Last Updated : 23 Mar, 2017 10:01 AM

 

Published : 23 Mar 2017 10:01 AM
Last Updated : 23 Mar 2017 10:01 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 22: அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை

“புண்சுமந்த பொன்மேனி பாடுதும் காண்! அம்மானாய்” என்று முடியும் திருவம்மானைப்பாடல் வடலூர் வள்ளல் இராமலிங்க சுவாமிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட திருவாசகம். ‘சுமந்த’ என்ற மணிவார்த்தையை அடியாகக் கொண்டே, மணிவாசகரைப் போற்றிப் பாடிய ‘ஆளுடையஅடிகள் அருள்மாலை’ப் பதிகத்தின் ஒன்பதாவது திருவருட்பா அமைந்துள்ளது.

மணிவாசகருக்காகப் புண்சுமந்தான்

மாதொருபாகனாம் எம்பெருமான் நரிகளைப் பரிகளாக்கினான்; குதிரைச் சேவகன் என்று அனைவரும் எண்ணும்படி மதுரை மாநகரெங்கும் குதிரையின் மேலேறி வலம்வந்து, பாண்டிய மன்னனிடம் அக்குதிரைகளை ஒப்படைத்தான்; வைகை நதியில் பிட்டுக்கு மண் சுமந்து நின்று, பாண்டிய மன்னன் மாறன் பிரம்படியால் தன் பொன்மேனியில் புண் சுமந்தான்; இவ்விரண்டு அற்புதங்களையும் இறைவன் நிகழ்த்தியது புண்ணியனான உமக்காக அல்லவா? என்று மணிவாசகரிடம் உருகிக் கேட்கிறார் வள்ளல் பெருமான்.

பெண்சுமந்த பாகப் பெருமான், ஒருமாமேல்

எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும்! வைகைநதி

மண்சுமந்து நின்றதும்! ஓர் மாறன் பிரம்படியால்

புண்சுமந்து கொண்டதும்! நின் பொருட்டு அன்றோ புண்ணியனே!

- திருவருட்பா:3265

இறைவன், மதுரை மக்கள் அனைவரும் குதிரைச் சேவகன் என்று எண்ணும்படியாக வந்தான் என்பதை ‘எண்சுமந்த’ என்றார் வள்ளல் பெருமான். இறைவன், மணிவாசகருக்காகக் குதிரைச் சேவகனாகி, மண் சுமந்து, புண் சுமந்தது ஏன்? எப்போதும் நம்முள்ளே உறையும் இறைவனின் தன்மைகளை, என்புருக்கும் மணிவாசகத்தால் விளக்கி, மனிதர்களின் பாவங்களைக் கழுவி, வீடுபேறு தரும் திருவாசகத்தைத் தரப்போகும் வள்ளல் அல்லவா மணிவாசகர்?

இடிபட்டது வள்ளலாரின் நெஞ்சம்

இராமலிங்க வள்ளலின் சிந்தை, காலச்சக்கரத்தைப் பின்னுக்குத் தள்ளி, விடாத வான்மழையால் வைகை வெள்ளம் புகுந்த மதுரைக்குச் சென்றது. மணிவாசகருக்காக இறைவன் கூலியாளாய் வருகின்றான்; வானளவு பெருமை கொண்ட வைகையின் கரை உடைப்பை அடைக்க, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி படுகின்றான்; இறைவனின் பொன்போன்ற திருமேனி புண்பட்டுப் போகின்றது; கண்டதும் நெஞ்சில் இடிபட்டு மூச்சற்று விழுந்தார் வள்ளலார். நினைவு திரும்பியதும், ‘இந்நிகழ்வைச் சிந்தையில் கண்ட என் நெஞ்சம் இடிபட்டுப் போனதே! நேரில் கண்ட வாதவூரர் மணிவாசகப் பெருமானின் தூய நெஞ்சம் என்ன பாடுபட்டதோ’என்று எண்ணிக் கலங்கினார் வள்ளல் பெருமான்; ஓர் அற்புதமான திருவருட்பா உதயமாயிற்று!

வன்பட்ட கூடலில், வான்பட்ட வையை வரம்பிட்ட, நின்

பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில், புவிநடையாம்

துன்பட்ட வீரர், அந்தோ! வாதவூரர் தம் தூய நெஞ்சம்

என்பட்டதோ! இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே!

- திருவருட்பா:2251.

வன்நெஞ்சக் கூடல்

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ வள்ளலாரின் உள்ளம் மணிவாசகரின் துயரைத் தாங்குமா? ‘வன்பட்ட கூடல்’ என்பதற்கு ‘வைகை வெள்ளப் பெருக்கால் எளிதில் கரையாத வன்மைமிக்க கூடல்நகர் மதுரை’ என்பதே வெளிப்படையான பொருள். ஆயினும், வள்ளல் பெருமானின் மனநிலையை நோக்கும்போது, ஒருவேளை, 'வைகை மணல்வெளியில், கடும் உச்சிவெயிலில் மணிவாசகரை நிற்கவைத்து மன்னன் வன்கொடுமை செய்ததைக் கண்டும் நெஞ்சுருகாத வன்னெஞ்ச மக்களைக் கொண்ட கூடல்நகர் மதுரை' என்ற பொருளில் பாடியிருப்பாரோ எனத் தோன்றுகிறது.

துன்பம் வென்ற வீரர்

புவிநடை என்னும் உலக நடைமுறை எளிதில் வெற்றிபெற முடியாதது; மனத்தை மயக்கும் ஆசைகளால், சுற்றிச் சுற்றி உயிரின் அறிவை விளங்கவிடாமல் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. புவிநடையை வெற்றிகொண்ட வீரர் மணிவாசகர் என்பதை 'புவிநடையாம் துன்பு அட்ட(வென்ற) வீரர்' என்கிறார் வள்ளலார். இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படிபட்டுப் புண் சுமந்த காட்சியை மனக்கண்ணால் காண இறைவன் அருளியதால், வள்ளலாரிடம் மேற்கண்ட திருவருட்பா உதித்தது.

