Last Updated : 29 Dec, 2016 10:42 AM

 

Published : 29 Dec 2016 10:42 AM
Last Updated : 29 Dec 2016 10:42 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு

உடல், பொறி, புலன்களில் கட்டுப்பட்டு, புறஉடலையே முழுவதும் பார்க்கமுடியாத நமக்கு, முகம் பார்க்கவே ஒரு நிலைக்கண்ணாடி தேவை; நம்உயிருக்கோ, தன்னை அறிய குரு என்னும் அறிவுக்கண்ணாடி தேவை; உடல் முழுவதையும் காண, முன்னும்,பின்னுமாக இரண்டு நிலைக்கண்ணாடிகள் தேவை; மனிதன் முழுமை பெற, குருவருளும், இறையருளுமான இரண்டு அறிவுக்கண்ணாடிகள் வேண்டும். மணிவாசகரோ, இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு பெற்றார். கருவிலேயே இறையருள்பெற்று, சிறந்த கல்வி, கேள்வியறிவும், முதலமைச்சராக உலக அனுபவமும், கவிஞராகப் படைப்பனுபவமும் கொண்டு திகழ்ந்த மணிவாசகரைத் திருவாசகம் தேர்ந்தெடுத்தது.

இறைவனின் திருக்காட்சி

மணிவாசகரை எதிர்பார்த்துத் திருப்பெருந்துறையில் மனிதவடிவில் குருவாகக் காத்திருக்கிறான் இறைவன். படை, பரிவாரங்கள்சூழ, குதிரை வாங்குவதற்காக திருப்பெருந்துறை வந்த பாண்டியநாட்டின் முதலமைச்சர் திருவாதவூரர், நொடிப்பொழுதில் மணிவாசகரானார்.

கருணையின் பெருமை கண்டேன் காண்க

புவனியில் சேவடி தீண்டினான் காண்க

சிவன் என யானும் தேறினன் காண்க – (அண்டப்பகுதி:60-63)

தவத்தால், அன்பால், முயற்சியால் தேடிச்சென்று அடையவேண்டிய பொருளே இறைவன் என்று அதுவரைக் கருதியிருந்த கல்விமானான முதலமைச்சர் திருவாதவூரார், கருணையால் இப்பூமியில் தன் திருவடிகளைப் பதித்த பரம்பொருளை, ‘சிவபெருமான்’ என்று ஒருவாறு தெரிந்து, தான் தேறியதாகக் கூறுகிறார்.

முதலமைச்சர் மாணிக்கவாசகரானார்

குருவாகத் தோன்றிய இறைவனை மனிதரென்றே முதலில் கருதிய முதலமைச்சர் திருவாதவூரர், அக்குருவின் ஈர்ப்புச்சக்தி தம்மை முழுவதும் ஆட்கொள்வதை உடனடியாகக் கண்டுகொண்டார்; இத்தகைய ஆற்றல்மிக்க ஈர்ப்பு அதிர்வுகளை எந்த மனிதனாலும் உருவாக்க இயலாது என்பதை உள்ளுணர்வினால் உணர்ந்துகொண்டதால், ‘சிவன் என யானும் தேறினேன் காண்க’ என்றார். இறைக் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு, குருவின் தாள்பணிந்து, உபதேசம் பெற்று மாணிக்கவாசகர் ஆனார். காளைவாகனமுடைய, திருப்பெருந்துறையில் உறையும் மனவாசகம் கடந்த இறைவன், மணிவாசகருக்குத் தன்னைத் தான் என்பது அறியாது, பகல் இரவுஆவதும் அறியாது, உன்மத்தனாக்கி ஆண்டுகொண்டார்; இந்த முதல் அனுபவத்தை உயிருண்ணிப்பத்துப் பதிகத்தில் ஒரு திருவாசகம் அழகாகக் கூறுகிறது.:

எனை நான் என்பது அறியேன்; பகல் இரவாவதும் அறியேன்;

மனவாசகம் கடந்தான் எனை மத்தோன் மத்தனாக்கிச்

சினமால் விடைஉடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்

பனவன் எனைச் செய்த படிறு அறியேன் பரஞ்சுடரே! – திருவாசகம்: 34-3

மணிவாசகரின் திருவாசகம், பதிகத்துக்குப் பத்துப்பாடல்கள் என்றில்லாமல், ஊற்றாகப் பெருக்கெடுத்த மணிவாசகரின் இறையனுபவங்களுக்கு ஏற்ப, பத்துப்பாடல்களுக்குக் குறைவாகவோ, பத்துப்பாடல்களாகவோ, பத்துக்கும் அதிகமாகவோ அமைந்தன.

கல்வி, கேள்வி, உலக அறிவு போன்றவற்றால் உருவான ‘திருவாதவூரர்’, இறையன்பில் கரைந்து, காணும் அனைத்திலும், நீக்கமற நிறைந்த கடவுளைக் காணும் மணிவாசகரானார். இறைவனைப் பூசிக்க மலர் பறிக்க முற்பட்டால், ‘பார்க்கின்ற மலர் ஊடும் நீயே இருத்தி’ என்ற தாயுமான சுவாமிகளின் நிலையும், ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா’ என்ற பாரதியின் நிலையும் இதற்குச் சான்று.

