Last Updated : 15 Mar, 2017 03:43 PM

 

Published : 15 Mar 2017 03:43 PM
Last Updated : 15 Mar 2017 03:43 PM

வான்கலந்த மாணிக்கவாசகம் 21: நானோ இதற்கு நாயகமே

திருப்பெருந்துறையில் மணிவாசகரை ஆட்கொண்டார் இறைவன்; இறையின்பத்தில் திளைத்த மணிவாசகர் தம்மை மறந்தார்; பகல் இரவாவதும் மறந்தார்; தாம் பாண்டிய நாட்டின் முதலமைச்சர் என்பதையும் மறந்தார்; பாண்டிய மன்னனுக்காகக் குதிரைகள் வாங்கவே பொன் கொண்டுவந்ததையும் மறந்தார்; எத்தனைக் காலம் அப்படியிருந்தாரோ தெரியவில்லை; கொண்டுவந்த பொன்னும் காப்பாரில்லாமல் கரைந்தது; குதிரைகள் எப்போது வரும் என்ற பாண்டிய மன்னனின் ஓலையைக் கண்டதும் துணுக்குற்றார்; இறைவனிடம் சென்று முறையிட்டார்; இறைவன் ஆணைப்படி, “ஆவணி மூல நன்னாளில் குதிரைகள் வரும்” என்று பதில் ஓலை அனுப்பினார்.

குதிரைகளுடன் தான் பின்னே வருவதாகவும், முன்சென்று அரசனுக்குச் சொல்லும்படியும் இறைவன் மணிவாசகரைப் பணித்தான். மணிவாசகர் வந்து பல நாட்கள் ஆனபின்னும் குதிரைகள் வரவில்லை; கோபங்கொண்டு, மணிவாசகரைக் கொடுஞ்சிறையிலிட்டான் மன்னன். இறைவனின் கருணையை நினைத்து, திருவருள் துணை கொண்டு, துன்பங்களைப் பொறுத்தார் மணிவாசகர்.

நன்றும் பிழையும் நீயே செய்வாய்!

கடமை தவறாத முதலமைச்சரான மணிவாசகர், இறைவன் ஆட்கொண்ட பின் கடமை தவறியதற்கு இறைவனே பொறுப்பு! இதை இறைவனும் அறிவான்; இத்திருவிளையாடலை மணிவாசகரின் ஒரு அற்புதமான திருவாசகம் நமக்கு அறிவிக்கின்றது. “குன்றுபோல் என்றும் மாறாத தன்மை கொண்ட இறைவனே! ஆட்கொண்ட அன்றே என் ஆவியையும், உடலையும், உடைமை அனைத்தையும் நீ ஏற்றுக் கொண்டுவிட்டாயே! இன்று எனக்கென ஓர் இடையூறு எப்படி வரும்? எட்டுத் தோள்களும், முக்கண்களும் உடைய எம்மானே! நானே உன் உடைமை என்பதால் என் செயல் என்று எதுவுமில்லை; நன்றே செய்வாய்! பிழை செய்வாய்! அனைத்தும் சிவார்ப்பணம்! நானோ இச்செயல்களின் நாயகன்?” என்றார் மணிவாசகர் உறுதியுடன்.

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ!

இன்றோர் இடையூறு எனக்குண்டோ! எண்தோள் முக்கண் எம்மானே!

நன்றே செய்வாய்! பிழைசெய்வாய்! நானோ இதற்கு நாயகமே!!

(திருவாசகம்: குழைத்தபத்து-7)

கொண்டுவந்த பொன்னுக்கு, குதிரைகள் வாங்க விடாமல் செய்த இத்திருவிளையாடல் மூலம் இறைவன் மனிதகுலத்துக்குச் சொல்லும் முக்கியச் செய்தி “இப்பூமியின் வளங்கள் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்காகத் தரப்பட்டவை; அவ்வளங்களைக் கொண்டு குதிரைகள் உள்ளிட்ட படைபலங்கள் பெருக்கி, பிறநாடுகளின் மீது படையெடுத்து அமைதியை அழிப்பதும், அவர்தம் பொருட்களைக் கவர்வதும் நீதியற்ற செயல்கள்” என்பதே!

