Last Updated : 01 Sep, 2016 10:16 AM

 

Published : 01 Sep 2016 10:16 AM
Last Updated : 01 Sep 2016 10:16 AM

பைபிள் கதைகள் 17: தன்னை வெளிப்படுத்திய யோசேப்பு

ஏழு ஆண்டுகள் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடிய எகிப்து தேசத்தில் யோசேப்பின் திட்டமிடலால் தானியக் களஞ்சியம் நிரம்பியிருந்தது. குடிமக்களுக்கும் அந்நிய நாட்டிலிருந்து வரும் மக்களுக்கும் தானியத்தை விற்றதால் கஜானா நிறைந்து வழிந்தது. யோசேப்புவின் தந்தை யோக்கோபுவும் அவரது 11 சகோதரர்களும் வசித்து வந்த கானான் தேசத்தையும் பஞ்சம் தாக்கியதால் எகிப்துக்கு வந்தனர். தங்களால் அடிமையாக விற்கப்பட்ட சகோதரன் யோசேப்புதான் அந்நாட்டின் ஆளுநர் என்பதை அறியாமல் அவர் முன் பணிந்து வணங்கி தானியத்தை வாங்கிச் சென்றனர். தனது சகோதரர்களை அறிந்துகொண்ட யோசேப்புவோ அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் அண்ணன் சிமியோனைச் சிறைவைத்துவிட்டு “உங்கள் கடைசி தம்பி பென்யமினை அழைத்து வாருங்கள். அப்போது நீங்கள் அந்நிய நாட்டின் உளவாளிகள் அல்ல என்று நம்புகிறேன்” என்று கூறியனுப்பினார்.

விருந்தும் விடுதலையும்

தன் அண்ணன்கள் சிமியோசனை மீட்டுச் செல்லவும் திரும்பவும் தானியம் வாங்கிச் செல்லவும் தனது தம்பி பென்யமினை அழைத்துக்கொண்டு கண்டிப்பாக மீண்டும் வருவார்கள் என்று நம்பினார் யோசேப்பு. அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. தானியங்கள் தீர்ந்துபோனதும் மீண்டும் அவர்கள் வந்தார்கள். சகோதரர்களையும் தன்னுடைய தம்பி பென்யமீனையும் கண்டதும் பாசத்தால் அவர் மனம் துள்ளியது. மிகவும் சந்தோஷமடைந்தார். ஆனால் தம்பி பென்யமினுக்குமே யோசேப்புவை அடையாளம் தெரியவில்லை. வாக்களித்தபடி சிமியோனை விடுதலை செய்தார். அவர்கள் அனைவருக்கும் அரச விருந்தளித்துக் கவுரவித்தார்.

ஆளுநரின் பணியாட்களும் பாதுகாவலர்களும், “அகதிகள் போல் தானியம் கேட்டு வந்தவர்களை அரச விருந்தினர்களாகக் கவுரவிக்கிறாரே!” என்று ஆச்சரியப்பட்டனர். யோசேப்பு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தன் சகோதரர்களிடம்… “உங்கள் வயதான தந்தை எப்படி இருக்கிறார்? இப்போதும் அவர் உயிரோடும் நலமாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டார். சகோதரர்கள் அனைவரும், “ஆமாம் ஐயா, அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்”என்றனர். மீண்டும் அவர்கள் யோசேப்பைப் பணிந்து வணங்கினார்கள். அவர்கள் தானியங்களைப் பெற்றுக்கொண்டு திரும்ப முடிவு செய்தபோது தன் சகோதரர்கள் திருந்திவிட்டார்களா என்பதைச் சோதிப்பதற்கு இறுதியாக ஒரு நாடகம் நடத்த முடிவுசெய்தார்.

