Last Updated : 23 Mar, 2017 10:00 AM

 

Published : 23 Mar 2017 10:00 AM
Last Updated : 23 Mar 2017 10:00 AM

பைபிள் கதைகள் 44: கடவுள் தேர்ந்தெடுத்த ஏழை விவசாயி!

நியாயாதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்டு இஸ்ரவேலர்கள் கானானில் வாழ்ந்துவந்த காலம் அது. எகிப்தில் 400 ஆண்டுகள் அடிமைகளாய் இருந்தவர்களை மீட்டு அழைத்துவந்து வாக்களித்தபடியே, கானான் நாட்டைத் தந்த தங்களது கடவுளும் பரலோகத் தந்தையுமாகிய யகோவாவை அவர்கள் மீண்டும் மறந்துபோனார்கள்.

கற்பனையாக உருவாக்கப்பட்ட அந்நிய தெய்வங்களை அவர்கள் சிலைகளாக வழிபடத் தொடங்கினார்கள். இதனால் ஒரு தந்தைக்கே உரிய கோபம் கடவுளுக்கு வந்தது. தனது மக்கள் மீண்டும் மீண்டும் தன்னை மறந்து, தனக்குக் கீழ்ப்படியாமல் தடுமாறித் தவறான பாதையில் செல்வதை அவர் விரும்பவில்லை. அவர்களை அப்படியே விட்டுவிடவும் அவர் விரும்பவில்லை. எனவே அவர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பி, இஸ்ரவேலர்களின் தேசத்தை மீதியானியர்கள் கைப்பற்றி ஆட்சி செய்யும்படிவிட்டார்.

வெட்டுக்கிளிகளைப் போன்றவர்கள் மீதியானியர்களோ வெட்டுக்கிளிகளைப்போல் கூட்டம் கூட்டமாக வந்து கானான் தேசத்தை நிறைத்தார்கள். இஸ்ரவேலர்களிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டார்கள். இஸ்ரவேலர்களின் விளைச்சல், பொருட்கள், ஆடுகள், பசுக்கள், கழுதைகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. எதிர்த்த அனைவரையும் துன்புறுத்தினார்கள். அவர்களின் கொடுமைகளுக்குப் பயந்த இஸ்ரவேலர், மீதியானியர்களின் பார்வை படாத மலைகளிலும் குகைகளிலும் ஒளிந்துகொள்வதற்கான இடங்களைத் தேடிக் கண்டறிந்து அங்கே மறைந்து வாழ்ந்தனர். தானியங்களையும் உணவுப் பொருட்களையும் அவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தனர்.

மீதியானியர்கள் வடிவில்

தங்களை இப்படியொரு பெருந்துன்பம் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதற்கு என்ன காரணம் என்று யோசித்தார்கள். கற்பனை கடவுளர்களை வழிபட்டு, நம் கடவுளாகிய பரலோகத் தந்தையை மறந்துபோனோமே அதுவே காரணம் என்பதை உணர்ந்துகொண்டார்கள். இதனால் தங்கள் கடவுளாகிய யகோவா தேவனை நோக்கி இறைஞ்சத் தொடங்கினர். கடவுள் மனமிறங்கினார். இஸ்ரவேலர்களைக் காக்க, கிதியோன் என்ற ஏழை விவசாயியைத் தேர்ந்தெடுத்தார். அவனிடம் தனது தூதரை அனுப்பி வைத்தார்.

கடவுளுடன் ஒரு சந்திப்பு

ஓப்ரா என்னுமிடத்தில் ஒளிந்து வாழ்ந்துவந்தார் யோவாஸ் என்ற எளிய விவசாயி. அவரது மகன்தான் கிதியோன். திராட்சை ஆலையில் கிதியோன் கோதுமையை அடித்து, பதர்களை விலக்கி தானியங்களை மட்டும் தனியே எடுத்துக்கொண்டிருந்தான். பின்னர் அந்தக் கோதுமையை மீதியானியர் பார்த்துவிடாதபடி ஓக் மரத்தின் அருகே மறைத்துவைத்துக் கொண்டிருந்தான். அப்போது கடவுள் அனுப்பிய தூதர் கிதியோன் முன்பாகத் தோன்றி “ பெரும் வீரனே! கடவுள் உன்னோடிருக்கிறார்!” என்று வாழ்த்தினார்.

தூதர் கூறியதைக் கேட்ட கிதியோன், “கடவுள் எங்களோடிருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள் நேர்கின்றன? எகிப்தில் அடிமைகளாயிருந்த எங்கள் முற்பிதாக்களை அவர் விடுதலை செய்து அழைத்துவந்து, இந்த தேசத்தை அவர்களுக்குத் தரும்வரை அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம். ஆனால், கடவுள் இப்போது எங்களோடு இல்லை; அவர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்கு அனுமதித்தார்” என்று வேதனை பொங்கக் கூறினான்.