பட்டினிச்சாவு கண்டும் சிந்தை கலங்காதோர்

பல நாடுகளில் சக மனிதர்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும்போது, ராணுவத் தளவாடங்களை வாங்க, உலகப் பொருளா தாரத்தின் பெரும்பகுதி செலவிடப்படுவது கொடுமை! அநீதி! மனித குல மேம்பாட்டுக்கான அறிவியல் தொழில்நுட்பத்தை ராணுவ ஆயுதங்களையும், போர் முறைகளையும் கூர்செய்யப் பயன்படுத்து கிறோம்; நாடு, தேசபக்தி என்ற பெயர்களால் மனித குலம் செய்யும் பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் இது. பிளவுபடாத இந்தியாவின் ஒருகுடும்பத்து மனிதர்கள், விடுதலை, மதம், தேசபக்தி என்ற பெயர்களில் ஒருவருக்கு ஒருவர் பகையாளியானார்கள். மனிதருக்குள் அன்பென்னும் பூப்பூத்தால், ஆயுதங்கள் வாங்கும் பணத்தில், பசிப்பிணி போக்கும் தொண்டாக மலர்ந்திருப்பார்கள்.

நீதிமறந்த மனிதகுலம்

அறிவு வளர்ந்ததாகப் பீற்றிக்கொள்ளும் மனித குலம் அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் என பூமிக்குச் செய்யும் பேரழிவைச் சொல்லி மாளாது; இனக்குழுக்களாக இயற்கையோடு வாழ்ந்த மனிதன், இப்புவியில் யானை முதல் எறும்பு வரையான அனைத்து உயிர்களின் வாழும் உரிமையையைக் காத்து வாழ்ந்தான். இறைவனின் திருவிளையாடல்கள், இயற்கை நீதியை மறந்த மனித குலத்தை நெறிப்படுத்தவே என்பதை உணர்வோம்.

தவறே செய்யாத மணிவாசகரை ஆட்கொண்டு, பொதுப்பணத்தைக் காக்கும் கடமையிலிருந்து தவறச் செய்தான் இறைவன்; இதற்கு அவனே பொறுப்பு என்பதால்தான் குதிரைகள் வரும் என்று ஓலை அனுப்புமாறு மணிவாசகரைப் பணித்தான் இறைவன்.

நீதிக்குத் தலைவணங்கிய இறைவன்

தான் ஆட்கொண்ட மணிவாசகரைப் பொதுப்பணத்தைக் கையாடிய குற்றத்துக்காக பாண்டியன் சிறையிலிட்டபோது, இறைவன் உடனே குதிரைகள் கொண்டுவந்து காப்பாற்ற வில்லை; அரச நீதியின்படி, தவறுக்கான தண்டனையை மணிவாசகர் அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டான். நரிகளை ஏன் குதிரைகளாக்கிக் கொண்டுவந்தான் இறைவன் என்பதைச் சிந்திப்போம்.

கடமையை நிறைவேற்றிய இறைவன்

மன்னன் பொதுப் பணத்தின் காவலன் மட்டுமே! பொதுப்பணம், மக்களுக்கான நலப்பணிகள் செய்யவே தவிர, மண்ணாசை கொண்டு போர் செய்ய அன்று. இதை உணர்த்தவே, நரிகளைக் குதிரைகளாக்கிக் கொடுத்தான். மணிக்கணக்காக வெகுவிரைவாகச் செல்லும் திறன் கொண்ட குதிரைகள் மனிதனுக்கு எளிதில் கட்டுப்படுகின்றன; ஆனால், தந்திர குணம் கொண்ட நரிகளை மனிதனால் பழக்கப்படுத்தவே முடியாது. எனவேதான் உண்மையான குதிரைகளுக்குப் பதிலாக நரிகளைக் குதிரைகளாக்கிக் கொடுத்தான் இறைவன். குதிரைகளை மன்னனிடம் ஒப்படைத்துக் கயிறு மாற்றியதுடன் குதிரைகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் முடிந்துவிட்டது; தான் ஆட்கொண்ட மணிவாசகரின் கடமையை இறைவன் நிறைவேற்றிவிட்டான்.

