Last Updated : 18 May, 2017 11:04 AM

 

Published : 18 May 2017 11:04 AM
Last Updated : 18 May 2017 11:04 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 29: நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

அறுநூற்றி ஐம்பத்தியெட்டுப் பாடல்களை ஐம்பத்தியொரு பதிகங்களில் கொண்டது திருவாசகம். ஊனையும், உயிரையும் உருக்கும் திருவாசகத்தின் முப்பது பதிகங்களில், அறுபத்தியெட்டு இடங்களில், நாயேன், நாயடியேன், என நாய்க்கு இணையாக, நாயினும் கீழாகப் பாவித்துப் பாடப்பட்ட திருவாசகப் பாடல்கள் அறுபத்திஒன்று உள்ளன. “மனமறிந்து தவறோ, யாருக்கும் தீங்கோ, செய்ததில்லை. ‘நாயேன்' என்ற சொல் வரும் திருவாசகங்களைப் பாட, மனம் சஞ்சலப்படுகிறது” என்னும் அன்பர்களின் ஐயம் குறித்து இக்கட்டுரையில் சிந்திக்கலாம்.

கருணையுள்ளம்!

மக்களிடம் பரவலாகக் காணும் இழிகுணங்களான நோய்களை, உயிர்களிடத்து அன்புடைய, அறிவார்ந்த பெரியோர்கள் எவ்வாறு காணுவார்கள் என்று திருக்குறள் சொல்வதைக் காண்போம். “அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.” (குறள் 315) “பிற உயிர்களின் நோய் தமக்கே வந்ததாக எண்ணாவிட்டால் அறிவைப் பெற்றதால் என்ன பயன்?”, என்ற வினாவை முன்வைக்கிறது இக்குறள். அறிவின் அடையாளமாக இங்கு காட்டப்படுவது கருணையான தன்வேதனையே (empathy), பரிதாபம் (sympathy) அன்று. அனைத்து உயிர்களிடத்தும் அன்புசெலுத்தும் அறிவுடைய இறையன்பர்கள், பிற உயிரின் மனம் சார்ந்த இழிகுணங்கள், உடல் துன்பங்கள் முதலிய நோய்கள் தமக்கே வந்ததாக எண்ணுவர்.

இக்குறளை, அரசியல்-அறிவுடைமை அதிகாரத்தில் வைக்காமல், துறவறம்-இன்னாசெய்யாமை அதிகாரத்தில் வைத்தது ஊன்றிக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. முதலமைச்சர் வாதவூரருக்கு, “கொலையாளியை வேந்தன் தண்டித்தல், களையெடுப்பதற்குச் சமம்”, எனத் திருக்குறள்-550 கூறும் அரசியல் அறமே அறம்.

அருளாளரான மணிவாசகருக்கு (வாதவூரர்), மனிதர்களின் இழிகுணங்களைத் தனதாகக் கொண்டு பாடும் கருணை இயல்பானது என்று தெளிவோம். இறையருள் வேண்டும் நாமும், கருணையுள்ளத்தோடு, எவ்விதத் தயக்கமும் இல்லாமல், மகிழ்வுடன் அத்தகைய திருவாசகங்களை ஓதி இறைவனருளைப் பெறுவோம்.

குறிக்கோள் இன்றி அலைவதில் மனிதர்கள் நாய்க்கு இணையானவர்கள் என்பதால் ‘நாயே அனைய நம்மையெல்லாம்’, ‘நாயேன்’ என்று பாடியுள்ளார் மணிவாசகர். இனி, ‘நாயினும் கடையேன்’ என்று மணிவாசகர் கூறுவதால், பல மனிதர்களிடம் இல்லாத, நாயிடம் மட்டுமே சிறப்பாகக் காணப்படும் சில குணங்களைப் பற்றி, பெருஞ்சொல் விளக்கனார் அ.மு.சரவணமுதலியார், வாரியார் சுவாமிகள், பண்டிதமணி கதிரேசச்செட்டியார் உள்ளிட்ட அறிஞர்கள் கூறியவற்றை இங்கு சிந்திப்போம்.

