Last Updated : 22 Dec, 2016 09:51 AM

 

Published : 22 Dec 2016 09:51 AM
Last Updated : 22 Dec 2016 09:51 AM

நபிகள் தோளில் இரண்டு சிங்கங்கள்

“என் இறைவனே! என் நெஞ்சத்தை எனக்காக விரிவாக்கி, என் சொற்பொழிவை லேசாக்கி வை. என் நாவிலிருந்து கஷ்டங்களை நீக்கி குழுமியிருக்கும் மக்கள் என் பேச்சை அறியும்படிச் செய்!” என்று குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது.இப்படி மவுனமாகப் பிரார்த்தித்தபடி உரையாற்றத் தொடங்கினால் பயன் பெறுவது உறுதி. மூஸா நபி (மோசஸ்) இப்படிப் பிரார்த்தித்து சாதனை புரிந்தார் என்பது சரித்திரம்.

அக்கால கொடுங்கோல் மன்னன் ஃபிரிஅவ்னிடம் செல்லும்படி கூறப்பட்ட போது மூஸா நபிக்கு அச்சம். அந்த அரசனின் சபையில் பேச முடியுமா? அவருடைய நாவில் நடுக்கம். இறைவனைப் பிரார்த்தித்தார். பலன் கிடைத்தது.“ நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம்; அல்லது நடுக்கம் அடையலாம்” என்று இறைவன் பணித்தான்.

முஹம்மது நபி அவர்களின் வழிமுறையும் இதுதான். உணவை உண்ணத் தொடங்குமுன் இறைவனைத் துதிப்பார்கள். உண்டு முடித்த பிறகும் பிரார்த்திப்பார்கள். சற்று நீளமான, உருக்கமான பிரார்த்தனையுடன் பல சமயங்களில் அவர்கள் சொற்பொழிவைத் தொடங்குவதும் உண்டு

“ எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது அவன் புகழைப் போற்றி அவனிடமே உதவியை நாடுகிறேன். பிழை பொறுக்கும்படி அவனையே வேண்டுகிறேன்” என்று தொடங்கும் துதி அது. நபி பெருமான் நிகழ்த்திய உரைகள் சிறப்பானவை அதனால் தான் இஸ்லாம் பரவியது அதற்குரிய சக்தியை நாவன்மையைத் தமக்கு அளித்தவன் இறைவனே என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆற்றல் எதிர்ப்பாளர்களையும் எழுந்து நிற்க வைத்தது.

மக்கா நகரில் சமயபோதனை செய்துவந்த தொடக்க காலம் அது. அவர்களின் ஆன்மிகப் பிரச்சாரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத அபூஜஹல், உத்பா முதலானோர் கடுமையாக எதிர்த்தனர். அருகில் அழைத்து அவமரியாதை இழைக்கவும் திட்டமிட்டனர்.

தாங்கள் அனைவரும் எடுப்பாக அமர்ந்திருக்கும் நிலையில் நபிமணிக்கு இடம் அளிக்காமல் நிற்கவைத்து கேள்விகளைத் தொடுத்து சிரமத்துக்கு ஆளாக்க வேண்டும் என்பது அபூஜஹல் குழுவின் திட்டம். அதன்படி அவர்கள் வசதியான இருக்கைகளில் அமர்ந்தனர். அங்கு வேறு ஆசனம் எதுவும் இல்லை அழைப்பை ஏற்று அண்ணல் நபி வந்தார். அப்போது எதிர்பாராத ஆச்சரியம் நிகழ்ந்தது. எதிர்ப்பாளன் அபூஜஹல் தன்வசம் இழந்து மறுவினாடியே எழுந்து நின்றான். ஏன் எழுந்தோம் என்பது புரியாத தடுமாற்றம் அவனுக்கு.

அபூஜஹலின் இருக்கையில் நபிமணி அமர்ந்தார்கள். எதிர்ப்பாளர்கள் திட்டமிட்ட அரங்கேற்றம் திசை மாறியது. அவர்கள் கேள்விகளைத் தொடுத்தார்கள் மறுநாள் பதில் தருவதாக நபி பெருமான் சொன்னார்கள். அப்போதே பதில் சொல்லத் தவறியது ஏன்?

பதில் இதுதான்:

“ அவர்கள் அமர்ந்தபடி உங்களை நிற்க வைத்து விசாணை நடத்த நினைத்தனர். ஆனால், கேட்பவர்களை நிற்க வைத்து உம்மை நான் அமர வைத்தேன். அந்த நிலையில் நீர் அப்போதே பதில் சொல்லியிருக்க வேணடும். நீங்கள் நாவை அசைத்திருந்தால் நான் அல்லவா பேசியிருப்பேன்!” என்று வானவர் தலைவர் ஜிப்ரயீல் (கேப்ரியல்) மூலம் தனது துாதரைக் கேட்டான் இறைவன்.

நபிமொழித் தொகுப்பான ஹதீது குத்ஸியில் இடம் பெறறுள்ள விளக்கம் இது,

அராஜகன் அபூஜஹலை எழுந்து நிற்கச் செய்தவனும் எல்லாம் வல்ல இறைவனே!

“ முஹம்மதுவைக் கண்டேன். அவருடைய இரு தோள்களிலும் இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டேன். அச்சமடைந்தேன். ஆசனத்திலிருந்து எழுந்துவிட்டேன்!’ என்று சொன்னான் அபூஜஹல்

இறைவனைத் துதித்து நாவை அசைத்தால் அவன் பேச வைக்கிறான். மூஸா நபியையும் பேசவைத்து ஃபிர்அவுனுக்குக் கொடிய முடிவைத் தந்தவன் அவன். இறுதித் துாதர் முஹம்மது அவர்களை நாவலர் ஆக்கியவனும் அவனே.

பேச வேண்டுமா? எழுத வேண்டுமா? சாதிக்க வேண்டுமா? அவனை நினைத்துத் தொடங்குங்கள். மவுனமாக மனம்விட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். பணிவைத் துணிவாக்கிப் பயன்தருவான் அவன். நெஞ்சை விரிவாக்கி, சொல்லைச் சுடராக்கித் தருவான் இறைவன். முன்னோர்களின் அனுபவங்களை வேதங்கள் எடுத்துரைக்கின்றன.

மூஸா நபியின் துதி ஒரு முன்னுதாரணம்.

“ என் இறைவனே என் நெஞ்சத்தை எனக்காக விரிவாக்கி வை. என் சொற்பொழிவை இலேசாக்கி வை. என் நாவிலிருந்து கஷ்டங்களை நீக்கி குழுமியிருக்கும் மக்கள் என் பேச்சை அறியும்படிச் செய்!” இந்தப் பிரார்த்தனை அவருக்குப் பெரும் பயனைத் தந்தது. தனது துாதர்களின் ஒருவராக்கி தவ்ராத் {பத்துக் கட்டளைகள்) என்ற வேதத்தை அவருக்கு இறைவன் அளித்தான்

மூஸா நபியின் நற்பணிகள் குர்ஆனில் விரிவாக இடம் பெற்றுள்ளன. “ சொல்லும் செயலும் இறைவனுக்காக என்ற நல்லெண்ணத்துடன், அவனைப் பிரார்த்தித்து இயங்குபவர்கள் எல்லா நன்மைகளையும் பெறுவார்கள். அவர்களே சுவனவாசிகள்!” என்று

நபி நாயகம் கூறியுள்ளதையும் அறிவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x