Last Updated : 15 Dec, 2016 10:20 AM

 

Published : 15 Dec 2016 10:20 AM
Last Updated : 15 Dec 2016 10:20 AM

பைபிள் கதைகள் 31: கடவுள் வழங்கிய கடும் தண்டனை

யூதர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரைத் தங்களது ஆன்மிக வழிகாட்டி களாகக் கருதிவந்தனர். அதில் அவர்கள் பழம்பெருமை கொண்டிருந்தனர். இந்த மூவரும் வணங்கிவந்த உலகைப் படைத்த கடவுளாகிய யகோவா தேவனுக்கு உகந்தவர்களாக வாழாமல் வழிதவறிப்போன யூதர்கள் தங்கத்தால் கன்றுக்குட்டியின் சிலை ஒன்றைச் செய்து வழிபட்டதால் கடவுளின் கோபத்தைச் சம்பாதித்துக்கொண்டனர். கடவுள் தங்களை எகிப்திலிருந்து மீட்டெடுத்தார் என்பதை அவர்கள் வெகு விரைவாக மறந்துபோனார்கள். இந்த நிலையில்தான் இஸ்ரவேலர்கள் மீது கடவுள் கடுங்கோபம் கொண்டார். அப்போது கடவுளுக்கு அவரது வாக்குறுதியை நினைவூட்டி அவரது கோபத்தைத் தணித்தார் மோசே. பிறகு கடவுளின் வழிகாட்டுதலின்படி வாக்களித்த தேசமாகிய கானான் நாட்டுக்கு இஸ்ரவேல் மக்களை அழைத்துச் செல்லும்படி கடவுள் மோசேயை வழிநடத்தினார்.

ஒரு காலத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் வாழ்ந்த நாடுதான் கானான். ஆனால் கானானுக்குள் அவர்களால் அத்தனை சீக்கிரம் நுழைய முடியவில்லை. கட்டுக்கோப்பான பாதுகாப்புடன் கானான் விளங்கியது. எனவே கானானுக்குள் நுழையும் முன் பாரான் பாலைவனத்தில் இருந்த காதேஸ் என்ற வனந்தரப் பகுதியில் இஸ்ரவேலர்கள் முகாமிட்டுத் தங்கினார்கள்.

12 வேவுக்காரர்கள்

நாட்டிற்குள் நுழையும் முன் கானான் தேசத்தை வேவு பார்த்து அறிந்துகொள்வதற்காக இஸ்ரவேல் மக்களின் 12 கோத்திரங்களிலிருந்து தலா ஒரு திறன்மிக்க இளம் தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தார் மோசே. அவர்களில் நூனின் மகனான ஓசேயாவையும் எப்புன்னேயின் மகனான காலேப்பையும் மோசே பெரிதும் நம்பினார். ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயர் சூட்டினார். யோசுவா என்ற பெயருக்கு ‘ரட்சகன்’ என்பது பொருள்.

பன்னிரெண்டு வேவுக்காரர்களையும் அழைத்த மோசே, “நீங்கள் கானான் நாட்டுக்குள் ஊடுருவிச் சென்று, அங்கே வாழுகிற மக்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பலமானவர்களா, அல்லது பலவீனமானவர்களா? அவர்களின் எண்ணிக்கை குறைவா, மிகுதியா? அவர்கள் எந்த விதமான நகரங்களில் குடியிருக்கிறார்கள்? நகரங்களைப் பாதுகாக்க மதிற்சுவர்கள் உள்ளனவா? அங்குள்ள மண் விவசாயம் செய்வதற்குரிய வளம் கொண்டதாக இருக்கிறதா? அங்கே மரங்கள் இருக்கின்றனவா? அங்குப் பழங்கள் விளைகின்றனவா? விளைந்தால் அவற்றில் சிலவற்றைக் கொண்டுவர முயலுங்கள்” என்றார்.

மோசே வழியகாட்டியபடியே கானான் நாட்டின் நெகேவ் வனாந்தரத்தின் வழியாக அவர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று நாட்டின் நான்கு திசைகளிலும் நோட்டமிட்டனர். இவ்வாறு நாற்பது நாட்கள் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துத் தகவல்களை அறிந்துகொண்ட பின் அங்கிருந்து திராட்சை, மாதுளை, அத்தி ஆகிய பழங்களைப் பறித்துக்கொண்டு தங்கள் முகாமுக்குத் திரும்பினார்கள். கானான் நாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்களை மோசேயிடமும் மக்களிடமும் காட்டினார்கள்.