திருட்டுப் பழி

அவர்கள் அனைவரது சாக்குகளிலும் தானியத்தை நிரப்பும்படி தன்னுடைய பணியாளர்களுக்கு ஆணையிட்டார். அதேநேரம் பென்யமீனுடைய சாக்குப் பையில் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வெள்ளிக் கோப்பையைப் போடும்படி சொன்னார். பணியாளர்கள் அவ்வாறே செய்தனர். அவர்கள் எல்லோரும் புறப்பட்டு கொஞ்ச தூரம் போன பிறகு, தன்னுடைய பணியாளர்களை அனுப்பி அவர்களைப் பரிசோதிக்கும்படி கூறினார். அவர்களைத் துரத்திப் பிடித்து பென்யமினின் தானியப்பையைச் சோதனையிட்ட பணியாளர்கள், அதிலிருந்து வெள்ளிக்கோப்பையை வெளியே எடுத்துக்காட்டி “எங்கள் எஜமானரின் விலை மதிப்புமிக்க கோப்பையை ஏன் திருடினாய்?” என்று கேட்டு பென்யமினை மட்டும் கைதுசெய்து அழைத்து வந்தனர். துடித்துப்போன மற்ற 10 சகோதரர்களும் திரும்பவும் ஆளுநர் மாளிகைக்கு வந்தார்கள்.

யோசேப்பு தன் அண்ணன்மாரிடம், ‘நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் போகலாம். ஆனால் பென்யமீன் மட்டும் என் அடிமையாக இங்கேயே இருக்க வேண்டும்’ என்றார். அப்பொழுது மூத்த சகோதரர்களில் ஒருவனாகிய யூதா “ஐயா, இவன் இல்லாமல் நான் வீட்டுக்குப் போனால் என் அப்பா செத்தே விடுவார். ஏனென்றால் இவன் மீது அவர் உயிரையே வைத்திருக்கிறார். அதனால் தயவுசெய்து என்னை உம்முடைய அடிமையாக இங்கே வைத்துக்கொண்டு இவனை எனது மற்ற சகோதரர்களோடு வீட்டுக்குத் திரும்ப அனுமதியுங்கள்” என்று கெஞ்சினார்.

யூதாவின் வார்த்தைகள் மூலம் தனது தந்தையின் மீதும் தன் உடன்பிறந்த தம்பி மீதும் அவர்கள் நிஜமான பாசம் வைத்திருப்பதை யோசேப்பு உணர்ந்துகொண்டார். தனது சகோதரர்கள் முற்றாக மாறிவிட்டிருப்பதை அறிந்து கொண்டதால் பொங்கியெழுந்த உணர்ச்சிப்பெருக்கை யோசேப்புவால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவர் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார். ஆளுநர் தங்கள் முன்னால் அழுவதைக் கண்டு குழப்பிப்போனார்கள்.

தன் சகோதரர்களைத் தவிர மற்ற அனைவரையும் மாளிகைக்கு வெளியே அனுப்பிய யோசேப்பு “என்னருகே வாருங்கள். நான் உங்களின் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன். இப்போது அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக உங்களையே கோபித்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் வர வேண்டும் என்பது தேவனின் திட்டம். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றவே இங்கே இருக்கிறேன். இந்தப் பஞ்சம் இன்னும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும். ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களைக் காப்பாற்ற முடியும். என்னை இங்கே அனுப்பியது உங்களது தவறு அல்ல. இது தேவனின் திட்டம்”என்றார்

தெளிவு பிறந்தது

அப்படியும் பயந்து பின்வாங்கிய சகோதரர்களை அருகில் அழைத்து ஒவ்வொருவராகக் கட்டியணைத்து முத்தமிட்டார். யோசேப்புவை ஸ்பரிசித்தபிறகே அவர் தங்கள் சகோதரன்தான் என்பதை உணர்ந்த அவர்கள் பாசப்பெருக்கினால் அழத் தொடங்கினார்கள். இந்தக் காட்சியைக் கண்ட எகிப்தியர்கள் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். யோசேப்பு தன் சகோதரர்களிடம், “வேகமாக நம் தந்தையிடம் போங்கள். உங்கள் மகன் யோசேப்பு இந்தச் செய்தியை அனுப்பியதாகக் கூறுங்கள். கடவுள் என்னை எகிப்தின் ஆளுநராக ஆக்கினார். எனவே என்னிடம் வாருங்கள். காத்திருக்க வேண்டாம். இப்போதே வாருங்கள். என்னோடு கோசேன் நிலப்பகுதியில் வாழலாம். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், மிருகங்களும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள். இனி வரும் ஐந்தாண்டு பஞ்சத்திலும் உங்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்வேன். உங்களுக்குரிய எதையும் இழக்க மாட்டீர்கள் என்று கூறுங்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x