோள் அமைந்துவிடும் அபாயத்தை மிக எளிதாகக் கடக்கவும், முழு முதற்கடவுளைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் திருவாசகம் நமக்கு உதவுகிறது.

முரண்பாடுகளில் முழுமுதலாம் இறைவனைக் கண்டுகொள்வதும், களிப்பதும் சைவ அருளாளர்களின் இறைவழிபாட்டில் நாம் காணும் தனிச்சிறப்பு! தமிழ் மறைகள் நெடுகிலும் இதைக் காணலாம், நாம் முரண்களாகக் கருதும் பொய்/மெய், குற்றம்/குணம், நன்மை/தீமை, பகை/நட்பு ஆகியன இறைவனைப் பொறுத்தமட்டில், ஒன்றையே சுட்டுகின்றன என்பதே மணிவாசகரின் பட்டறிவால் விளைந்த திருவாசகம் தரும் செய்தி! இச்செய்தியைக் கூறும் மற்ற தேன்வாசக விளக்கங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

(வாசகம் தொடரும்)
தொடர்புக்கு: krishnan@msuniv.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x