Last Updated : 16 Feb, 2017 09:40 AM

 

Published : 16 Feb 2017 09:40 AM
Last Updated : 16 Feb 2017 09:40 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 17: ஊடுவது உன்னோடும் உவப்பதும் உன்னை

இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்த பெருமைக்குரிய திருமால் பாடிப்புகழும் சிவபெருமானின் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு பற்று ஒன்றும் இல்லை என்று தம் பற்று-இன்மை எதைக் குறித்தது என்று மிகத்தெளிவாக இப்பாடலில் குறிப்பிடுகிறார் மணிவாசகர்.

தேடிவந்து ஆட்கொண்ட சிவபெருமான்

அது மட்டுமல்ல; இன்னும் ஒரு முக்கியமான செய்தியை மிக அழுத்தமாக இறைவனிடம் கூறி நியாயம் கேட்கிறார்: ‘சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! பாண்டிய நாட்டு முதலமைச்சர் என்னும் முறையில், படைகளுக்குக் குதிரைகள் வாங்குவதற்கே நான் திருப்பெருந்துறை வந்தேன்; உன்னைத் தேடி நான் வரவில்லை; மறைபயில் அந்தணன் வடிவில் குருவாகத் தோன்றி, நீதான் என்னைத் தேடிவந்து ஆண்டுகொண்டாய்!

இறைப்பேரின்பம் நீயாக எனக்குத் தந்த கொடையே தவிர, நான் கேட்டு வாங்கிய வரம் அன்று; ஆகவே, நான் பிணங்குவதும் உன்னோடுதான்; மகிழ்வதும் உன்னைத்தான்! என் உயிருக்கு உறுதியைத் தரும் உன் திருவடிப் பேற்றை மட்டுமே நான் விரும்புகிறேன் என்பதை உனக்கு நான் உணர்த்த விரும்புகிறேன்; உன் பிரிவினால் நான் வாடியிருக்கிறேன். இவ்வுலகத்தில் நான் வாழ மாட்டேன்! என்னை வருவாய் என்று அழைத்து அருள் செய்வாயாக!” என்று உறுதிபடக் கூறுகின்றார் மணிவாசகர்.

பாடி மால் புகழும் பாதமே அல்லால், பற்றுநான் மற்றிலேன் கண்டாய்!

தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே! திருப்பெருந்துறையுறை சிவனே!

ஊடுவது உன்னோடு! உவப்பதும் உன்னை! உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி!

வாடினேன் இங்கு! வாழ்கிலேன் கண்டாய்! வருக என்று அருள் புரியாயே!

– (திருவாசகம்:வாழாப்பத்து-3)

மணிவாசகரின் மனஉறுதி

தலைவியிடம் வலியச் சென்று தன் காதலைத் தெரிவித்த தலைவன் பிரிந்து சென்றால் தலைவி ஊடல் கொள்கிறாள். உரிமை உள்ள தலைவனிடம்தானே ஊடல் கொள்ள முடியும்? ஏனென்றால், ஊடலின் காரணங்களை அறிந்து போக்க வேண்டியவன் இங்கு தன்னைத் தேடி வந்து ஆண்ட தலைவனாகிய இறைவனே ஆவான்; இதையே ‘ஊடுவது உன்னோடு’ என்றார். தன்னை உடையவனாகக் கொண்ட அத்தகைய உரிமையாளனைக் கண்ட பொழுதுதான் மகிழ்ச்சியும் தோன்றும்.

ஆகையால், ‘உவப்பதும் உன்னை’ என்றார். உடல் நலத்தைக் காட்டிலும், உயிர் நலத்தை இறைவனிடம் வலியுறுத்தவே ‘உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி’ என்றார் மணிவாசகர். வாடிய பயிருக்கு நீர் ஊற்றி, வாட்டம்தீர்த்து வளர்ப்பதுபோலத் தனக்கு அருள்புரிய வேண்டும் என்று குறிக்கவே, ‘வாடினேன்; இங்கு வாழ்கிலேன், வருக என்றருள் புரியாய்’ என்றார்.

