Last Updated : 14 Jul, 2016 12:37 PM

 

Published : 14 Jul 2016 12:37 PM
Last Updated : 14 Jul 2016 12:37 PM

பைபிள் கதைகள் 14: நேர்மைக்குக் கிடைத்த பரிசு!

தம்பி யோசேப்பின் மீது பொறாமை கொண்ட சகோதரர்கள் அவனைக் கொல்ல மனமின்றி எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த வணிகர்களிடம் விற்றுவிட்டார்கள். எகிப்தை அடைந்த வணிகர்கள் அந்நாட்டின் அரசனாகிய பார்வோனின் தலைமை அமைச்சரும் படைத் தளபதியுமாகிய போத்திப்பார் என்பவருக்கு யோசேப்பை விற்றுவிட்டார்கள்.

அடிமைகள் தங்களை விலைகொடுத்து வாங்கிய எஜமானனுக்கு நன்றியுள்ள நாயைப்போல வேலை செய்து வர வேண்டும் என்பது அந்நாட்களின் சட்டமாக இருந்தது. இருபது வயதுகூட நிறைவடையாத இளைஞன் யோசேப்புவைத் தந்தையைப் பிரிந்த துயரமும் சகோதரர்கள் தன்னை விற்றுவிட்ட வேதனையும் வாட்டின. இருப்பினும் மெல்ல மெல்ல தனது வாழ்க்கைச் சூழ்நிலையை யோசேப்பு ஏற்றுக்கொண்டார். தன்னை வழிநடத்திச் செல்லும் கடவுளை நினைவுகூர்ந்து அவரை நோக்கிப் பிரார்த்தனை செய்து வந்தார். எனவே கடவுள் எப்போதும் அவரைத் தன் உள்ளங்கையில் வைத்துக் காத்து வந்தார்.

சோதனையை வென்ற இளைஞன்

யோசேப்பு செய்கிற எல்லாச் செயல்களும் கடவுளின் உதவியால் வெற்றி பெறுவதைக் கண்டு எஜமானனாகிய போந்திப்பார் மகிழ்ச்சி அடைந்தார். யோசேப்பின் நன்னடத்தை, உழைப்பு ஆகியவற்றைப் பார்த்துத் தனது சொத்துகள் அனைத்தையும் நிர்வகிக்கும் அதிகாரியாக ஆக்கினார். இவ்வாறு எஜமானின் நம்பிக்கையைப் பெற்ற யோசேப்புவின் வளர்ச்சி பலரது கண்களை உறுத்தியது.

சில ஆண்டுகள் உருண்டோடின. அளவான உணவு, கடுமையான உழைப்பு, காலம் தவறாத பிரார்த்தனை என வாழ்க்கையை வகுத்துக்கொண்டதால் யோசேப்புவின் முகம் ஓர் இளவரசனைப்போல் ஜொலித்தது. கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தார். இம்முறை எஜமானின் மனைவி வழியே யோசேப்புவுக்கு ஆபத்து காத்திருந்தது. போந்திப்பாரின் மனைவி யோசேப்பின் மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். அவனைக் கணவன் இல்லாத நேரத்தில் அடைய விரும்பி அவனை அழைத்தாள். ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டார். “ என் எஜமானன் என் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த வீட்டில் ஏறக்குறைய என்னைத் தனக்குச் சமமாக வைத்திருக்கிறார். நான் அவரது மனைவியோடு உறவுகொள்ளக் கூடாது. இது தவறு, கடவுளுக்கு விரோதமான பாவம்” என்று எஜமானிக்கு எடுத்துரைத்தான்.

அப்போதைக்கு விலகிச் சென்ற அவள், ஒவ்வொரு நாளும் யோசேப்போடு பேசிப் பேசி அவன் மனதைக் கரைக்க முயற்சித்தாள். ஆனால் திட்டவட்டமாக மறுத்ததோடு நில்லாமல், எஜமானியின் மனதை மாற்றும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். ஆனால் சாத்தானின் பிடியில் இருந்த எஜமானியின் பிடிவாதம் குறையவில்லை.ஒரு நாள் வீட்டுவேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த யோசேப்புவின் அங்கியை வலுவாகப் பற்றிப் பிடித்து, அவரை அணைக்க முயன்றாள். திடுக்கிட்டு பதறிய யோசேப்பு வேகமாக வீட்டை விட்டு வெளியே ஓடிப்போனார். அப்போது அவரது அங்கி எஜமானியின் கையில் சிக்கிக்கொண்டது.