தலைவனை அடையாளம் காணும் குணம்

மாபெருங்கூட்டத்திலும், எங்கோ அமர்ந்திருக்கும் தன் தலைவனைச் சரியாக அடையாளம் கண்டுகொள்ளும் தன்மை நாய்க்கு உண்டு. மனிதப் பிறப்பே, தலைவனாம் இறைவனை அறிவதற்கும், இறைவனிடம் இரண்டறக் கலந்து முக்திப் பேரின்பம் பெறுவதற்குமானது. ஆனால், இறைவனைப் பற்றிய சிந்தனை துளிக்கூட இல்லாத மனிதர்களே (agnost) உலகில் அதிகம். இறைவனை அடையாளம் காணும் தேவையே இவர்களுக்கு வருவதில்லை.

இறைவன் இல்லை என்றும், நானே தலைவன் என்றும், பணம் படைத்தவனைத் தலைவன் என்றும், இறைவனுக்குரிய குணங்கள் இல்லாதவரைத் தலைவன் என்றும், “இறைவன் இருக்கலாம்; ஆனால், அந்தத் தலைவனை யாருக்கும் தெரியாது”, என்றும், பல நிலைகளில், தலைவனை அறியாத மனிதர்கள் உள்ளனர்.

. . . யான் யாவரினும் கடையன் ஆய

நாயினேன்! ஆதலையும் நோக்கிக் கண்டு!

நாதனே! நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்!

ஆயினேன்! ஆதலால் ஆண்டுகொண்டாய்!

(திருவாசகம்-5:23)

தலைவனை அடையாளம் காணவியலாத, நாயினும் கடையனான தம்மை, இறையன்பன் என்று ஆனதாலேயே ஆண்டு அருளினான் என்னும் ‘நமக்கான மணிவாசகம்’ இது.

செய்நன்றி பாராட்டும் பெருங்குணம்

எப்போதோ ஒரு நேரம் உணவிட்டவனை, தன் வாழ்நாள் முழுவதும், எங்கு பார்த்தாலும் அடையாளம் கண்டு, வாலைக் குழைத்துத் தன் நன்றியைத் தெரிவிக்கும் இயல்புடையது நாய். அறியாமை என்னும் இருளில், அறிவற்ற குருடர்களாய்க் கிடந்த உயிர்களுக்கு, பொறிபுலன் கருவிகளுடனான உடல்களைத் தந்து, வாழ இவ்வுலகம் தந்து, காத்து, அவ்வுயிர்களுடன் ஒன்றாக வாழ்பவன் இறைவன்;

உயிர்களுக்குப் பொருட்களை அறியுமாறு அறிவிப்பதற்காக, உயிர்களை விட்டு வேறாகக் காணப்படுபவன் இறைவன். அறிந்த பொருட்களை, அறிந்தபடியே நுகர்விப்பதற்காக, உயிர்களின் உடனாகவும் நிற்பவன் இறைவன். இவ்வாறு, உயிர்களின் அறிவுப் பயணத்தின் ஒவ்வொரு நொடியிலும், அசைவிலும், பயன் கருதாமல், உணவு முதல் அனைத்தும் படைத்து, காத்து, அருளும் இறைவனின் கருணைக்கு நன்றி செலுத்தும் கடமை, ஆறறிவு பெற்ற மனிதனுக்கே அதிகம் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மனிதர்கள் இறைவனுக்கு அவ்விதம் நன்றி செலுத்துவது இல்லை.

செய்நன்றி செலுத்துவதில் மனிதர்கள் நாயினும் கடைநிலையில் இருக்கிறார்கள். இமைப்பொழுதும் என் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க! என்னும் மணிவாசகம் ஓதி, இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்..

தலைவனின் கட்டளையை உடனே ஏற்றுச் செயலாற்றுதல்

தன் உயிரே போகும் ஆபத்தான வேலையாக இருந்தாலும், தலைவன் கட்டளையிட்டால், அவ்வேலையில் உடனே இறங்கும் பண்பு கொண்டது நாய். இறைவன், மனிதர்களை நெறிப்படுத்தத் தன் திருவருள் பெற்ற அருளாளர்கள் மூலம், அற நூல்களையும், அறிவு நூல்களையும் அருளி, இரண்டு கடமைகளைச் செய்யப் பணித்தான்.

