Last Updated : 13 Jul, 2017 10:09 AM

 

Published : 13 Jul 2017 10:09 AM
Last Updated : 13 Jul 2017 10:09 AM

பைபிள் கதைகள் 58: ஓர் ஆயன் அரசனாய் ஆனார்!

ஆடு மேய்ப்பவன் அரசனாக முடியாது என்ற பழமொழி இன்னும் நம் மத்தியில் இருக்கிறது. கடவுள் முடிவு செய்துவிட்டால் எதுவும் சாத்தியம் என்பதற்கு தாவீதே உதாரணம். ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் கடைக்குட்டியாக பல சகோதரர்களுடன் பிறந்து தனது தந்தையின் ஆடுகளைப் பொறுப்புடன் வளர்த்து வந்தவர். விலங்குகளும் கள்வர்களும் ஆடுகளை வேட்டையாட வந்தபோது உயிரைத் துச்சமாய் மதித்துப் போரிட்டு அவற்றைக் காப்பாற்றுவதில் பெயர்பெற்றவராக இருந்தார்.

மேய்ந்து வயிறு நிறைந்த ஆடுகள் களைப்புடன் மரநிழலில் ஓய்ந்து படுத்திருக்கும்போது, சற்று இளைப்பாறுவதற்காக தன் யாழிலிருந்து இனிய இசையை மீட்டுவதில் தேர்ந்த இசைக்கலைஞராகவும் விளங்கினார். அப்படிப்பட்ட தாவீது, இஸ்ரவேல் பெரும்படைக்குச் சவாலாக விளங்கிய பெலிஸ்திய மாவீரன் கோலியாத்தை ஒரேயொரு சிறு கூழாங்கல் கொண்டு வீழ்த்தினார். அதன்பிறகு பேரரசன் சவுலுக்காகப் பல போர்களை வென்று தந்து, மக்கள் போற்றும் வீரனாக மாறினார்.

ஆனால் அவர் கொண்டு வந்த வெற்றிகளையும் மக்கள் மத்தியில் அவருக்கு உருவான செல்வாக்கையும் கண்டு தாவீதைக் கொல்லத் துரத்தினார் அரசன். இதனால் நாடோடியாக ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய நிலை தாவீதுக்கு உருவானது.

பூனைபோல் பதுங்கிவந்த இருவர்

தாவீதை எப்படியாவது கொன்று போட்டுவிடவேண்டும் என்று சவுல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார். அதனால் தனது போர் வீரர்களில் மிகத்திறமை வாய்ந்த மூவாயிரம் பேரை அழைத்துக்கொண்டு தாவீதைத் தேடி ரகசியமாகப் புறப்பட்டார். இது தாவீதின் காதுகளுக்கு வந்தபோது, சவுலும் அவருடைய ஆட்களும் முகாமிட்டிருக்கும் இடத்தைக் கண்டறிய தன் உளவாளிகளை அனுப்பினார்.

அவர்கள் திரும்பி வந்து சவுல் முகாமிட்டிருக்கும் இடத்தைக் கூறினார்கள். தாவீது தன்னுடைய தலைசிறந்த வீரர்களில் இருவரைப் பார்த்து, “உங்களில் யார் என்னுடன் சவுலின் முகாமிற்கு வர விருப்பமாய் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அபிசாய், “நான் வருகிறேன் மாமா” என்றான். தாவீதின் சகோதரி செருயாவின் இளைய மகன்தான் இந்த அபிசாய். அன்றைய இரவில் சவுலும் அவருடைய வீரர்களும் ஒரு மலைகுன்றின் அடிவாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

தாவீதும் அபிசாயும் சத்தமில்லாமல் பூனையைப் போல் அடிமேல் அடி வைத்து மெதுவாக சவுலின் முகாமிற்குள் ஊடுருவி, அவரது கூடாரத்துக்குள் நுழைந்தார்கள். சவுல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அவரது தலைமாட்டில் பாதுகாப்புக்காக அவர் வைத்திருந்த ஈட்டியையும் அவருடைய தண்ணீர் ஜாடியையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் வெளியே வந்து அந்தக் குன்றின் மீது ஏறிக்கொண்டார்கள். சவுலோ அவருடைய பாதுகாவலர்களோ மற்ற மூவாயிரம் வீரர்களோ தாவீதையும் அபிசாயியையும் பார்க்கவுமில்லை; அவர்களது அரவத்தை உணரவும் இல்லை.

மீண்டும் வாய்ப்புக் கொடுத்த தாவீது

பொழுது விடிய இன்னும் சிறிது நேரமே இருந்தது. அடிவாரத்தில் எல்லோருக்கும் முன்பாக சவுலின் படைத் தளபதி அப்னேர் விழித்தெழுந்தான். படைத் தளபதியை நோக்கி அவனுக்குக் கேட்கும் விதமாக தாவீது உரக்கப் பேசினார். “இஸ்ரவேலின் தளபதி அப்னேரே, நீ ஏன் உன்னுடைய எஜமானரும் ராஜாவுமாகிய சவுலுக்கு உரியப் பாதுகாப்பு கொடுக்கவில்லை? அவருடைய ஈட்டியும் தண்ணீர் ஜாடியும் எங்கே இருக்கிறதென்று போய் பார்!” என்றார்.

