Last Updated : 03 May, 2014 06:36 PM

 

Published : 03 May 2014 06:36 PM
Last Updated : 03 May 2014 06:36 PM

பல லட்சம் பக்தர்கள் திரளும் வீரப்பூர் திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக் காண்டியம்மன் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோயில் உள்ளது. அருகில் “நான் இருக்கிறேன், கவலை ஏன், பயம் ஏன் உங்களுக்கு” என காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் மிரட்டும் விழிகளுடன் இருக்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் கூடிய சாம்புவன் சிலை ஆகியன உள்ளன. அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமெனக் கூறப்படும் தவசு கம்பம் உள்ளது.

வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம்பள்ளம், வீரப்போர் நடந்த இடமாகக் கருதப்படும் படுகளம் கோயில், அண்ணன்மார் சுவாமி கதையில் வெள்ளாங்குளம் என்று கூறப்படும் இனாம்குளத்தூர், வளநாடு அண்ணன்மார் கோட்டை கோயில், கன்னிமார் அம்மன் கோயில், கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோயில் என வீரப்பூரை, பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோயில்கள், முக்கிய இடங்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏராளம் உள்ளன.

கட்டுச்சோறு கட்டிக்கொண்டு…

முன்பெல்லாம் (சுமார் 30- 40 ஆண்டுகளுக்கு முன்) கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக வீரப்பூர் செல்வார்களாம். தங்களின் ஊரில் இருந்து வீரப்பூரின் அடையாளமாக விளங்கும் ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து புறப்பட்டு வீரப்பூரை மையமாகக் கொண்ட அத்தனை கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர்ப் பந்தல் (நீர்மோரும் கிடைக்கும்) அமைத்து தரும காரியம் செய்து வந்தனர்.

பல மாவட்டங்களிலும் பக்தர்கள்…

ஆண்டுதோறும் வீரப்பூர் சென்றுவரும் பக்தர்கள் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளனர். ஆண்டுதோறும் சென்றுவந்தது போய், இன்றைக்கு மூன்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே உறவினர்களை அழைத்துக் கொண்டு வேனில் செல்கிறார்கள். அங்குள்ள பெரிய கோயிலில் (வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன் கோயிலை அங்கு இவ்வாறு சொல்வார்கள்) குழந்தைகளுக்கு முடியிறக்கி, பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதாக மாறிவிட்டது. புறப்பட்டு வரும் வழியில் கூடுதலாக படுகளம் கோயிலில் சுவாமி கும்பிட்டு விட்டு வருவதோடு முடிந்து விடுகிறது. ஆனால், மாசி மாதத் திருவிழாவின்போது வீட்டுக்கு ஒருவரேனும் சென்று நெய்விளக்குப் போட்டுவிட்டு வருவது வழக்கத்தில் உள்ளது.

உடுக்கடி கதைப்பாட்டு...

பொன்னர்- சங்கர் கதை படிக்கும் வழக்கம் இன்றளவும் திருச்சி, கரூர் மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளில் காண முடியும். பொன்னர்- சங்கர் பிறந்து வளர்ந்தது, தங்கை மீது கொண்டிருந்த பாசத்தை விளக்குவது, போர் புரிந்து படுகளம் கண்டது, தங்காள் புலம்பல், பெரியக்காண்டியம்மன் படுகளம் கண்டோரை எழுப்புதல் என பல்வேறு பகுதிகளைக் கொண்டதாக அந்தக் கதைப்பாடல் இருக்கும்.

பொன்னர்-சங்கர் நாடகம்

பொன்னர்- சங்கர் கதையை நாடகமாக (தெருக்கூத்து வடிவம்- பாடல், அதற்கான விளக்கமாக கொஞ்சம் வசனம்) நடித்துவரும் குழுக்கள் ஏராளம் உள்ளன. வீரப்பூர் திருவிழாக் காலங்களில் குறிப்பாக படுகளம் அன்றும் வேடபரித் திருநாளன்று இரவும் சுமார் நூறு நாடகக் குழுக்களேனும் ஆங்காங்கே மேடை போட்டு அண்ணன்மார் கதையை நாடகமாக நடித்து வரும் களமாக இன்றளவும் உள்ளது. குலதெய்வ வழிபாடு, வீரப்போர் நடந்த இடம் என்பதையெல்லாம் தாண்டி முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வளர்க்கும் இடமாகவும் வீரப்பூர் உள்ளதென்றால் அது மிகையல்ல.

வீரப்பூரில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று திருவிழா தொடங்கும். அதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், படுகளம், வேடபரி, தேரோட்டம் என கோலாகலமாக நடைபெறும். குல தெய்வ வழிபாட்டுக்காரர்கள் தான் செல்ல வேண்டும் என்றில்லை. திருவிழாக் காலத்தில் ஒருமுறை நீங்கள் சென்று வந்தால் பின்னர் சொல்வீர்கள் “பல லட்சம் பக்தர்கள் கூடும் இப்படி ஒரு பிரம்மாண்டமான திருவிழாவை வேறு எங்கும் காணமுடியாது” என்று.

அதற்கு மிகப் பெரியதாய் ஒரு காரணம் உள்ளது, வீரப்பூர்… வீரத்தின், பாசத்தின், நட்பின், நம்பிக்கையின் எல்லாவற்றிற்கும் மேலாய் சரித்திரத்தின் சாட்சி…!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x