இறைவன் பெரிதினும் பெரியவன்

குளியலறையில் இருந்தால், படுக்கையறையைப் பார்க்க முடியாத ‘நான்’ என்னும் உணர்வுடைய உடலில் வாழும் உயிருக்குப் புலனாகாதவன் இறைவன். திருவடிப்பேறு கிட்டி, இறைக்காட்சி வசப்பட்டதும் இறைவன் மட்டுமல்ல, இப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களுமே, உள்ளும் புறமுமாக, ஒரே நேரத்தில் மணிவாசகர் கண்களுக்குப் புலப்படுகின்றன. இதுவரை அவர் கண்ணால் கண்டுஅறிந்திராத, தொடர்ந்து விரிவடையும் இப்பிரபஞ்சத்தில் (Ever-Expanding Universe), எண்ணற்ற கோடிக்கணக்கான உருண்டைவடிவப் மிகப்பெரிய பெருங்கோள்களைத் காண்கிறார்; அக்கோள்கள் ஒன்றனை ஒன்று மோதிக்கொள்ளாமல், இயற்பியல் விதிகளின்படி, அவை, அவற்றின் நியமப்பாதையில் இயங்கும் அழகு, கண்ணுக்கு வளமையான காட்சி என்று வியக்கிறார் பெருமான்.

எம் இறைவனின் விஸ்வரூப தோற்றத்தை ஒப்பிட, அத்தகைய மாபெரும் பிரபஞ்சம் என்னும் அண்டப்பகுதியில் மிதக்கும் பிரம்மாண்டமான உருண்டைவடிவக் கோள்கள் மிகச் சிறிய துகள்களாகக் காட்சியளிக்கின்றன; எதைப்போல் என்றால், ஓலைவேய்ந்த வீட்டுக்கூரையின் சிறியதுளை வழியே நுழையும் சூரியஒளிக்கற்றையில் மிதக்கும் மிகநுண்ணிய தூசுகளைப்போல மிகச்சிறியனவாகத் தெரிகின்றன என்கிறார் பெருமான். பெரிதினும் பெரியவனான பரம்பொருளாம் சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய உருண்டைவடிவக் கோள்களுடன் ஒப்பிட்டு அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் மாணிக்கவாசகர்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பு அரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

இல் நுழைக் கதிரின் துன் அணுப் புரைய

சிறியவாகப் பெரியோன் தெரியின் – (அண்டப்பகுதி:1-6)

நாம் வாழும் பூமிப்பந்து உள்ளிட்ட ஒன்பது கோள்களைக் கொண்ட சூரிய மண்டலத்தைப் போல, பல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் பால்வெளியில் உள்ளன என்றும், பால்வெளியைப் போல் பல்லாயிரக்கணக்கானவை அண்டவெளியில் உள்ளன என்றும், அண்டத்தின் விளிம்பு, ஒளி அலைகளின் வேகத்தைவிட எல்லாத்திசைகளிலும் விரிவடைந்துகொண்டே செல்வதால் விரிவடையும் அண்டம் என்றும் இன்றைய வானியல் அறிவியலாளர் கூறுகின்றனர். இத்தகைய வியத்தகும் வானியல் அறிவியல் உண்மைகளை, போகிற போக்கில் மிக எளிதாகக் கூறிவிட்டார் மாணிக்கவாசகர்.

அண்டப்பகுதி இவ்வாறு விரிந்து செல்வதை மணிவாசகப் பெருமான் ‘பிறக்கம்’ என்றும் ‘விரிந்தன’ என்றும் குறிப்பிட்டார். எதை அறிந்தால் அனைத்தையும் அறிவோமோ, அதை அறிந்த மணிவாசகருக்கு, எந்த அறிவியற் கருவியின் உதவியுமில்லாமல் இம்மாபெரும் காட்சியை நுட்பமாகவும், விரிவாகவும் நான்காம் நூற்றாண்டிலேயே கூறமுடிந்தது. வாலறிவனாம் இறைவனை அறிந்த மணிவாசகருக்கு இது இயல்பாக முடியக்கூடியதே! திருவாசகத்தின் இந்தப் பதிவை வைத்துத் தமிழர்கள் நான்காம் நூற்றாண்டிலேயே வானியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் அறிந்து வைத்திருந்தார்கள் என்று கருதுவது தவறாகவே முடியும்.

எல்லைகாண முடியாததாய் விரிந்துகொண்டே இருக்கும் பேரண்டப்பகுதியின் பருண்மை வடிவத்தை உலகோருக்குக் காட்சிப்படுத்திய மணிவாசகப்பெருமான், அத்துணைப்பெரிய பேரண்டக் கோள்களும் நுண்ணிய தூசுகளைப் போல சிறியது (‘இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய’) என்று சொல்லுமளவு ஒப்பீட்டில் இறைவன் பெரியவனாக இருக்கிறான் என்று பிரபஞ்சத்தினும் பெரிதான இறைவனின் வடிவத்தை நமக்கெல்லாம் அற்புதமாகக் காட்சிப்படுத்துகின்றார். சிவபெருமானின் விஸ்வரூபக் காட்சியின் பல்வேறு பரிமாணங்களையும் இன்னும் சில வாரங்கள் தொடர்ந்து தரிசிப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x