Last Updated : 06 Apr, 2017 09:36 AM

 

Published : 06 Apr 2017 09:36 AM
Last Updated : 06 Apr 2017 09:36 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 24: தில்லை அம்பலத்தே கண்டேனே

“மனிதன் அல்லாத உயிரினங்களுக்கு ஏன் ‘மனம்’ இல்லை என்றீர்கள்? நாய் மகிழ்ச்சியில் வாலைக் குழைக்கிறது; பயத்தில் வாலைக் கால்களுக்கிடையில் புதைக்கிறது; கோபத்தில் வாலை நிமிர்த்திக் குரைக்கிறது; நாய்க்கு மனம் இருப்பதால்தானே இவ்வளவும் சாத்தியம்”. என்று சில அன்பர்கள் வினவினர்.

விலங்குகளுக்கு ஏன் ‘மனம்’ இல்லை?

ஐந்து பொறி-புலன்கள் வழியாக உள்ளே வரும் தகவல்களைப் பெற்று (Input), ஏற்கனவே புத்தி என்னும் மூளைப்பதிவில் (Memory) உள்ள தகவல்களின் அடிப்படையில் நல்லது, கெட்டது, இது-இன்னது, செய், நட, பேசு (OutPut) என்று தீர்மானிக்கும் கருவியே(Processing-CPU) ‘மனம்' என்றால், அத்தகைய ‘கணினி' போன்ற மனம் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு என்று சொல்லிவிடலாம்.

தொல்காப்பியர் சொல்லும் ‘மனம்' என்பது - மேற்கூறிய செயல்களுடன், மனமே ஒரு அறி-புலனாகவும் (Input), ஒரு சிந்திக்கும் பொறியாகவும், சிந்தனையில் கிடைத்த தகவலை மீள்-புலனாகப் (FeedBack Input) பயன்படுத்தும் செயல் அமைப்பாகவும், மனிதன் செய்யும் வினைகளுக்குச் சாட்சியாகவும் (மனசாட்சி) இருந்து, செய்தது சரி/சரியன்று என்ற உணர்வையும் தருவது; இத்தகைய மனம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

மற்ற உயிரினங்கள், வாழ்க்கைக்கு நேரடியாக சம்பந்தப்படாத எதைக் குறித்தும் சிந்திப்பதில்லை. விலங்குகள் பசித்தால் இரைதேடும்; களைப் புற்றால் உறங்கும்; முழுவதும் புறஉணர்வு களைச் சார்ந்தே உயிரினங்களின் செயலும், அறிவும் அமைகின்றன. விலங்குகளின் செயல்களுக்கு நேரடியான காரணம் மட்டுமே இருக்கும். என்னதான் புத்திசாலித்தனமான உயிரினமாக இருந்தாலும், அதன் எல்லை மிகக் குறுகியது.

செயலும் வினையும்

செயலுக்கும் வினைக்கும் உள்ள வேறுபாட்டை அறிவோம். செயல் என்பது தானாகவோ, பசி, தாகம் போன்ற இயற்கை உந்துசக்திகளால் ஏவப்பட்டோ செய்யப்படுபவை. வினை என்பது ‘நான் செய்கிறேன்' என்ற உணர்வுடன் செய்யப்படுபவை.

இதயம் இயங்குவது, சுவாசிப்பது, உறங்குவது, உண்பது, காண்பது போன்றவை அனைத்து உயிரினங்களும் செய்யும் செயல்கள். விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் தங்கள் வாழ்நாளில் செயல்கள் மட்டுமே செய்கின்றன; வினைகள் செய்வதில்லை. ஒரு புலி தன் உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகிறது. அது பசியால் தூண்டப்பட்ட ஒரு செயல்; அவ்வளவுதான். அதே புலி, நான்கு தலைமுறைக்கும் சேர்த்து வேட்டையாடினால் வினை செய்கிறது என்று சொல்லலாம்.

