Last Updated : 02 Feb, 2017 10:09 AM

 

Published : 02 Feb 2017 10:09 AM
Last Updated : 02 Feb 2017 10:09 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 15: முப்புரங்களை எரித்த சிவன்

திருவாசகம் முழுவதுமே மணிவாசகரின் இறைவனுபவப் பிழிவு ஆகும். மனித உடலிலேயே இறையனுபவம் பெற்ற மணிவாசகரின் ‘சொல்லால் விளக்க இயலாத’ பெருவிளக்கமே அண்டப்பகுதியில் நாம் காணும் திருவாசகம். ‘பூமியில் சிலநாள் வாழ்ந்து, பின் தில்லை வருக’ என்ற இறைவன் ஆணையிடுகிறார்; இறைவனைப் பிரிந்த பேரிழப்பு, நரகத்தினும் கொடியதாய், பேரிருளாய் மணிவாசகரைச் சூழ்ந்து வருத்தியதால் பிறந்த திருவாசகப் பதிகங்கள் நீத்தல் விண்ணப்பம், செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, வாழாப்பத்து போன்றவை. இந்தத் துன்பநிலையைக் கடந்தபின் தோன்றும் பேரின்பம் விளைவித்த திருவாசகப் பதிகங்கள் இளைய தலைமுறையை இறைத்தொண்டிலும், வழிபாட்டிலும் நெறிப்படுத்தும் திருவெம்பாவை, திருவம்மானை, திருக்கோத்தும்பி, திருப்பள்ளியெழுச்சி போன்றவை.

முடிவாக, அனைத்தையும் ஒன்றாக உணர்ந்து, பெரும்பொருளோடு ஒன்றுபட்டு அமைந்த குறைவிலாது எழுந்த நிறையனுபவத்தால் தோன்றிய திருவாசகப் பதிகங்கள் சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், போற்றித் திருவகவல், அற்புதப்பத்து, பிடித்தபத்து, திருவார்த்தை, யாத்திரைப்பத்து போன்றவை.

இந்நான்கு வேறுநிலைகளின் இடைப்பட்ட நிலைகளில் விளைந்த திருப்புலம்பல், ஆசைப்பத்து, புணர்ச்சிப்பத்து போன்ற திருவாசகங்களும் உண்டு. துன்பம் மிகுதியும், இடைஇடையே இன்பவாழ்வும் கலந்த வாழ்வின் அனைத்து நிலைகளிலும், நம்மை உருக்கி, நெறிப்படுத்தும் திருவாசகங்களில் நமக்கான விடியலைக் காணலாம்.

அடியவர்கள் அனைவருக்கும் பேரின்பம

வலிமைமிக்க பழம்பெருநகர்களான முப்புரங்களையும், தன்னுடைய எழில்மிக்க அழகிய நகைப்பினாலேயே எரித்து வீழ்த்தி, இந்திரன் உள்ளிட்ட தேவர்களைக் காப்பாற்றினான் இறைவன்; அப்பேரருள் செயலைப் போன்று, இறைவன் எம்மை ஆட்கொண்டபோது, அடிமைச் சிறுவீடுகளில் வசிக்கும் தன்னுடைய அடியவர்கள் ஒருவர்கூட விடுபட்டுப் போகாமல், தன்னுடைய அருள் என்னும் பெருந்தீயினால் ஆட்கொண்டு, தன்னுடன் ஒன்றாக்கிக்கொண்டான் என்கிறார் மணிவாசகப் பெருமான்.

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின

வீழ்வித்து ஆங்கன

அருள் பெருந்தீயின் அடியோம் அடிக்குடில

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்

(அண்டப்பகுதி:158-161)

வடமொழி மகாபாரத்தின் அநுசாசந பர்வதத்திலும், யஜூர் வேதத்திலும், சரபோபநிடதத்திலும், மச்சபுராணம், கந்தபுராணம், லிங்கபுராணம் ஆகியவைகளிலும் காணப்படும் இறைவன் திரிபுரம் எரித்த புராணத்தின் சுருக்கம் இது. பெரும்தவம் செய்து, வித்யுமாலி, கமலாட்சன், தாரகாட்சன் ஆகிய மூன்று அசுரர்கள் இரும்பு, வெள்ளி, தங்கத்தாலான பறக்கும்திறன்கொண்ட முப்புரங்களைப் பெற்றனர்; அவைகளை, இந்திரனால் பெரும்படைக்கலங்களைக் கொண்டும் அழிக்க முடியவில்லை; தேவர்கள் அனைவரும் மகாருத்திரரைச் சரணடைந்து, முப்புரங்களை அழித்து, தங்களைக் காக்க வேண்டினர்.

