Last Updated : 25 May, 2017 09:43 AM

 

Published : 25 May 2017 09:43 AM
Last Updated : 25 May 2017 09:43 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 30: சிவபூசைக்கான சிறந்த மலர்!

சிவபூசை வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கும் படையல்களில் இறைவனுக்கு மிகவும் உகந்த மலர் நம் இதயத்தாமரையே! மூடாமல் மலர்ந்திருப்பதால்தான் மலர் என்கிறோம். இதயமாகிய தாமரை, அர்ப்பணிப்பு உணர்வால் இறைப்பணியில் முழுமையாக மலர்ந்து, தன் உயிரையே இறைவனுக்குப் படையலாக்குவதை ‘ஆத்தும நிவேதனம்’ என்று வடமொழியில் வழங்குவர்.

பெற்றோரைக் காணாத சிறு குழந்தை, மழலை மொழியில், “அம்மே! அப்பா!” என்று அகம் குழைந்து அழுதால், நம் மனம் குழைந்து பதைத்தோடி வந்து, குழந்தையைத் தாவி அணைத்து ஆரத்தழுவி நிற்போம் அல்லவா? இங்கு, நம்மைக் குழைத்து உருக்கியது, குழந்தையின் மழலை மொழி.

ஆற்றல்மிக்க அன்பை உருவாக்கும் வழி!

திருப்பெருந்துறையில் இறைவனின் திருவடி தீண்டப்பெற்று, இறையனுபவம் பெற்ற மணிவாசகர், அம்மையப்பனைக் காணாது, அகங்குழைந்து, பெரிதும் பணிந்த மொழிகளால் பாடிய பதிகம் குழைத்த பத்து. இப்பத்து மணிவாசக மொழிகளையும் கேட்ட இறைவன், திருவுள்ளம் குழைந்து, ஓடி வந்து அருளினான். இப்பாடல்களை மனமுருகிப் பாடி வேண்டுவோருக்கு, நொடிப் பொழுதில் திருவுள்ளம் குழைந்து இறைவன் அருள்வான் என்பதால் சான்றோர்கள் இப்பதிகத்துக்குக் ‘குழைத்த பத்து’ என்ற பெயரிட்டு, ‘ஆத்தும நிவேதனம்’ என்னும் உட்குறிப்பும் தந்தனர்.

இங்கு, ஆத்தும நிவேதனம் என்பது, நம்மிடம் உள்ள `யான்’ என்னும் அகங்காரத்தைச் சமைத்து அன்பாக்கி, இறைவனுக்குப் படைத்தலாகும். வாயிலார் நாயனார் தமது மன வழிபாட்டில் செய்தது இதுவே. ஒரு பாடலின் முடிவு, அடுத்த பாடலின் தொடக்கமாக இருப்பதால் இப்பதிகம் அந்தாதியாய் உள்ளது. முதலிலும், முடிவிலும், `குழைத்தல்’ என்னும் சொல் வருவதால், `குழைத்த பத்து ’ என்பது மிகவும் பொருத்தமான பெயரே!

துன்பத்திலிருந்து மீட்கும் குழைத்தபத்து!

‘குழைத்தல்’ என்பதற்கு ‘வாடச்செய்தல்’ என்றும் ஒரு பொருள் உண்டு. திருவாசகம் அருளும் பொருட்டு மணிவாசகரை, இறைவன் உலகத்தில் இருந்து வாடச்செய்ததைக் கூறும் பதிகமாதலால், குழைத்த பத்து என்றும் சிலர் கூறுவர். நம்மைத் துன்பத்திலிருந்து மீட்கும் வல்லமை கொண்ட பதிகம் இது.

உடையவனே! கொடுவினையிலிருந்து காத்தருள்க!

முதல் பாடலில், “என்னை உடையவனே! வாட்டி வதைக்கும் என்னுடைய பழைய கொடுவினைகளின் கொடுமையிலிருந்து என்னைக் காத்தருள்வாய்! எனதுஅன்னை உமையவளின் மணவாளனே! என்னை ஆள்பவனே! கொடுவினையேனாகிய நான் உழைத்தாலும் கொடுவினைப்பயன்களிலிருந்து உறுதியாக விடுபட இயலாது என்பது நீ அறியாததா? பிறைநிலவைச் சடையில் சூடிக்கொண்டவனே! உன்னுடைய உடமையான நான் பிழைசெய்தால் பொறுத்தருள வேண்டாமா? என் அம்மானே! முறையோ என்று உன்னை ஓலமிட்டு அழைத்தும், அருளாமல் மறைந்துபோவது உனக்கு அழகாகுமா? உன் அடியவனான நான் எங்கு செல்வேன்?”, என்று கரைந்துஉருகி நிற்கின்றார் மணிவாசகர்.