கலகம் செய்த பத்துப் பேர்

பிறகு மோசேயிடம் அவர்கள், “நீங்கள் தந்த பணியை நல்லபடியாக முடித்துவிட்டோம். அந்நாடு மிகுந்த வளம் மிக்கது. ஜனங்கள் மிகவும் பலமுள்ளவர் களாக வாழ்கிறார்கள். நகரங்கள் மிகவும் விரிவானவை. பலமான பாதுகாப்பு கொண்டவை. அங்கே சில ஏனாக்கின் மக்களையும் கண்டோம். அவர்களில் பலர் தோற்றத்தில் ராட்சசர்கள் போல் மிகுந்த பலசாலிகளாக உள்ளனர். அமலேக்கியர் தென்புறமான நாட்டில் குடியிருக்கிறார்கள். மலை நாடுகளில் ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் குடியிருக்கிறார்கள். கானானியர்கள் கடற்கரைகளிலும், யோர்தான் நதி அருகேயும் வாழ்ந்துவருகிறார்கள்” என்றனர்.

காலேப் வீரம் கொப்பளிக்க, “நாம் புறப்பட்டுப் போய் அவர்களை வென்று, கானானை நமக்குரியதாக எடுத்துக்கொள்வோம்” என்றான்.

ஆனால் யோசுவா தவிர அவனோடு சென்று வந்த மற்ற பத்துப் பேரும், “நாம் அவர்களோடு சண்டையிட முடியாது. அவர்கள் ராட்சச பலமுள்ளவர்கள். எங்கள் பார்வையில் அவர்களுக்கு முன் நாங்கள் சிறிய வெட்டுக்கிளிகளைப் போன்று இருந்தோம்” என்று மக்கள் மனதில் அவநம்பிக்கையை விதைத்தார்கள் மீண்டும் அவநம்பிக்கை கொண்ட இஸ்ரவேல் மக்கள், “போரில் நாங்கள் செத்துவிடுவோம். எங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் சிறைபிடித்துக் கொண்டுபோய் விடுவார்கள். அதனால் மோசேக்குப் பதிலாக ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு எகிப்துக்கே போய்விடலாம் வாருங்கள்” என்று உரத்த குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர்.

சபிக்கப்பட்ட மக்கள்

இந்தப் புதிய குழப்பத்தைக் கண்டு மோசே மிகவும் வருந்தினார். காலேப்பும் யோசுவாவும் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து, ஜனங்களை அமைதிப்படுத்த முயன்றார்கள். அவர்கள் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: “அன்பு மக்களே… பயப்படவேண்டாம். உலகைப் படைத்து, காத்துவரும் ஒரே கடவுளும் நம்மை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அழைத்துவந்தவருமான யகோவா நம்முடன் இருக்கிறார். கானான் நாட்டை நாம் எளிதாகக் கைப்பற்றிவிடலாம்” என்றார்கள்.

ஆனால் இஸ்ரவேலர்கள் கேட்பதாக இல்லை. அந்த இருவர் மீது கடுங்கோபம் கொண்ட அவர்கள் யோசுவாவையும் காலேப்பையும் கல்லெறிந்து கொல்லத் துணிந்தார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த கடவுள் கடுங்கோபம் கொண்டார். இதைக் கண்டு மீண்டும் தனது மக்களை மன்னித்து உயிரோடு விட்டுவிடும்படி கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார் மோசே.

மீண்டும் மனமிரங்கிய கடவுள், “இந்த மக்களில் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்ட யாரும் கானான் தேசத்துக்குள் நுழையப் போவதில்லை. எகிப்திலும் வனாந்தரத்திலும் நான் செய்த அற்புதங்களை கண்கூடாகப் பார்த்தும்கூட அவர்கள் என்னை நம்பவில்லை. அதனால் இவர்களில் கடைசி மனிதன் சாகும்வரை, நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து திரிவார்கள். யோசுவாவும் காலேபும் மாத்திரமே கானான் தேசத்துக்குள் செல்வார்கள்” என்று கடவுள் மோசேயிடம் கூறினார்.

வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டிற்குச் சென்று மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வேண்டிய இஸ்ரவேலர்கள் இந்தச் சாபத்தால், வனாந்தரத்தில் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு மிகக் கடினமான அலைச்சலும் துன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார். இத்தனை கடுமையான சாபத்தைக் கடவுளிடமிருந்து பெற்றிருந்த நிலையிலும் அவர்களிடம் பதவிச் சண்டை ஏற்பட்டது...

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x