Last Updated : 30 Mar, 2017 10:25 AM

 

Published : 30 Mar 2017 10:25 AM
Last Updated : 30 Mar 2017 10:25 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 23: அன்பும் காதலும் பல மைல்கள் பயணிக்கும்

தில்லை அம்பலக்கூத்தனின் ஆனந்தக்கூத்தின் அழகைக் கண்டு, அருளில் தோய்ந்து, பேரானந்தத்தில் திளைத்த கருணைத் தேன் திருவாசகங்கள் பத்தும் கண்டபத்து என்ற தலைப்பிலும், பதிகத்தின் உட்பொருள் ‘நிருத்த தரிசனம்’ என்றும் குறிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.

தில்லையில் எல்லையில்லா ஆனந்தம்

தில்லை நடராசப்பெருமானின் ஆனந்தக்கூத்தைக் காண்கின்றார்; எல்லையில்லாத பேரானந்தம் அடைகிறார். திருப்பெருந்துறையில் குருவாக வந்தவன் இக்கூத்தபிரானே என்பதைக் கண்டவுடனே உணர்கிறார். உடனிருந்த சிவனடியார்களிடம், “அன்பர்களே! இந்திரியங்கள் தரும் உலகச் சிற்றின்பங்களில் மயங்கித் திரிவது, பிறப்பின் பயனை அடையாமல் இறந்துபோவதற்கே காரணமாகிவிடுகிறது; அப்படி இறந்து, அந்தரத்தில் பலகாலம் திரிந்து, மீளமுடியாத கடும் நரகத்தில் விழ இருந்தேன் நான்; சிவபெருமான் என்சிந்தனையைத் தெளிவித்து, என் சீவனைச் சிவமாக்கி என்னை ஆட்கொண்டான்; திருப்பெருந்துறையில் எல்லையற்ற பேரானந்தம் தந்த சிவபெருமானை, இந்த அழகிய தில்லையம்பலத்தில் முடிவில்லாத ஆனந்தநடராசனாகக் கண்டுகொண்டேன்”, என்றார் மணிவாசகர்.

இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணமாய்,

அந்தரமே திரிந்து போய், அருநரகில் வீழ்வேற்குச்

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி, எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம், அணிகொள்தில்லை கண்டேனே!

(திருவாசகம்-கண்டபத்து:1)

இந்திரியங்கள் என்பவை யாவை?

‘மெய், வாய், கண், மூக்கு, செவி’ என்னும் ஐம்பொறிகளும், அவைகளுக்கான ‘தொடுவுணர்ச்சி, சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல்’ என்னும் ஐம்புலன்களும் சேர்ந்தது ஐந்தறிவு ஆகும். ஐந்தறிவுடன், மனிதகுலத்துக்கு மட்டுமே உரிய ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ என்னும் அகக்கருவிகளையும் சேர்த்து இந்திரியங்கள் என அழைக்கப்படுகின்றன. மனித உடலில் வாழும் உயிர்கள் அனைத்தும் இந்த இந்திரியங்களின் ஆளுகைக்கு எளிதில் அடிமையாகிவிடுகின்றன.

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

(தொல்காப்பியம்:மரபியல்:571)

கண்கள் காண்பதைக் காது அறியாது. காது கேட்டதை கண்களோ நாவோ அறிவதில்லை. எனவே அறிவுக்கருவிகளாகிய இவை வெறும் கேமரா, மைக் போன்ற பொறிகள்; கண்டதையோ உண்டதையோ கேட்டதையோ தெரியப்படுத்துவன(புலப்படுத்துவன) ஐந்து புலன்கள். மூளையில் இப்புலன்களுக்கென்று தனித்தனி இடங்கள் உண்டு. இப்புலன்களிலிருந்து வரும் தகவல்களை உணர்வுகளாக மாற்றி ஒருங்கிணைத்து அறியும் கருவியே மனம். மனம் என்ற அகக்கருவியையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்காக விரிப்பர்.

‘புத்தி’ என்பது கண்டதையோ கேட்டதையோ ‘இன்னதென்று அறியும்’ மனத்தின் பகுதி. (பிறந்தது முதல் கண் முதலிய ஐம்பொறிகளால் அறிந்தது, அனுபவத்தில் கற்றது, பள்ளியில் படித்தது போன்ற அனைத்தும் ‘புத்தி'யில் பதிவாகியுள்ளது.)

‘சித்தம்’ என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. புலன்களால் அறிந்ததை, புத்தி தரும் தகவலின் அடிப்படையில், இது, இப்படி, ஏன் என்று முடிவு செய்வது சித்தம். வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது; எப்படிச் செய்யலாம் என்று திட்டமிடுவது என்பன ‘சித்த'த்தின் வேலைகள்.

