Last Updated : 02 Mar, 2017 05:05 PM

 

Published : 02 Mar 2017 05:05 PM
Last Updated : 02 Mar 2017 05:05 PM

வான்கலந்த மாணிக்கவாசகம் 19: ஐம்புலன்களும் சிவமயம்

இவ்வுலகில் தம்மால் ஏன் வாழ இயலாது என்பதைத் தேர்ந்த வழக்கறிஞரின் தெளிவுடன் நீதியின் தலைவன் இறைவனிடம் விண்ணப்பிக்கின்றார் மணிவாசகர். ‘வாழ்கிலேன் கண்டாய்’ என்று இப்பதிகப் பாடல்கள் நெடுகிலும் வருவதால் ‘வாழாப்பத்து’ என்ற பெயருடன் இது விளங்குகிறது.

இறைவனைக் கட்டும் கயிறு

“வம்பனான என்னை ஆண்டுகொண்ட மாணிக்க மணிபோல் ஒளிவீசும் இறைவனே! எனக்கு உன் திருவடியைத் தவிர வேறு பற்று ஒன்றும் இல்லை! தேவர்களும் அறிய முடியாதவனே! மூவுலகையும் ஊடுருவி செந்தீ உருவில் நின்ற சிவபெருமானே! சிவபுரத்து அரசே! என்னை ஆளும் எம்பெருமானே! உயிர்த் தொகுதிகளில் தலைசிறந்தவர் காக்கும் கடவுள் திருமால்; அடுத்தவர் படைக்கும் தேவன் நான்முகன்; இவர்களே ‘தான்’ என்னும் அகந்தையால் பாதிக்கப்பட்டனர்; ‘அன்பு’ என்னும் உணர்வு இறந்து, உனது அடி முடி காண முடியாமல் தவித்தனர்; எத்தகுதியுமற்ற வம்பனான என்னால் இவ்வுலகில் வாழ்ந்து எப்படி உன்னை அடைய இயலும்? எனவே, என்னை வா என்று கூவி அழைத்துக்கொண்டு அருள்வாயாக!” என்று உள்ளமுருகி வேண்டுகின்றார் மணிவாசகர்.

வம்பனேன் தன்னை ஆண்ட மாமணியே! மற்று நான் பற்று இலேன் கண்டாய்!

உம்பரும் அறியா ஒருவனே! இருவர்க்கு உணர்வு இறந்து, உலகம் ஊடுருவும்

செம் பெருமானே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!

எம்பெருமானே! என்னை ஆள்வானே! என்னை, நீ கூவிக்கொண்டருளே!

(திருவாசகம்:வாழாப்பத்து-2)

சிற்றறிவைக் கடந்து நிற்கும் வாலறிவனாம் இறைவனை ‘அன்பு’ என்னும் உணர்வுக் கயிற்றால் மட்டுமே கட்ட முடியும். ஆனால், எளியனான தமக்கு அத்தகைய ‘அன்பு’ வயப்படுமோ என்று அஞ்சினார் மணிவாசகர்.

ஒழுக்கமில்லாத புலன்கள்

“இனிய பண்ணிசைமொழி பேசும் உமையம்மையின் பங்கனே! உன்னைத் தவிர வேறுபற்று இல்லாதவன் நான்! என்னை உண்மையாகவே நனவில் ஆட்கொண்டருளியவனே! சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! உன் அருளால் என்னை ஆட்கொண்டு திருவடிப் பேறு நல்கிய நீ, இவ்வுலகில் யாருடன் வாழச் சொல்கிறாய் என்பதைச் சற்றே எண்ணிப் பார்! உன் திருவடி காண, ‘எண்ணம், உடல், வாய், மூக்கு, செவி, கண்’ ஆகிய பொறி புலன்கள் எப்போதாவது எனக்கு உதவியதுண்டா? என்னைத் தீயவழியில் கொண்டுபோவதையே தொழிலாகக் கொண்ட இவைகளை, நினது திருவடிச் சிந்தனையில் ஈடுபடுத்தி, என்னால் மண்ணுலகில் வாழவே முடியாதைய்யா! எப்படியாவது என்னை வருக என்று அழைத்துக்கொண்டு அருள் செய்வாயாக!” என்று கல் மனமும் கரையுமாறு உருகி வேண்டி நின்றார் பெருமான்.

பண்ணின் நேர் மொழியாள் பங்க! நீ அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்!

திண்ணமே ஆண்டாய்! சிவபுரத்தரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!

எண்ணமே, உடல்,வாய், மூக்கொடு, செவி, கண், என்று இவை நின் கணே வைத்து

மண்ணின் மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்! வருக! என்று அருள் புரியாயே!

(திருவாசகம்:வாழாப்பத்து-5)

இறைவனை அடைவதற்கு உடல், அகப்புறக் கருவிகள் தடையாக உள்ளன என்பதைத் திருச்சதகம் 79-ம் திருவாசகத்தில் பெருமான் அற்புதமாக விளக்குகின்றார். “ஐயனே! உலகியலிலேயே செல்கின்ற சிந்தை, செயல், கேள்வி, சொல் ஆகியவற்றுடன் எப்போதும் கூட்டணி கொண்டவை சிறப்பில்லாத ஐம்பொறிகள்; இவைகளால், முற்காலத்தில், உன்னை அடைந்திடாத மூடனாகிய நான், தீயில் வெந்து இறந்தேனில்லை; என் மனம் நாணி, நெஞ்சு வெடிக்கவில்லை; எம் தந்தையாகிய உன்னை அடைய விரும்பி, இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்” என்று பரிதவிப்புடன் தன்னையே நொந்துகொள்கிறார் பெருமான்.

