Last Updated : 15 Sep, 2016 01:22 PM

 

Published : 15 Sep 2016 01:22 PM
Last Updated : 15 Sep 2016 01:22 PM

பைபிள் கதைகள் 19: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு குழந்தை

ஈசாக்கின் இரண்டு மகன்களில் யாக்கோபுவைக் கடவுள் தனக்காகத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு ‘இஸ்ரவேல்’ என்று பெயரிட்டார்.

இஸ்ரவேலுக்கு மொத்தம் 12 மகன்கள் . அவருக்குச் சில மகள்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மூத்த மகன்கள் பத்துப் பேரும் தங்களது தம்பியான யோசேப்பை வெறுத்துவந்தார்கள். அதனால் எகிப்து தேசத்து வியாபாரிகளிடம் ஓர் அடிமையாக அவரை விற்றுவிட்டார்கள். ஆனால் யோசேப்புவுடன் கடவுள் இருந்தார்.

அவரை எகிப்து தேசத்தின் ஆளுநர் ஆக்கினார். எகிப்தையும் அதைச் சுற்றியுள்ள நாடுகளைக் கொடிய பஞ்சம் தாக்கியது. அப்போது தானியம் வாங்கிச் செல்ல எகிப்துக்கு வந்த தன் அண்ணன்களின் மனம் மாறியிருக்கிறதா என்பதை அவர் பரிசோதித்துப் பார்த்தார்.

அவர்கள் மனம் மாறியிருப்பதைக் கண்ட யோசேப்பு அவர்களை மன்னித்து, தனது தந்தை இஸ்ரவேலையும் சகோதரர்களின் குடும்பம் முழுவதையும் எகிப்தில் குடியேறச் செய்தார். இஸ்ரவேலர்கள் அங்கே ஒரு மக்கள் இனமாகப் பெருங்கூட்டமாய் ஆனார்கள்.

இப்படி அவர்கள் எகிப்தில் சுமார் 215 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். யோசேப்புவைப் பற்றி அறியாத ஒரு அரசன் எகிப்தை ஆண்டபோது இஸ்ரவேலர்கள் அங்கு அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள். அடிமைத்தளையிலிருந்து அவர்களை விடுவிக்கக் கடவுள் மோசேயைப் பிறக்கச் செய்தார். எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்துப் புதிய நிலப்பரப்புக்கு அவர்களை அழைத்துவர மோசேயைக் கடவுள் பயன்படுத்தினார்.

வரலாறு அறியாத மன்னன்

எகிப்தில் குடியேறிய இஸ்ரவேலர்கள் முதலில் மேய்ப்புத் தொழிலையும் பிறகு அதனோடு தொடர்புடைய பயிர்த் தொழிலையும் செய்து முன்னேறினார்கள். அதனால் அவர்களது சமூக நிலை உயர்ந்தது. இதனால் எண்ணிக்கையிலும் இஸ்ரவேலர்கள் பெருகியபடியே இருந்தார்கள். எனினும் தங்களுக்கு அடைக்கலம் தந்த எகிப்தியர்களை அவர்கள் பகைத்துக்கொள்ளவில்லை. அவர்களோடு சமாதானமாய் வாழ்ந்தார்கள். ஆனால் எகிப்தின் ஆளுநராய் இருந்த யோசேப்பின் மறைவுக்குப் பிறகு நிலைமை மாறியது. காலங்கள் கடந்துசென்றதில் யோசேப்புவின் புகழ் மறைந்தது. ஒரு இஸ்ரவேலன் எகிப்தின் ஆளுநராய் இருந்ததை வரலாறு மூலம்கூட அறிந்துகொள்ளாத புதிய பார்வோன் மன்னன் எகிப்தின் மன்னனாக முடிசூட்டப்பட்டான்.