சிறை வாழ்க்கையும் கனவுகளும்

எஜமானிக்கோ யோசேப்பை அடையமுடியாத ஏமாற்றம் கடும்கோபமாக மாறியது. வீட்டிலுள்ள மற்ற வேலைக்காரர்களை அழைத்து “இந்த எபிரேய அடிமை நன்றி மறந்துவிட்டான். அவன் என்னை நிர்பந்தித்து என்னை பலாத்காரம் செய்ய முயன்றான். நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் என் கைகளில் சிக்கிக்கொண்டது” என்று கண்ணீர் வடித்தபடி முறையிட்டாள். மனைவி கூறிய கதையை நம்பிய போந்திப்பார் கொஞ்சமும் சிந்திக்காமல் யோசேப்புவைப் பிடித்துவரச் செய்து, பார்வோன் அரசனுடைய கொடுஞ்சிறையிலே அடைத்துவிட்டார். யோசேப்புவின் நேர்மைக்கு சிறைத் தண்டனை பரிசாகக் கிடைத்தது. ஆனால் கடவுள் யோசேப்புவைக் கைவிடவில்லை.

யோசேப்புவின் நடத்தையில் இருந்த தூய்மையைக் கண்ட சிறையதிகாரி அவரைக் கைதிகளைக் கண்காணிப்பவராக நியமித்தார். யோசேப்பு பொறுப்பாளனாக உயர்த்தப்பட்ட அந்தச் சிறைக்குப் புதிதாக இரண்டு கைதிகள் வந்து சேர்ந்தனர். அவர்கள் இருவரும் அரண்மனை ஊழியர்கள். அதுவும் அரசனின் உணவைக் கண்காணிப்பவர்கள். ஒருவன் அரசனுக்கு ரொட்டி சுடுபவன். மற்றவன் அரசனுக்குத் திராட்சை ரசம் தயாரித்துக் கொடுப்பவன். இந்த இருவரும் தனக்கு எதிராகக் குற்றம் செய்ததாக எண்ணிய அரசன் அவர்களை சிறையில் அடைத்துவிட்டான். சிறையதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். சிறையில் தங்கியிருந்த நாட்களில் இந்த இருவரும் வெவ்வேறு கனவுகளைக் கண்டனர். தங்கள் கனவுகளைக் குறித்த பொருள் தெரியாமல் எதிர்காலம் குறித்துக் கவலையுடன் இருந்தனர். அவர்களது வாட்டத்தைத் தெரிந்துகொண்ட யோசேப்பு கனவுளைக் கூறும்படி கேட்டார்.

திராட்சை ரசக்காரனின் கனவு

திராட்சை ரசக்காரன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன். அதில் மூன்று கிளைகள் இருந்தன. அவை வளர்ந்து பூக்கள் விட்டு கனிவதைக் கண்டேன். நான் பார்வோனின் கோப்பையை ஏந்தியிருந்தேன். எனவே அந்தத் திராட்சையைப் பிழிந்து சாறு எடுத்தேன். பிறகு அதனைப் பார்வோனுக்குக் கொடுத்தேன். இதுதான் நான் கண்ட கனவு” என்றான்.

இதைக்கேட்ட யோசேப்பு, “ நீ கண்ட கனவில் மூன்று கிளைகள் என்பவை மூன்று நாட்கள். இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் மன்னன் உன்னை மன்னித்து, விடுதலை செய்து, பழையபடி உன்னைத் தனது திராட்சைரசக்காரனாக ஏற்றுக்கொள்வார்” என்றவர், “நீ விடுதலையாகி அரண்மனையில் மீண்டும் பணியில் சேர்ந்ததும் என்னை நினைத்துக்கொள். மன்னனிடம் என்னைப் பற்றிக் கூறு. அவர் என்னை விடுதலை செய்வார். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் சிறையில் இருக்க வேண்டியவன் அல்ல” என்றார்.

ரொட்டி சுடுபவனின் கனவு

இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ரொட்டி சுடுபவன் தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “என் தலையில் ரொட்டிகளால் நிறைந்த மூன்று கூடைகள் இருந்தன. அவை மன்னனுக்காக நான் சுட்ட ரொட்டிகள். ஆனால் மேல் கூடையில் இருந்த ரொட்டிகளைப் பறவைகள் தின்றுகொண்டிருந்தன ” என்றான்.

இந்தக் கனவுக்கும் பொருள் கூறிய யோசேப்பு, “உன் தலையில் இருந்த மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். மூன்று நாட்கள் முடிவதற்குள் நீயும் விடுதலை செய்யப்படுவாய் ஆனால் அரசன் உன் தலையை வெட்டிவிடுவான். உனது உடலைக் கம்பத்தில் தொங்கவிடுவான். பறவைகள் உன் உடலைத் தின்னும்” என்று கவலையோடு கூறினார். ரொட்டி சுடுபவனோ கதறித் துடித்தான். யோசேப்பு அவனுக்கு ஆறுதல் கூறினார்.

மூன்று நாட்கள் கடந்ததும் யோசேப்பு சொன்ன சொற்கள் பலித்தன.

உயிர் பிழைத்து அரசனின் திராட்சை ரசக்காரனாய் மீண்டும் தனது வேலையைத் தக்கவைத்துகொண்டவன் அதன் பிறகு யோசேப்புவை மறந்துபோனான்.

(பைபிள் கதைகள் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x