குழைத்தால், பண்டைக் கொடுவினை நோய், காவாய்! உடையாய்!; கொடுவினையேன்

உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்!

பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ?

`பிறை சேர் சடையாய்! ‘முறையோ?' என்று

அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே! உன் அடியேற்கே?

(திருவாசகம்-33:1)

இறைவனிடம் சரணடைந்து நம்மை ஒப்புவித்துவிட்டால், நாம் இறைவனின் உடைமை ஆகிவிடுவோம்! இறைவன் நம்மை உடையவன் ஆவான்!

சரணாகதியின் சக்தி!

உடைமைகளைப் பாதுகாப்பது உடையவனின் கடமை! முன்செய்த கொடுவினைகள் வாட்டினால், நம்மைக் காக்க வேண்டிய கடமை, நம்மை உடையவனான இறைவனுடையதாகும். “உடையாய்!” என்னும் ஆற்றல்மிக்க திருவார்த்தையைக் கொண்டது இம்மணிவாசகத்தின் முதல் வரி.

நம்மைக் காக்கும் உமையன்னையின் அருள்!

“செய்த கொடுவினைப் பயனை அனுபவிப்பதற்கே இவ்வுடல் பிறவி! இன்னும் துய்க்க வேண்டிய பழவினைகளுடன், இப்பிறவியில், ‘நான்’ என்னும் உணர்வால் உழைத்துச்செய்த புதுவினைகளும் சேர்ந்து, மீண்டும், மீண்டும் பிறவிகளைத் தரும்; எனவே, உழைத்தால் பிறவி நீக்கம் கிடைப்பது உறுதியில்லை! எனையாளும் இறைவா! உன் திருவடிகள் மட்டுமே எனது பிறவி நோயை நீக்கும் அருமருந்து! கருணையே வடிவான எனதன்னை உமையாள் என்பொருட்டு உன்னிடம் எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பாள்!” என்ற உட்குறிப்பைச் சொல்லும் இரண்டாம் வரி அருள்வாசகம்.

உலகியலில், தாயே, தவறுசெய்த மகனை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு தன் கணவனிடம் பரிந்துரைப்பதைக் காணுகின்றோம். இங்கு, நமக்குப் பரிந்துரை செய்ய, அன்னை உமையம்மை உண்டு என்கின்றார் மணிவாசகர். இறைவனருள் மட்டுமே பிறவியை நீக்கி, வீடு பேறு தரவல்லது என்பது இவ்வரியின் உட்குறிப்பு.

பிழை பொறுக்கும் பேரருளாளன்!

மூன்றாவது வரி சொல்லும் செய்தி இன்னும் சிறப்புமிக்கது.. ‘பிறைசேர் சடையாய்!, பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ? ’ என்று கேட்கும் மணிவாசகம், இறைவன் தனது மெய்யடியார்கள் செய்த பிழைகளை மன்னிக்கும் பேரருளாளன் என்பதைச் சொல்லும் அற்புதமான இடமாகும்.

சந்திரனை மன்னித்துத் தலையில் சூடிக்கொண்டவன்!

இவ்வுலகில் மனிதர்கள் செய்யும் பிழைகள், உடல்பொறி-புலன்கள் தூண்டுவதால் நிகழ்வன. மனிதர்களைவிட பல மடங்கு உயர்ந்த சந்திரதேவன், தன் தலைவன் இறைவனை அவமானப்படுத்தியவன் என்று தெரிந்தும், தக்கன் வேள்வியில் பங்கெடுத்தது மன்னிக்க முடியாத குற்றம். அத்தகைய சந்திரனையே மன்னித்து, எப்போதும் தன்னுடன் இருக்குமாறு தன் தலையில் இறைவன் சூடிக்கொண்டதைப் ‘பிறைசேர் சடையாய்’ என்று குறித்தார். “தாழ்ந்தநிலை மனிதனான என் பிழையை நீ பொறுத்து அருள வேண்டாமோ?” என்று உரிமையுடன் இறைவனிடம் வேண்டும் வரி, மனிதனுக்குத் தன் தவறை மன்னிக்குமாறு இறைவனை அணுக நம்பிக்கை தரும் மணிவாசகம்.

