Last Updated : 13 Feb, 2014 12:00 AM

 

Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

புத்தரின் சிந்தனைகள்: இதுதான் பொன்னுலகம்

புத்தர் தன்னை நாடி வந்த அனைவரையும் சமமாகப் பாவித்ததுடன் , சாதி வேற்றுமை பாராட்டாதவராகவும் இருந்தார். அத்துடன் இன்னொரு வகையிலும் மற்ற துறவிகளில் இருந்து அவர் மாறுபட்டிருந்தார். அது எளிய மக்களிடம் எளிமையான மொழியில் பேசியதுதான்.

பின்னாளில் அவருடைய உபதேசங்களும் உண்மைக் கதைகளும் அவர் பேசிய எளிய மொழியில் எழுதப்பட்டன. இந்து மதத்தின் கருத்துகளும் தத்துவமும் வடமொழியில் எழுதப்பட்டன. அது உயர்ந்த நடையிலும் கற்றறிந்தோரால் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் இருந்தது. அதற்கு மாறாக, புத்தரின் உபதேசங்களும் கதைகளும் தத்துவ ஞானத்தை சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் இருந்தன. அறிஞர்கள், குருக்கள் போன்ற கற்றறிந்தோரின் உதவி இன்றியே, மக்கள் தத்துவ அறிவைப் பெற்றனர்.

புத்தரின் உபதேசத்திலிருந்த சிந்தனைச் செருக்கற்ற யதார்த்தம், சாதாரண மக்களைக் கவர்ந்தது. கற்றோர் விரும்பும் சிந்தனைச் செறிவு பொதிந்த நடையை புத்தர் தவிர்த்தார். புத்தர் காலத்தில் இருந்த அறிஞர்களும் குருக்களும் துறவிகளும் தற்போது உள்ளதைப் போன்றே நடைமுறையில் இருந்து விலகிய தத்துவ விவாதங்களையே பெரிதும் விரும்பினர். புத்தர் அத்தகைய விவாதங்களை விளக்கினார். அது போன்ற விவாதங்களை மற்றவர்கள் எழுப்பியபோது சில நேரம் புத்தர் மௌனம் சாதித்தார். சில நேரம் கேலியும் செய்தார்.

ஒரு முறை புத்தர் சிரஸ்வதி நகரில் இருந்தபோது, கற்றறிந்த சான்றோரும் பிச்சை எடுக்கும் துறவிகளும் ஒன்றாக அங்கே வர நேரிட்டது. அப்போது அவர்களுக்குள் கருத்து பேதம் எழுந்தது. அதனால் சச்சரவு ஏற்பட்டு கூச்சலும் குழப்பமும் நிலவியது. இந்த உலகம் நிலையானதா, இல்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு சண்டை பெரிதானது. அதைக் கண்ட புத்தரின் சீடர்கள் இதைப் பற்றிக் கேள்வி எழுப்பினர். அதற்கு புத்தர், இன்று பிரபலமாக மாறிவிட்ட ஒரு கதையின் மூலம் விளக்கம் அளித்தார்.

அந்தக் கதை பார்வையற்றவர்களைப் பற்றியது. அந்தப் பார்வையற்றவர்கள் ஒரு பெரிய யானையைத் தங்கள் கைகளால் தொட்டு உணர்ந்தனர். யானையின் ஒரு காலைத் தடவிய ஒருவர், அது தூண் என்று கூறினார். தலையைத் தொட்ட பார்வையற்றவருக்கு, அது ஒரு பானை போலத் தோற்றமளித்தது. தந்தத்தைத் தொட்ட பார்வையற்றவருக்கு அது கலப்பையின் நுனி போலத் தோன்றியது. இப்படியாக யானையின் தோற்றம் ஒவ்வொருவர் எப்படித் தொட்டு உணர்ந்துகொண்டாரோ அப்படித் தோன்றியது. ஆனால் அவர்கள் உணர்ந்தது உண்மையின் ஒரு அம்சத்தை மட்டும்தான். ஆனால் முழு உண்மையை அல்ல. இதுவே அந்தக் கதையின் உட்கரு.

“அதைப் போலத்தான் இங்கே சண்டையிட்ட அறிஞர்களும், உண்மையின் முழு வடிவத்தை உணரவே இல்லை. அவர்கள் அனைத்தும் தெரிந்த அறிஞர்கள் அல்ல. அறிஞர்களைப் போல நடிப்பவர்கள்” என்றார் புத்தர்.

இதுபோல புத்தரின் உபதேசங்களில் பெரும்பாலானவை யதார்த்தத்தையும் விவேகம் நிறைந்த அணுகுமுறையையும் கொண்டவை. எடுத்துக்காட்டாக, “கண்களால் பார்க்க முடிபவை, காதால் கேட்க முடிபவை, மூக்கால் முகர்ந்து பார்க்கக்கூடியவை, நாக்கால் ருசிக்கக்கூடியவை, உடலால் தொட்டு உணரக்கூடியவை ஆகியவையே நமது அறிவுக்கும் எண்ணங்களுக்கும் அடிப்படை. இந்த உணர்ச்சிகளால் உணரக்கூடியவையே இந்த உலகம். இவைதான் பரம்பொருள். இவற்றைத் தவிர்த்து வேறு எந்தப் பரம்பொருளையும் மனிதர்களால் உய்த்து உணர்வது சாத்தியமில்லை” என்றார் புத்தர்.

ஒரு முறை இந்த உலகத்துக்கு வெளியே உள்ள செல்வங்களால் நிறைந்த, முதுமையற்ற, அழிவற்ற, மீண்டும் பிறக்கும் சக்தி கொண்ட மறு உலகத்தைப் பற்றிக் கேட்டபோது, “இங்கே நடைமுறையில் உள்ள உலகத்தைத் தவிர்த்த பொன் உலகம் என்று வேறு எதுவும் இல்லை” என்று உறுதியாகக் கூறினார் புத்தர்.

மற்ற மதத்தினர் நம்பும் மோட்சம் அல்லது சொர்க்க உலகம் ஒன்று இருக்கிறது என்று புத்தர் எந்தக் காலத்திலும் நம்பவில்லை, அதைப் போதிக்கவும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x