Published : 04 Aug 2016 10:19 AM
Last Updated : 04 Aug 2016 10:19 AM

தெய்வத்தின் குரல்: ஸ்கந்த நாமச் சிறப்பு

‘ஸ்கந்தர்' என்றால் ‘துள்ளிக்கொண்டு வெளிப்பட்டவர்' என்று அர்த்தம். பரமேச்வரனுடைய சக்தி நேத்ர ஜ்யோதிஸ்ஸாக ஒரே துடிப்போடு, லோகாநுக்ரஹம் பண்ண வேண்டுமென்ற துடிப்போடு, துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்த மூர்த்தி உத்பவமானார்.

அந்த விசேஷத்தால்தான் அவருக்கு சுப்ரஹ்மண்யர், கார்த்திகேயர், குமாரர், சரவணபவர் என்றிப்படி அநேக நாமாக்கள் இருந்தபோதிலும் அவரைப் பற்றிய புராணத்திற்கு ஸ்கந்த புராணம், ஸ்காந்தம் என்றே பெயரிருக்கிறது. அவருடைய லோகத்துக்கு ஸ்கந்த லோகம் என்றே பெயர். அவர் சம்பந்தமான விரதத்தை ஸ்கந்த ஷஷ்டி என்றே சொல்கிறோம்.

அம்பாளோடும் முருகனோடும் இருக்கும் பரமேச்வரமூர்த்திக்கும் ஸோமாஸ்கந்தர் என்றே பேர் இருக்கிறது. ‘முருகன்' என்று அவருக்குச் சிறப்பாகத் தமிழ்ப் பெயர் கொடுத்திருக்கும் நம் பாஷையிலும் கந்தரநுபூதி, கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றெல்லாம் ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சென்னை பட்டணத்தின் சிறப்பாகக் கந்தக் கோட்டம் இருக்கிறது.

ச்ருதியிலே (வேதத்திலே) ஒன்று வந்துவிட்டதென்றால் அதற்குத் தனிப் பெருமை, தனி கௌரவம் உண்டு. அப்படி இந்த ஸ்கந்த நாமத்திற்கு இருக்கிறது. புராணமான ஸ்காந்தத்தில் வள்ளி என்ற ஜீவனுக்கு நாரதர் குரு ஸ்தானமென்று வருகிறதென்றால், ச்ருதியைச் சேர்ந்த சாந்தோக்ய உபநிஷத்தில் அந்த நாரதருக்கு சுப்ரஹ்மண்யரின் பூர்வாவதாரமான சநத்குமாரர் ஞானோபதேசம் பண்ணியதாக வருகிறது.

சநத் என்று பிரம்மாவுக்குப் பெயர். ஸ்ருஷ்டி ஆரம்பத்திலேயே பிரம்மாவின் மானசீக புத்ரராகப் பிறந்தவர், சநகர், சநந்தனர், சநாதனர், சநத்குமாரர் என்ற நால்வரில் முக்கியமானவர், சநத்குமாரர். பிறக்கும்போதே ப்ரஹ்மஞானியாக இருந்த அவர்கள் நிவ்ருத்தி மார்க்கம் என்ற சந்நியாஸத்திற்கு ஆதர்ச புருஷர்கள். காமமே தெரியாத நித்ய பாலகர்களாக இருப்பவர்கள்.

ப்ரம்ம குமாரரான அந்த சநத்குமாரரே தான் சிவக்குமாரரான சுப்ரஹ்மண்யராக வந்தாரென்று சாந்தோக்யத்தில் இருக்கிறது. சிவகுமார அவதாரத்தில் அவர் வீராதிவீர ஸேநாதிபதியாகவும், இரட்டைப் பத்னிகளைக் கொண்டவராகவும் இருந்தபோதிலும் பழைய ஸநத்குமார 'வாஸனை’யால்தான் நடுவிலே கொஞ்ச காலம் பழநியில் கோவணாண்டி ஸந்நியாஸியாக நின்றார் போலிருக்கிறது! இவர் கோவணாண்டி என்றால் ஸநத்குமாரருக்கு அந்தக் கோவணங்கூடக் கிடையாது.

ஏனென்றால் இந்த சிவக்குமாரர் ‘என்றும் இளையவர்' என்றால் அந்த சநத்குமாரரோ இன்னும் இளசாக என்றும் குழந்தையாகவே இருந்தவர். அது இருக்கட்டும். என்ன சொல்ல வந்தேனென்றால், ச்ருதி சிரஸான சாந்தோக்யத்தில், சநத்குமாரர்தான் சுப்ரஹ்மண்யர் என்று முடிக்கிற இடத்தில் ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக ‘ஸ்கந்த, ஸ்கந்த' என்று இந்த நாமாவையே சொல்லியிருக்கிறது.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x