அப்போது தூதர் வழியாகப் பேசிய கடவுள் “ உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார். ஆனால், கிதியோன் தயங்கினான். “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரைக் காப்பாற்றுவேன்? மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் வறியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான். அப்போது கடவுள் “நான் உன்னோடிருக்கிறேன்! மீதியானியரை உன்னால் தோற்கடிக்க முடியும்!” என்றார். கிதியோன் கடவுளிடம், “உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் என் மூதாதையரின் கடவுள்தான் என்றால் நான் திரும்பி வரும்வரை எங்கும் செல்லாமல் இங்கே காத்திரும் பிதாவே. நான் போய் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க என்னை அனுமதியும்”என்றான். “நீ வரும்வரை காத்திருப்பேன்” என்றார் கடவுள்.

விரைந்து சென்ற கிதியோன் ஒரு வெள்ளாட்டுக் குட்டியைச் சமைத்தான். மாவை எடுத்துப் புளிப்பின்றி அப்பம் செய்தான். பின் ஓடோடி வந்து ஓக் மரத்தின் கீழே அமர்ந்திருந்த தேவதூதனுக்கு அருகில் அந்த உணவைக் கடவுளுக்காக வைத்தான். தூதர் தன் கையில் வைத்திருந்த கைத்தடியின் முனையால் அந்த உணவுகளைத் தொட, அந்தக் கணத்தில் பாறையிலிருந்து தோன்றிய நெருப்பு இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிட்டது! பின் கர்த்தருடைய தூதரும் மறைந்து போனார். இதைக் கண்டு கிதியோன் பெருமகிழ்ச்சி கொண்டான்.

“சர்வ வல்லமையுள்ள கடவுளே! நீர் அனுப்பிய தூதனை நேருக்கு நேராக நான் சந்தித்தேன்!” என்று ஆனந்தக் குரல் எழுப்பி ஆர்ப்பரித்தான். அப்போது கடவுளின் குரல் “ கிதியோனே அமைதியாயிரு!” என அவனைச் சாந்தப்படுத்தியது. மூதாதையர்களின் கடவுளாகிய யகோவா தம் மக்களை மறக்கவும் இல்லை; கைவிடவும் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட கிதியோன், அவரை ஆராதிப்பதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். அதற்கு ‘கர்த்தரே சமாதானம்’ என்று பெயரிட்டான். அதற்குமுன் கற்பனை தெய்தவங்களுக்காக கட்டப்பட்ட எல்லாப் பலிபீடங்களையும் இரவோடு இரவாக உடைத்துப்போட்டான்.

300 வீரர்கள்

இப்போது மீதியானியர்களை எதிர்த்துப் போர் புரிவதற்காக ஒரு படையைத் திரட்டும்படி கிதியோனிடம் கடவுள் கூறினார். எனவே கிதியோன் 32 ஆயிரம் போர் வீரர்களைத் திரட்டினான். ஆனால், எதிரிகளின் படையிலோ 1 லட்சத்து 35 ஆயிரம் மீதியானிய வீரர்கள் இருந்தார்கள். கடவுள் கிதியோனை அழைத்து, “ நீ திரட்டிய படையில் அளவுக்கதிகமான வீரர்கள் இருக்கிறார்கள்” என்றார். இதைக் கேட்டு கிதியோன் ஆச்சரியப்பட்டான். மீண்டும் அவனிடம் பேசிய கடவுள், “ உன் படையில் இருப்பவர்களில் உயிரை எண்ணி அஞ்சுகிற அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிடு” என்றார். அவ்வாறே கிதியோன் உயிர் பயம் கொண்டவர்கள் போய்விடலாம் என்று சொன்னதும் 22 ஆயிரம் வீரர்கள் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார்கள். இப்போது எதிரிகளின் பெரும்படைக்கு முன்னால் போர் செய்ய கிதியோனிடம் 10 ஆயிரம் வீரர்கள் மட்டுமே இருந்தார்கள்.

தண்ணீர் குடிக்கும்போது கவனி!

இப்போதும் கடவுள் மீண்டும் கிதியோனிடம், “இன்னும் உன்னிடம் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே அவர்களை அழைத்துச்சென்று நீரோடையிலிருந்து ஓடிவரும் தண்ணீரைக் குடிக்குமாறு செய். யாரெல்லாம் குனிந்து தண்ணீர் குடிக்கிறார்களோ அவர்களை யெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிடு. சுற்றும் முற்றும் கவனித்தவாறே தண்ணீர் குடிக்கிற 300 வீரர்களை மட்டும் தேர்ந்தெடு. அவர்களை மட்டும் உன்னுடன் வைத்துக்கொள். அந்தச் சிறுபடையணி மூலம் நான் உனக்கு வெற்றியைக் கொடுப்பேன்’ என்று வாக்குக் கொடுத்தார். கடவுள் குறிப்பிட்டபடியே 300 பேரைத் தேர்வு செய்தான் கிதியோன். கடவுளின் கட்டளைக்காகக் காத்திருந்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x