‘அகங்காரம்’ என்பது 'நான்', ‘எனது' என்ற உணர்வுடன் மனம், புத்தி, சித்தம் மூன்றையும் இயக்குவது. ‘இந்திரிய வயம் மயங்குதல்’ என்பது இந்திரியங்கள் மூலம் ஈட்டும் நிலையற்ற பொருட்களையும், நுகரும் அற்ப சுகங்கள் மட்டுமே வாழ்வு என்றும் வாழ்வின் பயன் என்று எண்ணுதல்; நன்றாக உண்டு, உடுத்து, உறங்குவது மட்டுமே வாழ்வின் நோக்கம் என்று எண்ணுதல்; இவ்வுலகில் ஈட்டும் பொருள்கொண்டு அனைத்தையும் பெற இயலும் என்று நம்புதல் ஆகியவையே ‘இந்திரிய வயம் மயங்குதல்’ எனப்படும்.

அன்பு ஒன்றே நமக்கான வெற்றி

இந்திரியவயம் மயங்கி இறப்பவர்கள் பலரும் கிடைப்பதற்கு அரிய மனிதப்பிறவியை வீணடித்துவிட்டோம் என்று அறியாமலேயே இப்பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கித் தவிக்கின்றனர். ‘மனிதவாழ்வில் நாம் பிறருக்குச் செலுத்தும் அன்பு ஒன்றே நமக்கான வெற்றியாகும்’ என்று உயிர்பிரியுமுன்னர் கூறிச்சென்றார் புற்றுநோயால் மரணமடைந்த, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ்.

“எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பணம், புகழ், செல்வாக்கு எல்லாமே பொருளற்றதாக மரணத்தின் முன் தோற்றுப்போய் நிற்கின்றன. கடவுள் நம் புலன்களின் மூலம் அனைவரின் மனத்திலும் இருக்கும் அன்பை உணரச்செய்யும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்; அன்பும் காதலும் பல மைல்கள் உங்களுடன் பயணிக்கும்” ஸ்டீவ் ஜாப்ஸ் மனிதகுலத்துக்கு தந்த ஆப்பிள் ஐ-ஃபோனைக் காட்டிலும், இப்பொன்மொழிகள் பன்மடங்கு உயர்ந்தவை.

அன்பை விதைத்தால் அருளைப் பெறலாம்

இறைவன் வாழும் நடமாடும் கோயில்களான ஏழைகளுக்குச் செய்யும் ஈகை, திருக்கோயில் இறைவனுக்குச் சென்றடையும் என்கிறது திருமந்திரம். “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்”, என்று விவிலியம் கூறும். ஈகையை நாற்பதுநாட்கள் 'ரமலான்’ என்னும் ஈகைத் திருவிழாவாக இசுலாம் கொண்டாடும்.

இத்தகைய தெளிவையே ‘சிந்தைதனைத் தெளிவித்து’ என்றார் மணிவாசகர். சிவபெருமான் தந்த ‘சிந்தனையின் தெளிவு’, அனைத்து உயிர்களிடத்தும் ‘அன்பு’ செலுத்தும் பாங்கை மணிவாசகருக்குத் தந்தது. இவ்வாறு, மணிவாசகரை அன்பினால் சிவமாக்கி, திருப்பெருந்துறையில் ஆண்டுகொண்ட சிவபெருமான் தந்த எல்லையற்ற ஆனந்தத்தை அழகிய தில்லையில் கண்டார் மணிவாசகர்.

தன்னை அறிய உதவும் பகுத்தறிவு

இந்திரியங்களின் நன்மை, தீமைகளைப் பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு! பகுத்தறிவு பெற்ற உயிர் முதலில் தன்னை அறியும்! தன்னை அறிதல் என்பது, தான் வாழும் மனிதவுடல் நிலையற்றது; உடலுக்கான வாழ்நாள் முடிந்ததும் அழியக்கூடியது; வாழ்வைப் பயனுள்ள வகையில் வாழ்ந்து, கற்றதனால் வரும் பயனாக, வாலறிவன் இறைவனின் திருவடிகளைத் தொழுது, ஈகையாம் இறைத்தொண்டு செய்து (வீடுபேறு) முத்தியைப் பெறவேண்டும் என்பதாகும்.

இறைவனைக் காண இந்திரியம் வெல்க!

கூத்தபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை மனிவாசகரைப்போல் நம்மால் ஏன் உணர முடிவதில்லை? நாம் அனைவரும் இந்திரியவயம் மயங்கிக் கிடப்பதால்தான்.

மனிதனைத் தவிர்த்த மற்ற உயிரினங்களுக்கு ‘மனம், புத்தி, சித்தம், அகங்காரம்’ என்னும் அகக் கருவிகள் இல்லை; எனவே, அவைகளுக்கு ‘இந்திரிய வயம் மயங்குதல்’ என்னும் சிக்கல் இல்லை. ஓரறிவு கொண்ட புல், மரம் போன்ற தாவரங்கள் தொடங்கி ஐந்தறிவு கொண்ட விலங்குகள் வரை பொறி புலன்களால் மட்டுமே துன்புறுகின்றன; ஆனால் மயக்கம் அடைவதில்லை. இந்திரிய வயம் மயங்கிய மனிதனோ, வல்வினைகளைச் செய்து, அவ்வினைகளின் பயனாக விளையும் துன்பங்களில் அவதிப்படுகிறான். இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும் தேனான திருவாசகங்களை அடுத்தவாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x