உன்னைவிட்டால் எங்கு செல்வேன் இறைவா!

“இவ்வாறெல்லாம் உன் அடியவனான நான் அழைத்தும், நீ அருளாமல் செல்வது என் அம்மையப்பனாகிய உனக்கு அழகோ! எனக்கு உன்னை விட்டால் போக்கிடம் ஏது?”, என்ற பொருள் தரும் கடைசி வரி இறைவனின் உள்ளத்தைக் குழைத்து அருள் சுரக்கச் செய்யும் ஆற்றல் மிக்க வாசகம்.

நாம் என்ன தவறு செய்தாலும் இறைவன் மன்னிப்பான்; எனவே, மன்னிப்புக் கேட்டுவிட்டு, மீண்டும் தவறு செய்யலாம் என்று இத்திருவாசகத்துக்குப் பிழையாகப் பொருள் கொள்ளக் கூடாது. இறைவனிடம் சரணடைவதே நாம் மீண்டும் பிழை செய்யாமல் இருக்கத்தான் என்பதைத் தெளிவாக்கும் சுந்தரரின் திருவாரூர் திருமுறை முதல் திருப்பாட்டு இங்கு குறிப்பிடத்தக்கது.

தவறு செய்யாமல் காப்பான் இறைவன்!

“இறைவன், இவ்வுலகில் வாழத் தேவையான செல்வமும்(பொன்னும்) நிலைத்த மெய்ப்பொருளான அவன் திருவடிகளை அடைவதற்கான மெய்யுணர்வையும் தருபவன்; செல்வத்தினால் கிடைக்கும் உலகின்பத்தையும், மெய்ப்பொருள்-விளக்கத்தால் கிடைக்கும் வீடு பேறையும் ஒன்றாக இணைப்பவன்; உலகின்பங்களை நுகரும்பொழுது நான் செய்கின்ற பிழைகளைப் பொறுத்துக் கொள்பவன்; அவனைச் சரணடைந்த பின், என் செயல்களிலெல்லாம் பிழைகளே வாராமல் தவிர்க்குமாறு என்னைப் பணித்து அருள்பவன்; இன்ன தன்மையை உடையவன் என்று அறிய முடியாதவனான எம்பெருமான், அடியவர்க்கு எளியவன்; இவ்வளவு பெருமைபெற்ற, அன்னப் பறவைகளுக்கு வாழ்விடம் தரும் வயல் பண்ணைகளையுடைய, அழகிய திருவாரூர் இறைவனை என்னால் எப்படி மறக்க இயலும்?” என்று வினவுகிறார் சுந்தரர்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை! போகமும் திருவும் புணர்ப்பானை!

பின்னை என் பிழையைப் பொறுப்பானை! பிழை எலாம் தவிரப் பணிப்பானை!

இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை!

அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே?

- திருமறை: 7.59.1

உலக இன்பத்தை நுகரும் மனிதன் செய்யும் பிழை, இறைவனை மறந்து, இவ்வுலகப் பொருள்களிலேயே நாட்டம் கொள்வதாகும். வீட்டின்பத்தை மனிதன் நுகரும்பொழுதும்கூட, பழைய பழக்கத்தால், மனம் சிற்றின்பத்தையே நாடும் பிழையைச் செய்யும்; இறைவனைச் சரணடைந்த தன் அடியார்க்கு, இப்பிழை வராமல் இறைவன் தவிர்த்து அருளுவான் என்று (இங்கு குறிப்பிட்ட) திருவாசகத்துக்குச் சரியான விளக்கமாகிறது சுந்தரர் தேவாரம்.

மெய்யறிவு அருளவே, இறைவன் உடல் பிறவி தந்தான். ஆனால் தீமை தரும்(செடிசேர்) உடலை ஏன் இன்னும் சிதைக்கவில்லை என்று இறைவனிடம் கேட்கும் மணிவாசகத்தின் உண்மைப் பொருளை அடுத்த வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x