Last Updated : 15 Dec, 2016 10:33 AM

 

Published : 15 Dec 2016 10:33 AM
Last Updated : 15 Dec 2016 10:33 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 08: மண்புகுந்து மனிதரை ஆட்கொண்டான்

வாழ்வில் ஒருவருக்கு எது எப்போது நடைபெறும் என்பது முன்பே விதிக்கப்பட்டுவிட்டது என்றால் மனித முயற்சியும், உழைப்பும் எதற்கு, இறை வழிபாடுகூட எதற்கு என்ற கேள்விக்கு விடைகாணும் திருவாசகத் தேனை இப்போது காண்போம்.

விதியை வெல்ல மனிதனுக்குச் சுதந்திரம்

ஒருவருக்கு மிக மோசமான சூழலில் பிறப்பு அமைவது அவர் முன் செய்த வினைப்பயன். தன் பெற்றோரை, தன் பிறவிச் சூழலைத் தேர்ந்தெடுக்கும் உரிமையின்மை, மனிதருக்குச் சுதந்திரம் இல்லாததை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், பிறந்த பின் செயலாற்றுவதற்கு உயிர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு என்கின்றன நம் திருமுறைகள். விளையாட்டுத் துறையில் உயர்ந்த வாய்ப்புக் கிடைத்த ஒருவர் சிறப்பாக உழைத்து ‘பாரத் ரத்னா’ வாங்கும் நிலைக்கு உயர்வதோ அல்லது முறையற்ற வழியில் கிடைக்கும் பெரும்பொருளுக்கு ஆசைப்பட்டு, சூதாடி சிறை செல்வதோ அவரின் சுதந்திரம்.

மாற்றுத் திறனாளியாகப் பிறந்தாலும், உழைத்து, பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதோ அல்லது அவ்வாறு பிறந்துவிட்டோமே என்று வருந்தியே காலத்தை முடிப்பதோ அவரவர் சுதந்திரமே. திருநீலகண்டரைப் போன்று, திருக்குறிப்புத் தொண்டரைப் போன்று, பெற்ற பிறவியைப் பயன்படுத்தி, இறைக்காதல் தொண்டு செய்து, நாயனாராக உயரலாம்; அல்லது உலக-உடலின்பங்களில் மட்டும் ஈடுபட்டு, வினைகளைப் பெருக்கித் துன்பமடையலாம் என்பதும் உயிர்களின் சுதந்திரமே.

இறைவனின் கருணை

இத்தகைய சுதந்திரத்தை உயிர்களுக்குத் தந்த இறைவன், அறிவு தரும் ஐந்து பொறி-புலன்களுடனான உடலும், மனதும், நினைவும் தந்துவிட்டு எங்கோ வானத்தில் நம்மையெல்லாம் விட்டுவிட்டு ஆனந்தமாக இருக்கிறானா என்றால் அதுதான் இல்லை என்கிறார் மணிவாசகர். குழந்தையை விளையாட்டு மைதானத்திலே சுதந்திரமாக விளையாட விட்டுவிட்டுச் சற்றுத் தொலைவில் இருந்து தாய், தந்தையர் கவனித்துக்கொள்வார்கள்; இறைவன் அவர்களைவிடப் பன்மடங்கு கருணையானவன். நம் ஊன், உடம்புகுள்ளே புகுந்து, நாம் அறியாவண்ணம் நம்மைக் கவனித்துக்கொள்கிறான் என்று குயிலிடம் சொல்கிறார் மணிவாசகர்.

“தேன்பழச் சோலை பயிலும் சிறுகுயிலே! நீ இதைக் கேள்! நம் இறைவன் வானத்தை உதறிவிட்டு, இந்த மண்ணுலகுக்கு வந்து மனிதர்களை ஆட்கொள்ளும் வள்ளல்; மனிதர்கள் நல்லபடியாக ஞானமும் கல்வியும் பெற வேண்டுமே என்ற கருணையால் இவர்களின் ஊன்-உடம்பில் கலந்து மறைந்து வாழும் இறைவனை, நான் சற்றே தேடத் தொடங்கியதும், கருணையால் அன்பு பொங்க, என் ஊன்-உடலை உதறிவிட்டு, என் உள்ளம் புகுந்து, என் உணர்வோடு உணர்வாகக் கலந்துவிட்டான்; மானின் பார்வையிலும் இனிமையான பார்வையையுடைய உமாதேவியின் மணாளனை என்னிடம் வரச் சொல்லிக் கூவுவாயாக!” என்று குயிலைத் தூதுவிடும் அழகு தமிழ் மணிவாசகம் சுவைப்போம்:

தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே! இது கேள் நீ,

வான் பழித்து, இம் மண் புகுந்து, மனிதரை ஆட்கொண்ட வள்ளல்;

ஊன் பழித்து, உள்ளம் புகுந்து, என் உணர்வு அது ஆய ஒருத்தன்;

