Last Updated : 30 Mar, 2017 10:25 AM

 

Published : 30 Mar 2017 10:25 AM
Last Updated : 30 Mar 2017 10:25 AM

பைபிள் கதைகள் 45: கிதியோனும் 300 வீரர்களும்

பணிவும் பரலோகத் தந்தையின் மீது விசுவாசமும் கொண்டிருந்த ஏழை விவசாயியான கிதியோனிடம் கடவுள் பேசினார். மீதியானியர்களின் பிடியிலிருந்து மீள, படைதிரட்டும்படி கூறினார். 32 ஆயிரம் வீரர்களை கிதியோன் திரட்டினார். ‘இத்தனை வீரர்கள் உனக்குத் தேவையில்லை’ என்று எடுத்துரைத்த கடவுள், உயிருக்குப் பயந்தவர்களை வீட்டுக்கு அனுப்பும்படி கூறினார். அவ்வாறு அனுப்பிய பிறகும் 12 ஆயிரம் வீரர்கள் மிஞ்சியிருந்தார்கள். அதனால் “எச்சரிக்கையாக இருப்பவர்களை மட்டும் வைத்துக்கொள். அப்படிப்பட்ட 300 வீரர்கள் உனக்கு போதும்.” என்ற கடவுள், அந்த 300 பேரையும் எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார். கடவுள் சொல்லித்தந்தவாறு நீரோடையில் யாரெல்லாம் சுற்றுமுற்றும் கவனித்தவாறு எச்சரிக்கையுடன் தண்ணீர் அருந்தினார்களோ அவர்களில் 300 பேரைத் தேர்வு செய்த கிதியோன், கடவுளின் அடுத்த கட்டளைக்காகக் காத்திருந்தார்.

போர்த் தந்திரம்

300 பேர் கொண்ட தன் படையணியை தலா 100 பேர் அடங்கிய மூன்று குழுக்களாகப் பிரித்தார். பின்னர் கடவுள் கூறியபடி ஒவ்வொருவருக்கும் ஒரு ஊதுகொம்பும் ஒரு பெரிய மண்பானையும் கொடுக்கப்பட்டது. மண்பானைக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீப்பந்தத்தை மறைத்து வைக்கும்படி கிதியோன் உத்தரவிட்டார். பிறகுத் தன் வீரர்களைப் பார்த்து “நாம் இந்த இரவில் புறப்பட்டு மீதியானியர்களின் முகாமை நோக்கிச் செல்லப்போகிறோம். முகாமின் எல்லையை அடைந்ததும், நான் செய்வதை நன்றாகக் கவனித்து, அதேபோல் நீங்களும் செய்ய வேண்டும். நாம், அவர்களது முகாமைச் சூழ்ந்துகொண்டதும் நான் ஊதுகொம்பை ஊதும்போது நீங்களும் அவரவர் ஊதுகொம்பை எடுத்து ஊத வேண்டும். ஊதிக்கொண்டே ‘இது யகோவாவின் போர்! கிதியோனின் போர்!’ என்று முழங்க வேண்டும்”என்றார்.

கிதியோன் கூறியதைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட 300 வீரர்களும் எதிரிகள் முகாமிட்டிருந்த பாளையத்தின் ஓரம்வரை பதுங்கிச் சென்றார்கள். அப்போது இரவு பத்து மணி ஆகியிருந்தது. மீதியானிய வீரர்கள் அனைவரும் வயிறுமுட்ட மதுவருந்தி, பின் உண்ட களைப்பில் நன்கு கண் அயர்ந்திருந்தனர். அவர்களைத் தாக்குவதற்கு ஏற்ற தருணம் இதுவே என்று எண்ணிய கிதியோன், இப்போது தனது ஊதுகொம்பை எடுத்து ஊதுகிறார். தலைவர் செய்வதைக் கண்டு முகாமைச் சூழ்ந்திருந்த 300 வீரர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