மணிவாசகரும் பாரதியும்

இத்திருவாசகப் பாடல் தரும் நெகிழ்வை, பாரதியின் ‘கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்’ என்ற பாடல் கொண்டுள்ளது. இறைவனிடம் நேரடியாக வழக்குரைக்கும் மணிவாசகரைப் போல் அல்லாது, தோழிமூலம் தன் தலைவன்(இறைவன்) கண்ணனுக்குத் தூது அனுப்புகிறாள் தலைவி. இப்பாட்டில் தம்மை ஆட்கொண்ட கண்ணனிடம் தம் எண்ண ஓட்டத்தை மட்டும் சற்று கூறிவிட்டு வந்துவிடு; பிறகு, ஏதாவது செய்துகொள்ளலாம் என்று தோழியிடம் கெஞ்சுகிறாள் தலைவி.

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்

கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ..

எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம்

- பின்னர்

ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!

- மகாகவி பாரதியார்

பாரதியிடம் காணும் மணிவாசகரின் உறுதி

தோழி தூது செல்ல சம்மதித்ததும், தலைவியின் வார்த்தைகளில் தன்னைப் பிரிந்த தலைவனிடம் கொண்ட கடும்கோபம் பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது. உடனடியாகக் கண்ணன் என்னை அடைய வரவில்லை என்றால், அனைவரும் கண்ணனைத் தூற்றும் வகையில், ஆற்றங்கரையில் முன்னம் ஒருநாள் எம்மைத் தனியாக அழைத்துப் பேசிய ஆசைமொழிகளை எல்லாம் ஊரெங்கும் முரசு கொட்டி அறிவித்துவிடுவேன் என்று கண்டிப்பாகக் கூறிவிடு என்று பொங்கி எழுகிறாள் தலைவி.

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை

அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்

தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று

சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!

- மகாகவி பாரதியார்

கண்ணனைப் பற்றிக் கடவுளிடம் பாரதி முறையீடு

பின்பு, கோபம் சற்றே தணிந்த தலைவி, “எப்பொழுதும் அந்தப் பாவி கண்ணனையே நினைந்து, நினைந்து என் உள்ளம் மறுகி மறுகி உருகுகின்றது. அதனால், அவன் எப்பொழுது என்னை

வந்து சேர்வான் என்பதை இறுதியாக ஒரு முறை கேட்டுச் சொல் தோழி! அவன் வரவில்லை என்றால், பின், நான் முறையிட, தெய்வம் இருக்குதடி! பார்த்துக்கொள்ளலாம்” என்கிறாள் தலைவி தோழியிடம்.

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்

நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்

தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்

பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!

- மகாகவி பாரதியார்

கடவுளைப் பற்றிய முறையீடு

கண்ணனைப் பற்றிக் கடவுளிடம் மேல்முறையீடு செய்யும் உரிமை தந்த பலத்தில் வீரம் உரைக்கிறாள் பாரதி பாடலின் தலைவி. இங்கு மணிவாசகர் வழக்குரைப்பதோ மேல்முறையீட்டுக்கே வழியில்லாத முழுமுதற் கடவுளிடம்; எனவேதான், ‘ஊடுவதும் உன்னோடு, உவப்பதும் உன்னை’ என்று சிவபெருமானிடமே தன் வழக்கைப் பதிவு செய்கிறார் மணிவாசகர்.

மணிவாசகரும் கம்பனும்

“இங்கு, உன்னைப் பிரிந்து வாழும் பிரிவைக் காட்டிலும் என்னைச் சுடுமோ கொடுங்காட்டில் வாழும் வாழ்க்கை?” (ஈண்டு, நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள். – கம்பராமாயணம்:1917) என்று ராமபிரானிடம் வழக்குரைக்கிறாள் கம்பனின் சீதை. கம்பனின் இந்தக் கவிதைக்கு உரமாக இருந்தது “என் தலைவனே! பெருங்காட்டில் வாழ்வது எனக்குக் கடினமாக இருக்குமென்று நீ சொன்னால், உன்னைப் பிரிந்து தனியாக வாழும் வீட்டுவாழ்க்கை எனக்கு இனிமையாக இருக்குமோ?” என்னும் குறுந்தொகைப் பாடல்.

பெருங்காடு இன்னாஎன்றீராயின்,

இனியவோ பெரும

தமியேற்கு மனையே’

- குறுந்தொகை:124

திருவாசகத் தேனைச் சுவைக்கும்போது, தமிழ்ச் சோலையில் பூத்த அதற்கு இணையான படைப்புகளையும் ஒப்பு நோக்கினால், சுவையும், இனிமையும் மென்மேலும் பெருகுகின்றன. வாழாப்பத்தில் இன்னும் சில மணிவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x