வணிகத்தில் நேர்மை

குதிரைக்கெனக் கொண்டு சென்ற பொன் திருக்கோயில் திருப்பணியில் செலவானது; பெற்ற பொன்னுக்கு ஈடுகட்ட, நரிகளைப் பரிகளாக்கினான் சிவபெருமான்; இறைவன் தந்த குதிரைகளின் அழகைக் கண்டு மகிழ்ந்த பாண்டியன், மீண்டும் ஒரு பொன்முடிப்பைப் பரிசாகத் தந்தான்; குதிரைகளுக்காக ஏற்கனவே பொன்பெற்றுக் கொண்டதால், குதிரைச் சேவகனாக வந்த இறைவன், பாண்டியன் தந்த பொன்னை(கனகம்) வாங்க மறுத்துவிட்டான். தம் பொருட்டே மண்சுமந்தான் என்பதை மணிவாசகரே திருவாசகத்தினுள் பதிவுசெய்த சான்றுகள் திருவாசகம் கீர்த்தித்திருவகவல் 35-40, 44-47 வரிகளில் காணலாம்.

பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,

ஈண்டு கனகம் இசையப் பெறா(அ)து,

ஆண்டான்! எம்கோன் அருள்வழி இருப்ப!

(திருவாசகம்: கீர்த்தித்திருவகவல்:38-40.)

அடியார் குற்றம் நீக்கினான்

தமக்கு ஏற்பட்ட குற்றப் பழியை நீக்கவே குதிரைச் சேவகனாக வந்தான் இறைவன் என்பதையும் திருவாசகத்திலேயே குறிப்பிடுகின்றார் மணிவாசகர்.

பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்

கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன் அடியார்

குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டிச்

சுற்றிய சுற்றத் தொடர் அறுப்பான்”

(திருவாசகம்: திருவம்மானை.20)

நரிகளைக் குதிரைகளாக்கிக் கொணர்ந்த இறைவன், தானும் ஒரு நரிக் குதிரையில்தான் வந்தானோ என்ற ஐயம்தீர, வேதங்களைக் குதிரையாக்கி அதன்மேல் வந்தார் என்றார் வள்ளலார். இறைவன் குதிரைச் சேவகனாகி வந்தபோது கண்ட பூங்கொடி இடையுடைய பெண்கள் அவரது கண்கொள்ளாப் பேரழகை வியந்து தம்மையும் மறந்து பாடித் துதித்தனர். இறைவனின் இத்திருக்காட்சியை

புரவியின் மேல் வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார்

மரவியல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே

(திருவாசகம்: திருப்பாண்டிப்பதிகம்.20)

என்று அழகுறச் சொல்கின்றது திருவாசகம். இறைவனே அழகிய குதிரைச் சேவகனாக திருக்கோலம் கொண்டு, சேவடியால் குதிரையின் மேலேறி, மக்கள் அனைவரும் காண, மதுரை மாநகரெங்கும் வலம்வந்து காட்சிதந்தான்.

கனவிலாவது காட்டுக

அத்திருக்காட்சியைக் காணப் பெருவிருப்பு கொண்டு விண்ணப்பிக்கின்றார் வள்ளலார். ஆனால், இறைவன் பரிப்பாகனாக வந்த திருக்காட்சி காணக் கிடைக்கவில்லை. “இறைவா! என் பிறவிநோய் நீங்கிட, என் கனவிலாவது உன் அழகிய குதிரைச் சேவகன் திருக்கோலத்தைக் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்யும் அழகிய திருவருட்பா பூத்தது.

திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு, அன்று தென்னன் முன்னே,

வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற

ஒருவாத கோலத்து ஒருவா! அக்கோலத்தை உள்குளிர்ந்தே

கருவாத நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே

(திருவருட்பா:2304.)

பாண்டியன் கண்காணக் குதிரைச் சேவகனாக வந்ததை, “தென்னன் முன்னே” என்றார் வள்ளலார். நரிக்குதிரைகளில் ஒன்றல்ல சிவபெருமான் ஏறிவந்த குதிரை; மிக உயர்ந்தவகைக் குதிரையானாலும், சிறிய நிழல் கண்டால் வெருண்டு கலையும் இயல்புடையதாகவே இருக்கும்; ஆனால், சிவபிரான் ஏறிவந்த குதிரை, “அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை” என்று “வெருவா வைதிகப் பாய்பரி” என்றார் வள்ளலார். ‘என்றென்றும் நிலைபெற்ற ஒப்பற்ற இறைவனின் திருக்கோலமே குதிரைமேல் காட்சியளித்தது’ என்பதை “ஒருவாத கோலத்து ஒருவா!” எனச் சிறப்பிக்கின்றார். கருவாதம் என்றால் பிறவி நோய்.

கண் படுமோ!

ஏன் கனவில் காட்ட விண்ணப்பம் செய்கின்றார்? பாதமலர் அழகினை நேரில் கண்டால் தம் கண்ணே பட்டுவிடும் என்று அஞ்சினார் வள்ளலார்.

பண் ஏறும் மொழி அடியார் பரவி வாழ்த்தும்

பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில்

கண் ஏறு படும் என்றோ கனவிலேனும்

காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ!

(திருவருட்பா:103)

கருணைக் கடல் வள்ளலாரின் வழிபடுநூல் திருவாசகம். தில்லை அம்பலக்கூத்தனின் அழகைக் கண்டு, அருளில் தோய்ந்த கருணைத் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x