தாவீதின் கணீர் குரல் மூளைவரை சென்று ஒலித்ததில் அரசன் சவுல் திடுக்கிட்டு விழித்துக்கொண்டார். தாவீதின் குரலை அடையாளம் கண்டுவிட்ட சவுல், “ தாவீதே, குரல் கொடுத்தது நீ தானா?” என்று கேட்டார். அதற்கு தாவீது, “ஆம், என் ராஜாவாகிய எஜமானே. உங்கள் தாவீதுதான். ஏன் என்னைக் கொல்வதற்குக் கிடையாய் கிடந்து இப்படி அலைகிறீர்கள்? நான் உங்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தேன்?” என்று கேட்டார். அதற்கு அரசனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. அங்கே கள்ள மவுனம் நிலவியது.

பிறகு தாவீது மீண்டும் சத்தமாக, “ ராஜாவே, உம்முடைய உயிரைக் காக்கும் என நீர் நம்பி உம் தலைமாட்டில் வைத்திருந்த ஈட்டி, இதோ இங்கே என்னிடம் இருக்கிறது. உமது தண்ணீர் ஜாடியும்தான். உம்முடைய வீரர்களில் ஒருவனை அனுப்பும். அவன் வந்து அவற்றை எடுத்துக்கொண்டு போகட்டும்” என்றார். இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த சவுல், “ மீண்டும் நான் தவறு செய்துவிட்டேன், முட்டாள்தனமாய் நடந்து கொண்டுவிட்டேன்” என ஒப்புக்கொண்டு மீண்டும் நாடகமாடினார். அரசனின் குரலில் பொய்மை தேன்போலத் தோய்ந்திருந்தது.

எதிரிகளிடம் தஞ்சம்

அதன்பின் சவுலை நம்பாத தாவீது அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். சவுல் அரண்மனைக்குத் திரும்பினார். ஆனால் என்றாவது ஒரு நாள் சவுல், அரசன் என்னைக் கொன்றுபோட சமயம் பார்த்துக்கொண்டிருப்பார். அதனால் இனியும் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டாம் என்று முடிவுசெய்த தாவீது, பெலிஸ்தரின் நாட்டுக்குச் சென்றார். தங்களின் தன்னிகரற்ற மாவீரன் கோலியாத்தை வீழ்த்திய தாவீது தங்களிடம் வந்து அடைக்கலம் கேட்டதும் பெலிஸ்தர்கள் மறுக்காமல் கொடுத்தார்கள்.

தாவீது பெலிஸ்தர்களின் வெற்றிகளுக்காக உழைப்பேன் என்று கூறியதை அவர்கள் நம்பினார்கள். சில காலத்துக்குப் பின் பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் மீது மீண்டும் படையெடுத்து வந்தார்கள். தாவீது தங்கள் பக்கம் இருக்கும் தைரியத்தில் பெலிஸ்தர்கள் ஆக்ரோஷமாய் போர் புரிந்தார்கள். அந்தப் போரில், சவுலும் அவரது மகனும் தாவீதின் ஆருயிர் நண்பனுமாகிய யோனத்தானும் கொல்லப்பட்டார்கள். இதனால் தாவீது மனம் உடைந்து அழுதார்.

நண்பனை இழந்த சோகம் அவரைக் கவிஞனாக மாற்றியது ‘உனக்காகப் பெரிதும் வருந்துகிறேன், என் நண்பனே, சகோதரனே, யோனத்தானே… நீ எனக்கு எவ்வளவு அன்பானவன்! உன்னை இழந்ததை எப்படி நான் நம்புவேன்’ என்று தொடங்கும் பாடலை எழுதி இசைத்துப் பாடினார். இறந்த அரசனுக்காகவும் இளவரசனுக்காகவும் இஸ்ரவேல் மக்கள் துக்கம் கொண்டாடி முடித்தார்கள்.

அரியணைக்கான போர்

சவுலின் மறைவுக்குப் பின், தாவீது இஸ்ரவேல் நாட்டுக்குத் திருப்பி, எப்ரோன் நகருக்குச் சென்றார். சவுலின் மகன் இஸ்போசேத்தை அரசனாக்கச் சவுலுக்கு விசுவாசமாய் இருந்த அமைச்சர்கள் முயற்சித்தார்கள். ஆனால் தாவீதை அரசனாக்க மக்களும் மற்றவர்களும் விரும்பினார்கள். இதனால் இஸ்ரவேலின் அரியணைக்காகச் சகோதரர்களுக்கிடையில் ஒரு போர் நடந்தது.

அதில் தாவீதின் 600 வீரர்கள் வெற்றி பெற்றார்கள். இதன்பிறகு எதிர்ப்பின்றி தாவீது அரசனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு முப்பது வயது. அமைதியாக ஆண்டுகள் பல எப்ரோனில் கடந்துசென்றன. இஸ்ரவேல் மக்கள் அச்சமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். எப்ரோனில் தாவீதுக்கு பல மகன்கள் பிறந்தார்கள். அம்னோன், அப்சலோம், அதோனியா ஆகியோர் அவர்களில் சிலர்.

மேலும் பல ஆண்டுகள் கடந்துசென்றன. தாவீதின் படை விரிவடைந்திருந்தது. அவரது படை எருசலேம் எனும் அழகிய நகரத்தைக் கைப்பற்றியது. அந்தப் போரை, தாவீதின் சகோதரியாகிய செருயாவின் மற்றொரு மகன் யோவாப் தலைமை தாங்கி நடத்திச்சென்று வென்றுவந்தான். அவன் கொண்டுவந்த வெற்றிக்குப் பரிசாக, தாவீது யோவாப்பை இஸ்ரவேலின் படைத் தளபதியாக்கி கவுரவித்தார். இப்போது இஸ்ரவேலின் தலைநகராக எருசலேம் புகழ்பெறத் தொடங்கியது.

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x