சிந்தை, செய்கை, கேள்வி, வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால்,

முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன்!

வெந்து, ஐயா! விழுந்திலேன்! என் உள்ளம் வெள்கி விண்டிலேன்!

எந்தை ஆய நின்னை, இன்னம் எய்தல் உற்று இருப்பனே!

(திருவாசகம்:திருச்சதகம்- 83)

ஐம்புலன்களும், சிந்தை முதலிய கருவிகளும் இவ்வுலகத்தில் உள்ள பொருள்களைப் பற்றிக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து அறிவதற்கே உதவுகின்றன; அவை இறைவனை அடைவதற்குத் துணையாக இல்லாமல், தடையாகவே உள்ளன; எனவே, ‘அவற்றால் நின்னை எய்திடாத மூர்க்கனேன்' என்றார். இறைவனை அடையாமல் வாழ்ந்து பயனில்லை என்பதை, ‘வெந்து விழுந்திலேன்' என்றும், 'உள்ளம் விண்டிலேன்' என்றார். இறைவன் மணிவாசகரை ஆட்கொண்டமையால், இறைவனை எப்படியாவது மீண்டும் அடைந்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன் வாழ்வதை, ‘நின்னை இன்னம் எய்தலுற்றிருப்பனே' என்றும் கூறினார்.

கடமை தவறிய மனம்

ஆண்டு கொள்வதற்கு முந்தைய காலங்களில், சிந்தை முதலிய கருவிகளால் இறைவனைப் பற்றும் அறிவு தமக்கு இல்லை என்பதை ‘எய்திடாத மூர்க்கனேன்’ என்றார். மனமே எல்லாக் கருவி-கரணங்களுக்கும் மூலம்; தன்னுடன், ஐம்பொறிகள்-ஐம்புலன்கள் உள்ளிட்ட மற்ற கருவிகளையும் இறைவழியில் செலுத்தும் கடமை மனதுக்கு உண்டு; தீய உலகியலில் தானும் சென்று, மற்றைய கருவிகளையும் தீய வழியில் செலுத்தியமைக்காகக் கடமை தவறிய மனம் வெட்கப்பட்டு, உடைந்து அழிய வேண்டும். அவ்வாறு தம் மனம் நாணமுற்று அழியவில்லையே என்று வெதும்பும் மணிவாசகர் ‘என் உள்ளம் வெள்கி விண்டிலேன்’ என்று வருந்துகிறார்.

உடலின் கடமையாகிய இறைவனைத் தொழுதல், வணங்குதல் போன்றவைகளைச் செய்யாமைக்காக உடலை நெருப்பில் வீழ்த்தாது வீணாக இருக்கிறேன் என்பதை, ‘வெந்து, ஐயா, விழுந்திலேன்’ என்றார் பெருமான். மனம் உடைந்து அழிவதும், உடல் வெந்து அழிவதும் கடமை தவறியமைக்காகச் செய்யும் கழுவாய் (பிராயச்சித்தம்) ஆகும்.

ஒரு குழந்தை, தன் தந்தையை அடைவதற்கு இவ்வளவு துன்பம் அடைதல் தகுமா என்பதைக் குறிக்கவே ‘எந்தையான நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே’ என்றார்.

சிவார்ப்பணம் என்பது

ஐம்புலன்களையும் சிவமயமாகக் கண்டார் வரகுணத்தேவர் என்னும் சிவனடியார். உதிர்ந்து கிடந்த வேப்பங்கனிகளைச் சிவலிங்க வடிவங்களாகக் கண்டார். குளத்தில் உள்ள தவளைகளின் ஒலியை சிவபெருமானைப் போற்றிப் பாடும் துதிப்பாடல்களாகக் கேட்டார். உள்ளம் நெகிழ்ந்து, உதிர்ந்த அவ்வேப்பங் கனிகளுக்கு எல்லாம் விதானம் அமைத்தார். தவளைகளின் ஒலி வந்த அக்குளத்துக்குக் காசும், பொன்னும், மலரும் தூவி வழிபட்டார். இந்நிகழ்வைப் பட்டினத்தடிகள் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் காணலாம்.

ஏழை ஒருவன் பசித்திருந்தால், சிவபெருமானே பசித்திருந்ததாக எண்ணித் தொண்டு செய்யும் மனமே சிவார்ப்பணம் ஆகும். ஒரு சிவஞானி, உலகில் நுகரும் ஐம்புல இன்பங்களையும் சிவார்ப்பணம் செய்தல் வேண்டும். இவ்வாறு, உலகியல் தொடர்பான ஐம்புலன்களையும் இறைவனுக்குச் சமர்ப்பித்துவிட்டு, சிவமயமாக அப்புலன்களை மாற்றிக் கொள்ளுவதே ஐம்புலன்களால் இறைவனை அடைதலாகும் என்பதைச் சொல்வதே இத்திருவாசகங்கள்.

நம் ஊனை உருக்கி, இறையொளி தந்த திருவாசகத்தேன் சுளைகளைச் சுவைத்தோம். இன்னும் சில மணிவாசகங்களை அடுத்த வாரம் மீண்டும் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x