மான் பழித்து ஆண்ட மென் நோக்கி மணாளனை நீ வரக் கூவாய்!திருவாசகம்:18-4

எளிய மனிதர்களை ஆட்கொள்ளுவதற்காக இறைவனே வான் பழித்து, மண்ணுலகிற்கு வந்தான் என்கிறார் மணிவாசகர்; நாம் பணக்காரனாக, அறிவாளியாக, தாசில்தாராக, அதிகாரியாக, கல்விமானாக, ஞானிகளாக, பேராசிரியர்களாக, அர்ச்சகர்களாக, பண்ணையாராக, வேத விற்பன்னராக இன்னும் எது எதுவாகவோ இருக்கிறோம்; மனிதராக இல்லை; இத்தகைய செருக்கில் இருக்கும் நமக்கு இறைவன் வசப்பட மாட்டான் என்று சொல்லாமல் சொல்கிறார் மணிவாசகர். நாம் எது எதுவாகவோ இருக்கிறோம் என்ற நினைப்பில் இருந்து இறங்கி, நம் மனங்களை அன்பினால் நிறைத்து மனிதர்களாகி, நம் எளிய சக-மனிதர்களின் துயரங்களை நீக்கத் தொண்டு செய்யும்போது, அத்தொண்டின் வடிவத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்படுவோம்.

மனிதப்பிறவியை மதிப்போம்

நாம் இறைக் காதலால் மனிதர்களுக்குச் செய்யும் திருத்தொண்டால் மனித குலம் அறிவில், ஆள்வினையில், வாய்மையில், இன்பத்தில் செழித்துக் குலுங்க வேண்டும்; “வாய்த்தது-நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடு மின்” என்ற அப்பர்பெருமானின் ஆணையை நிறைவேற்றுவோம். இன்னாததாக, துன்பம் நிறைந்ததாக இருக்கும் உலகத்தை உழைப்பால், தொண்டால் இனிமையாக்குவது மனிதனின் கடமை. “இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்க” என்கிறது புறநானூறு. நம் அன்புத்தொண்டு துன்பத்தை மாற்றும்; வாழ்க்கை செழிக்கத் தடையாயுள்ள கேடுகளைக் களையும். இதன்மூலம் இறைவனின் அருள் நமக்குக் கிடைக்கும்.

தனக்குச் சுற்றமும் விதியும் தானே

ஒருவருக்கு வரும் நன்மை, தீமைகளுக்கு, அவர் செய்யும் செயல்களே காரணம் என்பதால் அவருக்குச் சிறந்த நண்பரும் உறவினரும், பகைவரும் அவரே. ஆதலால், “அடியவர்களே, நீங்கள் எல்லோரும், நாம் யார், எம்முடையது என்பது யாது, எம்மைப் பிடித்த அறியாமையாம் பாசம் எது, இவையெல்லாம் என்ன மயக்கங்கள் என்று உணர்ந்து, இவை நம்மை விட்டு நீங்க, இறைவனுடைய பண்டைத் தொண்டரொடும் சேர்ந்து, இறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக்கொண்டு, திருத்தொண்டு செய்வதன் மூலம் பொய் வாழ்வை நீத்து, எமையாளும் பெருமானின் பொன்திருவடியின் கீழ் போய்ச்சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்” என்று அருளினார் மணிவாசகர்.

தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதி வகையும்;

யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்? என்ன மாயம்? இவை போக,

கோமான் பண்டைத் தொண்டரொடும், அவன் தன் குறிப்பே குறிக்கொண்டு,

போம் ஆறு அமைமின் பொய் நீக்கி, புயங்கன் ஆள்வான் பொன் அடிக்கே. - திருவாசகம்:45-3

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’’ என்றார் கணியன் பூங்குன்றனார். நாம் நம்மை அறிவதற்காகவே இறைவனால் தரப்பட்ட உடல் உலகம் தொடர்ந்து மாற்றங்களை அடையும். அவை நிலையாமை உடையவை. அவற்றிடம் வைத்த கடும்பற்று நீங்கி, இறைவனிடம் இணைய வேண்டும் என்பதை அறிவுறுத்தவே, 'யாமார்? எமதார்? பாசமார்? என்ன மாயம்' என்று அருளினார் மணிவாசகர்.

கற்றதனால் வரும் பயன் பெறுக!

மனிதப் பிறவிக்கு வந்த உயிர்கள் அனைத்தும் வீடுபேறு எய்த வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளக் குறிப்பாகையால், ஆறாம் அறிவாம் பகுத்தறிவைத் தந்துள்ளான்; மனிதர்கள் அனைவருக்கும் 'இறைவனின் குறிப்பே குறிக்கொண்டு பொன்னடிக்கே போமாறு அமைமின்' என்று அறிவுறுத்துகிறார் பெருமான்.

சிவனடியார் கூட்டத்தில் இருப்பதே இறைவனை அடையச் சிறந்த வழி என்பதைச் சொல்லவே ‘கோமான் பண்டைத் தொண்டரொடும்’ என்றது மணிவாசகரின் அனுபவ அறிவுரை. தொண்டின் மேன்மை உணர, இறைவன் நம்முள் கலந்தது எப்போது என்பதைப் பற்றி விளக்கும் திருவாசகங்களை அடுத்த வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x