Last Updated : 02 Mar, 2017 10:20 AM

 

Published : 02 Mar 2017 10:20 AM
Last Updated : 02 Mar 2017 10:20 AM

பைபிள் கதைகள் 41: சூரியனே அசையாது நில்!

எரிக்கோ எனும் பலம்பொருந்திய கோட்டை நகரை வென்றபின் இஸ்ரவேலர்கள் கில்காலில் முகாமிட்டுத் தங்கினார்கள். அடுத்து சிறிய நகரமான ஆயீயிடம் ஆகான் செய்த பாவத்தால் பரிதாபகரமாகத் தோற்றனர். ஆகான் தண்டிக்கப்பட்டபின்னர் அந்த நகரத்தையும் யோசுவா வென்றார். இதன்பிறகு கானான் தேசத்தில் மொத்தமிருந்த 31 நகரங்களில் 29 நகரங்கள் எஞ்சியிருந்தன. இஸ்ரவேலர்களின் படைக்குக் கடவுளே தலைவராக நின்று வழிநடத்துவதை அறிந்த கிபியோன் நகர மக்கள்; பொய்யாக நடித்து, இஸ்ரவேலர்களின் இரக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டனர். அவர்களுக்கு அடிமைகளாகப் பணிபுரிய ஒப்புக்கொண்டு, உயிரைக் காத்துக்கொண்டார்கள். இத்தனைக்கும் கிபியோனியர் பலம்பொருந்திய கோட்டை நகரையும், வீரம்மிக்க போர் வீரர்களையும் வைத்திருந்தனர்.

உதவி கேட்டுக் கதறிய மக்கள்

கிபியோனியர், இஸ்ரவேலர்களுடன் சமாதானம் செய்து கொண்டதை அறிந்த எருசலேமின் அரசனாகிய அதோனிசேதேக் அவர்கள் மீது கோபம் கொண்டான். அக்கம்பக்கத்து எமோரிய நகரங்களான எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய நான்கு நகரங்களின் அரசர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டுப்படையைத் திரட்டிக்கொண்டு கிபியோன் நகரத்தை நெருங்கி தாக்கத் தொடங்கினான். இதைச் சற்றும் எதிர்பாராத கிபியோன் மக்கள்; தங்கள் நகரம் முற்றுகையில் சிக்கித் தாக்குதலுக்கு இலக்காகி யிருப்பது பற்றி யோசுவாவுக்கு அவசர அவசரமாகத் தகவல் அனுப்பினர். “ உடனே படையுடன் புறப்பட்டு, உங்கள் பணியாட்களாகிய எங்களது உயிரைக்காக்க விரைந்து வாருங்கள்” என்று கேட்டுக்கொண்டனர்.

சூரியனுக்கு உத்தரவிட்ட யோசுவா

கிபியோனியரின் கதறலைக் கேட்ட யோசுவா சிறிதும் காலம் தாழ்த்தாமல், தகவல் கிடைத்த அதே இரவில் கிபியோன் நகரம் நோக்கித் தன் பெரும்படையுடன் புறப்பட்டார்.

யோசுவா வருவதைப் பகைவர்கள் அறியவில்லை. எனவே யோசுவாவின் படை திடீரென்று தாக்கியபோது எதிரிகளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஐந்து நகரங்களின் கூட்டுப்படையை இஸ்ரவேலர்கள் தாக்கத் தொடங்கிய அதேநேரம் கடவுள் வானத்திலிருந்து பெருங்கற்கள் விழும்படியாகச் செய்தார். அக்கற்களால் எதிரிப்படையினர் நசுங்கி மாண்டனர். இஸ்ரவேல் வீரர்களின் வாளால் கொல்லப்பட்டவர்களைக் காட்டிலும் வானத்திலிருந்து விழுந்துகொண்டேயிருந்த கல் மழையால் கொல்லப்பட்டவர்களே அதிகமாக இருந்தனர். அப்படியும் ஆயிரக்கணக்கில் எஞ்சியிருந்த எதிரிகள், இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர்புரிந்துகொண்டிருந்தனர்.

அந்நாட்களில் சூரியன் மறைந்ததும் போரை நிறுத்தி சூரியன் மீண்டும் எழுந்ததும் தாக்குதலைத் தொடர்வது போர் முறை மரபாக இருந்தது. ஆனால் யோசுவா, எதிரிகளுக்கு அந்த வாய்ப்பை வழங்கவேண்டாம் என்று கடவுள் நினைத்தார். எனவே யோசுவாவின் வார்த்தைகளுக்கு வல்லமையை அளித்தார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நின்ற யோசுவா, வானை நோக்கி: “சூரியனே கிபியோன் நகரின்மேல் நில்! சந்திரனே… ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் அசையாது நில்” என்று அதிகார தொனியுடன் உத்தரவிட்டார்.