நீதி தவறிய மன்னன்

குதிரைகள் மீண்டும் நரிகளாக மாறி ஓடியதும், மன்னன் சிந்தித்திருக்க வேண்டும்; பரிப்பாகனாக வந்தவன் இறைவனே என்பதை அறிந்திருக்க வேண்டும்; மண்ணாசையால் மக்களை அழிக்க முயலும் தன் தவறை உணர்ந்திருக்க வேண்டும்.

மாறாக, மணிவாசகரைக் கடும் வெயிலில் வைகை மணலில் நிற்கவைத்துக் கொடுமை செய்தான் மன்னன். உடனே பெருமழை பொழியவைத்து, வைகை ஆற்றில் பெருவெள்ளம் பொங்கச் செய்தான் இறைவன். வைகை ஆற்றின் கரை உடைந்து மதுரை வெள்ளக்காடாகியது; வீட்டுக்கொருவர் வந்து வைகைக்கரை உடைப்பைச் சரிசெய்ய ஆணையிட்டான் மன்னன்.

பிட்டுக்கு மண் சுமந்தான்

பிட்டு விற்கும் மூதாட்டி வந்தியின் கூலியாளாய் வந்த இறைவன், மண்சுமக்கும் வேலையை முடிக்காதது கண்ட பாண்டிய மன்னன் பிரம்பால் இறைவனின் முதுகில் ஓங்கி அடித்தான். இறைவனின் முதுகில் பட்டஅடி, மன்னன் உள்ளிட்ட வாழும் அனைவரின் முதுகிலும் அடிபட்டது; அனைத்து உயிர்களிலும் இறைவனே கலந்துள்ளான் என்பதையும், அனைத்து உயிர்களின் நலனுக்கும் ஆள்பவனே பொறுப்பு என்பதையும் உணர்த்தியது இத்திருவிளையாடல். பட்ட அடியால், மன்னன் உள்ளிட்ட அனைவரும் தம்முள்ளே ஆடும் இறைவனின் ஆனந்தக்கூத்தைத் தரிசித்தனர்!

புண் சுமந்த பொன்மேனி

“அம்மையை ஒரு பாகத்தில் சுமந்த எம்பெருமான் திருப்பெருந்துறையான், இனிய பண்ணிசை சுமந்த பாடல்களைப் பரிசாகப் படைத்து அருள்கின்றவன்; விண்ணளவு புகழ் கொண்ட விரிந்து பரந்த இப்பிரபஞ்ச மண்டலத்துக்கு ஈசன்; நெற்றிக்கண் உடைய கடவுள், மனிதர்களின் பாவங்களைப் போக்கக் கலிகால மதுரையின் மண்ணைத் தன் தோளில் சுமந்தான்; ஏழை மூதாட்டி வந்தி கொடுத்த பிட்டைக் கூலியாகக்கொண்டு, மன்னன் கொடுத்த அடியை வாங்கிக்கொண்டு, மனிதர்களின் பாவங்களைப் போக்கத் தன் பொன்மேனியில் புண் சுமந்த தியாகத்தைப் பாடி அம்மானை ஆடுவோம்” என்று இறைவனின் ஆனந்தக் கூத்தை, அம்மானை விளையாடும் சிறுமிகளுடன் பாடி நம்மையெல்லாம் பேரானந்தக் களிப்பில் ஆழ்த்துகின்றார் பெருமான்.

பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்

பெண்சுமந்த பாகத்தன்! பெம்மான் பெருந்துறையான்!

விண்சுமந்த கீர்த்தி! வியன்மண்டலத்து ஈசன்!

கண்சுமந்த நெற்றிக் கடவுள்! கலிமதுரை

மண்சுமந்து, கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு,

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்!

– திருவாசகம்:திருவம்மானை-8

பாண்டிய மன்னன் மணிவாசகரிடம், தன் பிழை பொறுத்து, மீண்டும் முதலமைச்ச ராகப் பணிஏற்க வேண்டினான். மன்னனை வாழ்த்திய மணிவாசகர் திருப்பெருந்துறைக்கு இறைப்பணி செய்ய விடுக்குமாறு வேண்டி, அவ்வண்ணமே விடைபெற்றார்.

இத்திருவாசகத்தில் தாம் கலந்து, மணிவாசகரின் மனநிலையை எண்ணிக் கரைந்த வள்ளல் பெருமானின் அருட்பாக்களை அடுத்த வாரம் சுவைக்கலாம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x