பிறப்பை நீக்கிய இறைவன்

“வினையினால் உண்டாகிய பிறவியாகிய துன்பத்தில் சிக்கி, இறைவனாகிய உன்னைச் சற்றும் நினையாமலேயே தளர்வடைந்து இருக்கும் என்னை, மிகப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறவித்தளையை நீக்கிய ஒப்பிலாப் பெருமானை, எல்லா உலகங்களும் வணங்குகின்ற தில்லையம்பலத்தில் கண்டேன்’ என்றார் மணிவாசகர்.

‘வினைப்பிறவி’ என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

தனை சிறிதும் நினையாதே, தளர்வு எய்திக் கிடப்பேனை!

எனைப்பெரிதும் ஆட்கொண்டு, என் பிறப்பு அறுத்த இணை இலியை,

அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே!

( திருவாசகம்:கண்டபத்து:2)

வினையினால் வந்த பிறப்பையும், முன்வினைகளையும் மணிவாசகருக்கு, இறைவன் குருவாய் வந்து நீக்கியருளினான். வினை உள்ளபோது, இறைவனை அறியும் அறிவு இல்லை. வினை நீங்கியபோது, இறைவனை அறியும் அறிவு விளங்கிற்று.

வாதவூரரும் மாணிக்கவாசகரும்

முதலமைச்சர் வாதவூரருக்கும், இறைவன் சிவமாக்கி ஆட்கொண்ட மணிவாசகருக்கும் இடையில் ஒற்றுமை, வேற்றுமைகளைப் பார்ப்போம். உடல் இருவருக்கும் ஒன்றே! வாதவூரரின் கருவி-கரணங்கள் (பொறி-புலன்கள்) அவரை மயக்கி நரகத்தை நோக்கிச் செலுத்தின. குருவாக வந்து சிவபெருமான், வாதவூரரின் கருவி-கரணங்களை மாற்றி, ஆண்டுகொண்டு, சிவமாக்கியதால் மணிவாசகரானார்.

பிறர் கண்களுக்குச் சிலையாகக் காட்சிதரும் தில்லை நடராசர், சிவமான மணிவாசகரின் கருவி-கரணங்களுக்கு ஆனந்தக்கூத்தனாகக் காட்சி அருளினார். பரவசமடைந்த மணிவாசகர் 'சிவமாக்கி எனை ஆண்ட அந்தமிலா ஆனந்தம்' எனப் பாடுகின்றார்.

வினைப்பயனால் உடல்பிறவி

உயிரினங்களின் உடல்பிறவிகள், அந்தந்த உயிர்களின் முன்வினைப் பயனாகக் கிடைத்தவையே என்கிறது இந்தியத் தத்துவமரபு. மனிதர்கள் பிறந்து இறப்பதற்கும், விலங்குகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்கள் பிறந்து இறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். மற்ற உயிரினங்கள், வினைப்பிறவியை நுகர்கின்றன; புதியவினைகளை ஈட்டுவதில்லை; பொறி-புலன் சார்ந்த செயல்களை மட்டுமே செய்கின்றன. மனிதகுலம் மட்டுமே புதிய வினைகளைச் செய்கின்றன.

கடைக்கோடி மனிதன் முதல், கல்வி-செல்வம்-அதிகாரம் என்று உச்சம் தொட்ட முதலமைச்சர் வாதவூரர் உள்ளிட்டோர், முன்வினைப்பயனால் மனிதப்பிறவிகள் பெற்றனர்; இந்திரியவயம் மயங்கி, இவ்வுலக இன்ப-துன்பங்களிலேயே உழல்கின்றனர்; மேலும் மேலும் வினைகளைச் செய்து, பிறவியின் பயனை அறியாமலும் உணராமலும் இறந்து போகின்றனர்.

அன்னதானம், கல்விக்கொடை, பொருள்கொடை போன்றவை நல்வினைகள்; கொலை, களவு, பொய்கூறுதல் போன்றவை தீவினைகள்; இவ்வினைகளை 'நான் செய்கிறேன்' என்ற உணர்வுடன் செய்பவர்கள் மனிதர்களே.

மண்ணும் மனிதரும் பயனுற...