எனவே சூரியனும், சந்திரனும் யோசுவாவின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தன. தங்கள் பகைவர் படையின் கடைசி வீரனையும் இஸ்ரவேலர் முறியடிக்கும் வரைக்கும் அவை அசையாமல் நின்றன. வானத்தின் நடுவில் சூரியன் ஒரு நாள் முழுவதும் பிரகாசமாய் அசையாமல் நின்றது. அவ்வாறு அதற்கு முன்னர் இப்படி நிகழ்ந்ததேயில்லை! அதன் பின்னரும் நிகழவுமில்லை. உண்மையில் கடவுளே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்! போரின் முடிவில் எருசலேமின் அரசன் உட்படத் தப்பிச்சென்று ஒளிந்துகொண்ட ஐந்து நகரங்களின் அரசர்களையும் கைதுசெய்து அழைத்துவந்து அவர்களையும் இஸ்ரவேலர்கள் கொன்றொழித்தனர்.

ஆறாவது ஆண்டின் முடிவில்

இவ்வாறு அடுத்துவந்த ஆறு ஆண்டுகளில் கானான் தேசத்தின் பெரும்பகுதியை நகரங்களின் வழியே ஆண்டுவந்த 31 அரசர்களைத் தோற்கடித்த யோசுவா கிடைத்த நிலப்பகுதியைப் பிரித்து யூதா உள்ளிட்ட இஸ்ரவேலரின் கோத்திரத்தாருக்கும் கடவுள் கூறியபடி பிரித்துக் கொடுக்கிறார்.

இப்போது இஸ்ரவேலருக்கு எதிரிகள் என்பவர்களே இல்லாமல் போனார்கள். கடவுள் இஸ்ரவேலருக்கு அமைதியைக் கொடுத்தார். ஆண்டுகள் உருண்டோடின. யோசுவா வயது 110 வயதினை எட்டி முதிர்ந்த கிழவன் ஆனார். தனது இறுதி நாட்களை உணர்ந்துகொண்ட அவன், இஸ்ரவேல் கோத்திரத்தாரின் எல்லா மூத்த தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், படை அதிகாரிகளையும் யோசுவா ஒருங்கே அழைத்தார்.

அவர்களிடம், “நான் முதுமை அடைந்துவிட்டேன். இது நான் இறக்கப்போகும் நேரம். கற்பனைக் கடவுளர்களை வழிபட்ட, தனக்குக் கீழ்ப்படியாத கெட்ட அரசர்கள் அனைவரையும் வீழ்த்தி, நமக்கு வாக்களித்தபடியே நமது மூதாதையர்களின் நிலத்தை நமக்குக் கொடுத்தார். எனவே அவர் நமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிவதற்குக் கவனமாக இருங்கள்.

மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற கட்டளைகள் அனைத்துக்கும் கீழ்ப்படியுங்கள். அச்சட்டத்தை மீறாதீர்கள். கடவுளின் உதவியோடு, இஸ்ரவேலரில் ஒருவன் எதிரிகளின் ஆயிரம் பகைவீரர்களை வெல்ல முடிந்தது. ஏனெனில் கடவுள் நமக்காகப் போர் செய்கிறார். எனவே உங்கள் தேவனாகிய கடவுளைத் தொடர்ந்து நேசியுங்கள்.

நீங்கள் தவறு செய்தால் உங்களுக்குத் தீமை விளையுமெனக் கடவுள் உறுதியளித்தார். மீறி நீங்கள் தீய வழியில் சென்றால் உங்களுக்குத் தந்த இத்தேசத்திலிருந்து அவர் உங்களைத் துரத்துவார் என்பதையும் உறுதியாக நினைவில் வைத்திருங்கள். நம் தேவனாகிய கடவுளோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறினால் இவ்வாறு நிகழும்.” என்று கூறி யோசுவா இறந்துபோனார். யோசுவா என்ற மாபெரும் சகாப்தம் முடிந்துபோனது.

யோசுவா இருந்தவரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்த இஸ்ரவேலர்கள் அதன்பிறகு பல கெட்ட செயல்களில் இறங்கி பிரச்சினையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x