மகாருத்திரர், திருமாலை அம்பாகவும், அக்கினியை அதன் பல்லாகவும், எமனை அதன் இறகாகவும், வேதங்களை வில்லாகவும், சாவித்திரியை வில்லின் நாணாகவும், தேவர்களைத் தேராகவும், நான்முகனைத் தேர்ப்பாகனாகவும் கொண்டு, மூன்று பல்லம்புகள் கொண்ட ஒரே அம்பினால் ஒரே நேரத்தில் திரிபுரங்களையும் தகனம் செய்தார். அந்த மூன்று அசுரர்களில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் ஏற்றுக்கொண்டார்.

சைவசித்தாந்த உயிர்த்தத்துவம்

ஆணவம்(அறியாமை) என்னும் மூலமலத்தால் கட்டுண்டு செயலற்றதன்மையில் கிடக்கும் உயிர்களை மீட்கக் கருணை கொண்டான் இறைவன்; உயிர்களின் ஆணவமலத்தை நீக்க, மாயையிலிருந்து இவ்வுலகத்தையும், உயிர்கள் வாழ்வதற்கான பொறி,புலன்களுடன் கூடிய உடல்களையும் படைத்து, செயல்களைச் செய்ய வைத்து, உயிர்களின் அறிவுப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறான்.

இவ்வாறு, உயிர்களைக் கட்டிய மூன்று கட்டுகளான ஆணவம், மாயை, கன்மம் என்பவையே சைவசித்தாந்த தத்துவத்தில் ‘மும்மலங்கள்’ என அழைக்கப்படுகின்றன. மாயை, கன்மம் வழியாகப் பயணிக்கும் உயிர், தன்னை உணர்ந்து, தன் தலைவனாம் இறைவனிடம் அடைக்கலமாகிறது; இறைவன் அருளால் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களும் நீங்கி, முழுவிடுதலை அடைந்து, இறைவனுடன் இரண்டறக்கலந்து பேரின்பம் அடைகின்றது.

சித்தாந்தமும் புராணமும்

மாயையால் உருவான இந்திரியங்களுடன் (பொறி-புலன்களுடன்) கூடிய உடலை நிர்வாகம் செய்யும் உயிரே ‘இந்திரன்’ என்னும் தத்துவம். மும்மலங்களே ‘முப்புரங்கள்’ என்னும் தத்துவங்கள். முப்புரங்களின் (இந்திரியங்களின்) பிடியில் சிக்கிய இந்திரன் என்னும் உயிர் தன்னைக் காக்க இறைவனிடம் சரணடைகிறது; கருணை என்னும் அழகிய புன்னகையுடன் இறைவன் உயிரை நெருங்கி, அறியாமை உள்ளிட்ட மும்மலங்களையும் நீக்குகிறான்; இதுவே முப்புரங்கள் எரித்து அழிக்கப்படும் தத்துவம்.

மும்மலங்கள் நீங்கிய உயிர்கள் என்றும் இறைவனிடம் பேரின்பத்தில் திளைத்து நிற்கும். போர் செய்யத் தேவர்கள் செய்து கொடுத்த தேரைப் பயன்படுத்தாமல், தன்னுடைய எழில் நகைப்பினால் முப்புரங்களை சிவபெருமான் எரித்தான் என்பது, மும்மலங்களிலிருந்து விடுதலை பெற, தன் முனைப்பினால் உயிர்கள் செய்யும் புலனடக்கத் தவங்கள் பயன்படாமல்போக, இறைவனின் அருளாலேயே, உயிர்கள் மும்மலநீக்கம் பெற்றமைக்கு உவமையாயிற்று.

அறிவுசால் முதலமைச்சராய் இருந்த மணிவாசகர் இறைவனிடம் பெற்ற ஞானத்தால், திரிபுர தகனம் என்னும் முப்புரம் எரித்த புராணத்தின் தத்துவப்பொருளை உவமை காட்டி, அடியவர்கள் அனைவரும் அருள்பெற்றதை எவ்வளவு எளிதாக சொல்லிச் செல்கிறார் என்று வியக்கிறோம். தத்துவத்தை விளக்குவதற்காக உவமையாக எழுந்த புராணங்களில், கால ஓட்டத்தில் அறிவுக்குப் புறம்பான கற்பனைகள் பல கலந்து மக்களிடையே வழங்கிவரலாயின; திருவாசகத்தில், இப்புராணங்களுக்கான தத்துவவிளக்கங்கள், பகுத்தறிவுக்கு ஏற்ற உவமைகளுடன், தகுந்த இடங்களில் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.

உலகச் சிற்றின்பங்களினால் விளையும் தீங்குகளை எடுத்துக்காட்டி, இச்சோதனைகளுக்கு இடையில் இறைவன் தம்மைக் கைவிடாமல் ஆதரிக்க விண்ணப்பம் செய்யும் மணிவாசகரின் திருவாசகங்கள், சாமானியரான நமக்காகப் பிறந்தவை; அத்திருவாசகத் தேன் சுவைக்கக் காத்திருப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x