அவன் தனது ஜனங்களிலிருந்து இஸ்ரவேலர்கள் தோற்றத்திலும் அந்தஸ்திலும் வேறுபட்டிருந்ததைக் கவனித்தான். இஸ்ரவேலர்கள் யார், அவர்களது பூர்வீகம் என்ன என்பதைத் தனது முதிய அமைச்சர்கள் மூலம் தெரிந்துகொண்டான். இதன் பின்னர் இஸ்ரவேலரை அவனுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் இந்தப் புதிய பார்வோன் மன்னன் இஸ்ரவேலரை வந்தேறிகளாக அறிவித்தான்.

விடுதலை மறுக்கப்பட்டவர்கள்

பிழைக்க வந்த தேசத்தில் அடிமைகளாக மட்டுமே வாழ முடியும் என்று அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கினான். அவர்களுக்கு விடுதலை மறுத்தான். எகிப்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றவர்களைக் கொன்றொழித்தான். அவர்களை மேற்பார்வையிடுவதற்குக் கண்பாணிப்பாளர்களை நியமித்தான். இவர்கள் துளியும் இரக்கமற்றவர்களாக மாறி இஸ்ரவேலரைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

இஸ்ரவேலர்களின் உடல்பலத்தைக் குறைப்பதற்காக, பித்தோம், ராமசேஸ் ஆகிய இரண்டு நகரங்களை பார்வோன் மன்னனுக்காகக் கட்டும்படி இஸ்ரவேலரைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கினார்கள். இதற்காக இஸ்ரவேலர்கள் அறியாத தொழிலாக இருந்த செங்கல்லும், சாந்தும் செய்யும்படியாகவும் சுமைகளைத் தூக்கும்படியாவும் அவர்களை அடிமாட்டைப் போல் நடத்தினார்கள்.

பல்கிப் பெருகிய இஸ்ரவேல் மக்கள்

வயல்களிலும் கடினமாக உழைக்கும்படியாக மாற்றி வெறும் உணவுக்காக அவர்களைப் பிழிந்தெடுத் தார்கள். இஸ்ரவேல் மக்களை எந்த அளவுக்கு எகிப்தியர்கள் ஒடுக்கினார்களோ அந்த அளவுக்கு அவர்கள் பெருகிப் பரவினார்கள். இதனால் முன்பைக் காட்டிலும் இஸ்ரவேல் மக்களைக் கண்டு எகிப்திய மக்கள் அதிகப் பதற்றமும் பயம் கொண்டனர். தனது வழியிலேயே மக்களின் மனமும் இருப்பதைக் கண்ட பார்வோன் மன்னன் ஒரு மூர்க்கமான புதிய முடிவை எடுத்தான்.

ஒரு குழந்தை மட்டும் தப்பியது!

இஸ்ரவேல் பெண்களின் பிரசவ காலத்தில் அவர்களுக்கு மகப்பேறு பார்க்கும் இரண்டு மூத்த மருத்துவச்சிகள் இருந்தனர். சிப்பிராள், பூவாள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் இஸ்ரவேல் வழிவந்த எபிரேய மூதாட்டிகள். அவர்கள் கடவுளுக்குப் பணிந்தவர்களாய் இருந்தனர். அவர்களை அழைத்துப் பேசிய பார்வோன் மன்னன் “இஸ்ரவேல் பெண்களின் பிரசவத்தின்போது பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தை உயிரோடிருக்கட்டும். குழந்தை ஆணாக இருந்தால் அதை நீங்கள் கொன்றுவிட வேண்டும்!” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் எல்லா ஆண் குழந்தைகளையும் உயிரோடு விட்டனர்.

இதனால் கோபம் கொண்ட பார்வோன் மன்னன் தன் படைச் சேவகர்களை அழைத்து “இஸ்ரவேலரின் எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று போடுங்கள். பெண் குழந்தைகள் மட்டும் உயிரோடி ருக்கட்டும்”என்று கட்டளையிட்டான். அவன் கட்டளைப்படியே சேவகர்கள் ஆண் குழந்தைகளை வீடுவீடாகத் தேடிப்போய்க் கொன்றார்கள். ஆனால் இந்த ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் தப்பித்துக்கொண்டது. அந்தக் குழந்தைதான் மோசே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x