இருளும் குழப்பமும்

300 மண்பானைகளைக் கீழேபோட்டு உடைக்கும்படி கிதியோன் கூற வீரர்கள் அவ்வாறே செய்கிறார்கள். 300 மண்பானைகள் ஒரே நேரத்தில் உடைந்த சப்தம், தலைக்கேறிய போதையுடன் அரைத்தூக்கத்தில் இருந்த மீதியானியர்களைத் திடுக்கிடலுடன் விழித்தெழச் செய்து பீதிகொள்ள வைக்கிறது. 300 ஊதுகொம்புகளும் முழங்க, 300 வீரர்களும் “இது யகோவாவின் போர்! கிதியோனின் போர்!” என்று உரக்கக் கத்தி ஆரவாரம் செய்தனர். அந்த இரவின் அமைதி குலைந்து மீதியானியர்களை திகில் சூழ்ந்துகொள்கிறது. இருள், கண்களுக்குப் பழக்கப்பட நேரமெடுத்ததால், அதிர்ச்சியடைந்த மீதியானியர், யார் எதிரி, யார் நண்பன் என்று அடையாளம் காணமுடியாத குழப்பத்தில் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு தரையில் சாய்ந்து மடிந்தார்கள்.

ஆனால் கிதியோனும் அந்த 300 பேரும் தங்களுடைய இடங்களில் ஆடாமல் அசையாமல் நின்றார்கள். மீதியானியர்களின் பாளைய முகாமில் இருந்தவர்களை அவர்களது குடிப்பழக்கம் என்னும் பலவீனத்தாலேயே கடவுள் முறியடித்தார். இதையும் மீறித் தப்பிச்சென்றவர்களையும் மீதமிருந்தவர்களை 300 வீரர்கள் பிடித்துக் கைதிகளாக்குகிறார்கள். இவ்வாறு கானான் தேசத்தை வெட்டுக்கிளிக் கூட்டம்போல் வேட்டையாடி வந்த மீதியானியர்களின் ஆக்கிரமிப்பு முற்றாகத் துடைத்தெறிப்படுகிறது.

தலைவனின் தாழ்மை

மீதியானியர்களை முறியடித்த வெற்றிக்குப் பின்பு கிதியோனுக்கு புதிய பிரச்சினை வந்தது. இந்தப் போரில் இஸ்ரவேல் மக்களில் ஒரு கோத்திரமாக இருந்த எப்பிராயீம் மக்களை கிதியோன் சேர்த்துக்கொள்ளவில்லை என்று அவர்கள் கோபம் கொண்டார்கள்.

எனவே அவருடன் அவர்கள் சண்டைபோட கோபத்துடன் வந்தார்கள். “மீதியானியர்களோடு போர் செய்ய ஏன் எங்களை அழைக்கவில்லை?” என்று கேட்டு கிதியோனுடன் வாக்குவாதம் செய்தார்கள். ஆனால் அவர் அவர்களிடம், “ உங்களைப் போல நான் பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை. அபியேசரின் வம்சத்தாராகிய எங்களைவிட எப்பிராயீமின் வம்சத்தாராகிய நீங்கள்தான் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறீர்கள்” என்று தாழ்மையாகப் பதிலளித்தார். இதனால் அவர்களின் கோபம் தணிந்தது. இஸ்ரவேல் இன மக்கள் பிரிவுகளுக்கு மத்தியில் சமாதானம் நிலைநாட்டப்பட்டது

இப்போது கிதியோனின் திறமை, பணிவு ஆகிவற்றைக் கண்ட மக்கள், அவரை அரசனாக ஆகும்படி கூறுகிறார்கள். அதற்கு கிதியோன் மறுத்துவிட்டார். மீதியானியரை உண்மையிலேயே வெற்றிகொண்டது யார் என்பதை அவர் மறந்துவிடவில்லை. “நான் உங்களை ஆட்சிசெய்ய மாட்டேன்; என் வாரிசும் உங்களை ஆள மாட்டான்; கடவுளே அரசர். அவரே உங்களை ஆளுவாராக” என்று அவர் கூறி மறுத்துவிடுகிறார். இவ்வாறு மக்களே முடிசூட்ட முன்வந்தும் அந்த விவசாயி அரசனாக விரும்பவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x