முதலாவது, அற நூல்களில் கூறியபடி, இன்முகம், நல்மொழி, தூய உள்ளம், நடுவுநிலை, நன்றியுடைமை, அடக்கம், தவறாத ஒழுக்கம் ஆகியன கடைப்பிடித்து அற நெறியில் வாழ்தல்; பிறன்மனை நோக்காது, ஒருவனுக்கு ஒருத்தி என்னும் இல்லறக் கடமை தவறாமல், நன்மக்களைப் பெற்று, அன்பால் விருந்தோம்பி, வறியவர்க்கு ஈகை, தொண்டுகள் செய்து, இறைவனின் கருணைக்குப் பாத்திரமாக வேண்டும். இரண்டாவது, அறிவு நூல்களில் விளக்கப்பட்ட, உயிர்களின் அறிவை மறைக்கும் மும்மலத்தின் தன்மை, உயிர்களின் இயல்பு, இறைவனின் தன்மை போன்றவை அறிந்து, இறையருள் பெற்று முத்திபெற வேண்டும்.

எளிதாகச் செய்ய முடிந்த இவ்விரண்டு கடமைகளையும் செய்யாத மனிதர்களே அதிகம். நாய் செய்து முடிக்கும் பணியின் பலனைஅடைவது நாயின் தலைவனே! ஆனால், மனிதனுக்கு இறைவன் இடும் பணியின் பலனை அடைவது மனிதனே! இறைவனல்லன்! இருந்தும், தனது நன்மைக்காகத் தலைவனிட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாத மனிதர்களே அதிகம்; தலைவனின் கட்டளை எதுவாயினும் தலைமேற்கொள்ளும் நாயுடன் ஒப்பு நோக்கினால், மனிதன் நாயினும் மிகக் கீழானவன்.

தலைவனிடம் கொள்ளும் அசைக்க முடியாத பற்று-நம்பிக்கை!

தலைவனிடம் காட்டும் அசைக்க முடியாத பற்று-நம்பிக்கை நாய்க்கே உரியது. ரத்தம் வரக் கொடுமையாக அடித்தாலும், கோபப்படாமல், வாலைக் குழைத்துத் தலைவனின் கருணையை நோக்கி அமைதியாக நிற்கும் நாய்.இறை நம்பிக்கை கொண்ட மனிதர்களில் பலரும், தமக்கு நேர்ந்த துன்பம், தாம் முன்செய்த தீவினைப்பயன் என்பதை மறந்து, “பாழாய்ப்போன இரக்கமற்ற கடவுளே! உனக்குக் கண்ணில்லையா!”, என்று பழித்து, நம்பிக்கையற்று, ‘கடவுள் இல்லை’ என்ற முடிவுக்கும் வந்துவிடுகின்றனர்.

பற்று-நம்பிக்கையிலும் மனிதன் நாயைவிடக் கீழானவனாகிறான்.

எந்தச் செயலையும் காரணத்துடன் செய்யும் இயல்பு!

நாய் எந்தச் செயலையும் காரணத்துடனேயே செய்யும். எடுத்துக்காட்டாக, கல்லால் அடிபட்ட நாய், தன்மேல் பட்டுக் காயம் உண்டாக்கிய கல்லைக் கடிக்காமல், கல்லை எறிந்தவன்மேல் பாய்ந்து கடிக்கும்.

எய்தவன் இருக்க, அம்பை நோகும் மனிதனோ, கல்லில் மோதிவிட்டு, கல் தன்னை இடித்ததாகக் கூறுவான்; இதுபோலவே, தன்னுடைய முன்வினைப் பயனால் தனக்கு வந்த துன்பத்திற்கு, பிறரைக் குற்றம் கூறுவான்.

காரணம் காணும் தன்மையில், மனிதன் நாயினும் கடையவன்.

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே (திருவாசகம்-1:60-61)

என நாயினும் கடைப்பட்ட நமக்கெல்லாம் தாயினும் சிறந்த கருணையை வாரி வழங்கும் இறைவனின் அருளைத் தரும் திருவாசகத்தை உள்ளம் ஒன்றி ஓதி உயர்வோம். நம் உயிரையே குழைத்து இறைவனுக்கு நிவேதனமாகப் படைக்க உதவும் திருவாசகத் தேனை வரும் வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x