புல் முதல் மரங்கள் உள்ளிட்ட தாவரங்கள், தொடுவுணர்வு என்னும் ஓரறிவு மட்டுமே கொண்டவை; நன்மையையே செய்பவை; ஒரே இடத்தில் நிலையாக வாழ்பவை; தங்கள் உணவைத் தாங்களே உற்பத்தி செய்பவை; ஈரறிவு முதல் ஐந்தறிவு பெற்ற உயிரினங்கள், விலங்குகள், ஆறறிவு கொண்ட மனிதகுலம் ஆகியன வெளியேற்றும் கரியமிலவாயுவையும், கழிவுநீர்களையும் உட்கொள்கின்றன; அவைகள் உண்ண தானியங்கள், கீரைவகைகள், கிழங்குகள், பழங்கள் போன்றவற்றைத் தந்து, உயிர்வாழ ஆக்சிஜனையும்(உயிர்வளி) தருகின்றன. ஓரறிவுத் தாவரத்தின் இச்சிறப்பு, ஈரறிவு முதல் ஆறறிவு கொண்ட எவ்வுயிரினத்துக்கும் இல்லை.

செயல்கள் நிகழ்த்தும் மற்ற உயிரினங்கள் இயற்கைக்கும், உலகுக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து இறப்பவை. அவைகளில் பல இம்மண் பயனுற வாழ்பவை; தாம் இவ்வுலகில் நுகர்வதற்கும் மேலாகவே பிறஉயிரினங்களுக்குக் கொடுத்து வாழ்பவை.

உலகை அழிக்கும் மனித இனம்

அனைத்து உயிர்களும் பிறப்பினால் சமமே என்றார் வள்ளுவர்! எடுத்த உடல்பிறவியால் அவை செய்யும் தொழில்கள் வேறுபடுவதால், அவைகளின் சிறப்புகள் வேறுபடுகின்றன என்ற பொருளில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்று அறிவுறுத்தினார்.

பேராசை கொண்ட மனிதகுலம், வள்ளுவரின் அறிவுரையைப் புறம்தள்ளியது; இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியால், வளர்ச்சி என்ற பெயரில் இவ்வுலகின் இயற்கை வளங்களைச் சுரண்டி வருகிறது; சுற்றுச் சூழலை நாசமாக்கி, இப்பூமியையே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக ஆக்கிக்கொண்டிருக்கின்றது; மற்ற உயிரினங்களை ஏய்த்தும் அழித்தும் வாழ்வதால், அவற்றுக்கு மிகுந்த கடன்பட்டிருக்கிறான் மனிதன்.

‘வினைப்பிறவி’ என்ற வேதனையிலிருந்து விடுபட . . .

பகுத்தறிவு கொண்ட மனிதன், வினைகளை ஈட்டாமல், இறைவனை அடையவேண்டும்; மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தாமல், தன் உழைப்பால் பொருள் ஈட்ட வேண்டும்; பெற்ற பொருளைக் கொண்டு, ஈகை என்னும் உயிர்க்கருணைத் தொண்டு செய்ய வேண்டும். உழைத்து ஈட்டிய பொருளின் பயன், உழைக்க இயலாமல் துன்பப்படுவோர்க்குத் தருவதற்கே என்பது குறள்நெறி. அத்தகைய நெறியை ‘வேளாண்மை செய்தல்' என்றே குறித்தார் வள்ளுவர். ‘அன்பு’ விதை விதைப்பவனே, ‘இறைவனின் அருள்' என்னும் விளைவை அறுவடை செய்வான்.

‘வினைப்பிறவி என்கின்ற வேதனை’யிலிருந்து மீள்வதற்கு வழி இறைச்சிந்தனை. உழைத்துப் பொருள் ஈட்டி, அப்பொருளைப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அன்பே சிவமாகும்; நம்மைக் கட்டுகளிலிருந்து விடுவிக்க உதவும் நெறியையும், துன்பத்திலிருந்து விடுபடும் வழியையும் விளக்கும் தேன் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x