Published : 22 Dec 2016 09:52 AM
Last Updated : 22 Dec 2016 09:52 AM

தெய்வத்தின் குரல்: மத போதகரின் யோக்கியதாம்சங்கள்

இப்போது உலக நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள ஏராளமான தத்துவ ஆராய்ச்சிகாரர்களும் ஆத்ம சாதகர்களும் அத்வைதத்தையே பரம தத்துவமாக அங்கீகரிக்கிறார்கள். என்னை அத்வைத மதகுரு என்று சொல்கிறீர்கள். ஆனபடியால் அத்வைத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு பேர் இருப்பதற்குக் காரணம் அதன் சித்தாந்தத்தில் உள்ள சிறப்புதான் என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்ப்பீர்கள்.

ஆனால், எனக்கு நானே யோசித்துப் பார்க்கிறேன். அத்வைத சித்தாந்தம் ஒன்றை மட்டும் தான் சகல ஜனங்களும் பின்பற்றுகிறார்களா? உலகில் எத்தனையோ சித்தாந்தங்களை, எத்தனையோ மதங்களை மக்கள் அநுசரிக்கிறார்கள். ஒரு தேசத்து மக்களே ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு மாறவும் செய்கிறார்கள். புத்தரின் காலத்தில் வைதிக மதஸ்தர்கள் பௌத்தத்தில் சேர்ந்தார்கள். பிற்காலத்திலும் எத்தனையோ ஹிந்துக்கள் கிறிஸ்துவ மதத்திலும் முகம்மதிய மதத்திலும் சேர்ந்திருக்கிறார்கள். ஜைனர்கள் வைஷ்ணவர்களாக மாறி “புஷ்டி மார்க்கிகள்” என்று பெயர் பெற்றிருக்கிறார்கள். ஸ்ரீ ராமாநுஜர் காலத்தில் பலர் விசிஷ்டாத்வைதிகளானார்கள்.

ஸ்ரீ மத்வரின் காலத்தில் பலர் மத்வ சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஸ்ரீ ஆதி சங்கரரின் காலத்தில் அவைதிக மதங்களான பௌத்தம், ஜைனம் முதலியவற்றுக்கு நலிவு ஏற்பட்டது. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த மதங்கள் பிற்பாடு ஏன் தவிடு பொடியாக வேண்டும்? இப்படியாக ஒரு சமயத்தை, சித்தாந்தத்தை ஏற்கிற சகல ஜனங்களும் அதன் தத்துவங்களை ஆராய்ந்து பார்த்து அதனால்தான் அதில் சேருகிறார்களா? அறிவாளிகள் வேண்டுமானால் சித்தாந்தங்களை எடை போட்டு அதில் சேரலாம். ஆனால், ஒரு மதத்திலுள்ள ஏராளமான பொது ஜனங்களைப்பற்றி இப்படிச் சொல்லலாமா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன்.

பொது ஜனங்கள் தத்துவத்துக்காகவே ஒரு மதத்தை ஏற்கிறார்கள் என்றால், அவர்களிடம் 'உங்கள் மத சித்தாந்தங்களைச் சொல்லுங்கள்' என்று கேட்கும்போது அவர்களுக்குச் சொல்லத் தெரியவேண்டும். மற்ற சித்தாந்தங்களை விட இவை சிரேஷ்டமானவை என்பதற்கு அவர்களுக்குக் காரணம் சொல்லத் தெரிய வேண்டும். ஆனால், வாஸ்தவத்தில் எந்த மதத்திலும் இருக்கிற ஏராளமான பொது ஜனங்களுக்கு அந்தந்த மதத்தைப் பற்றிய கொள்கைகள் இப்படி விவாதிக்கிற அளவுக்கு நுணுக்கமாகத் தெரியாது. நம்முடைய ஹிந்து மதத்தில் உள்ளவர்களுக்கோ அடியோடு தெரியவே தெரியாது.

எனவே, எந்த மதமும் அதில் உள்ள தத்துவத்தினால் மட்டும் வளருவதில்லை என்பதுதான் என் அபிப்ராயம். சாமான்ய ஜனங்களுக்குத் தத்துவத்தைப் பற்றிக் கவலை இல்லை. நல்ல குணம், நல்ல பழக்கம் உள்ளவராக, கருணையும் சாந்தமும் உள்ளவராக ஒரு மகான் வந்தால் அவரைப் பார்த்த மாத்திரத்தில் ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது.

அவர் எந்த தத்துவத்தைச் சொன்னாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்ற திடமான நம்பிக்கையுடன் அவரது மதத்தில் ஜனங்கள் சேருகிறார்கள். மாறாக, ஒரு மதக்கோட்பாடுகள் எத்தனைத்தான் பரம தத்துவங்களை விளக்கினாலும், அந்த மதப் பிரதிநிதியாக இருக்கிறவர்களிடத்தில் ஒழுங்கு தப்பிவிட்டால் உடனே அந்த மதம் அழியத் தொடங்கிவிடுகிறது.

எந்த தேசத்திலும் எந்த ஒரு மதமும் எப்படி அழிந்தது என்று பார்த்தால், அந்த மதத்தை வளர்கிற ஸ்தாபனங்களிலும், அதன் முக்கியஸ்தர்களிடமும் ஒழுங்கீனம் உண்டானபோதே இந்த அழிவு ஏற்பட்டிருக்கிறது.

புத்தர் வந்தார். அவரது சரித்திரத்தைக் கேட்கக் கேட்க பால் வடிகிற அவரது விக்கிரகங்களைப் பார்க்க பார்க்க நமக்கே சாந்தமும், கருணையும், ஆனந்தமும், அவரிடம் ஒரு மரியாதையும் உண்டாகின்றன. அந்த காலத்துத் ஜனங்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பௌத்த விஹாரங்களில் எத்தனை ஒழுக்கக் கேடு ஏற்பட்டது என்பதை மகேந்திர பல்லவன் எழுதிய 'மத்தவிலாஸப் பிரஹஸனம்' என்கிற ஹாஸ்ய நாடகத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம். இதே காலத்தில்தான் புத்த மதம் மங்கிப் போகத் தொடங்கியது. அதாவது சமயப் பிரதிநிதிகள் தன்மையைப் பொறுத்தே சமய வளர்ச்சியும் நலிவும் ஏற்படுகின்றன.

புத்தருக்குப் பிறகு ஆதிசங்கரர் பரம உத்தமமான மனிதராக வந்தார் என்றால் ஜனங்கள் அவரிடம் திரும்புகிறார்கள். அப்புறம் ராமானுஜர், மத்வர் என்று இப்படித் தங்கள் சொந்த வாழ்க்கையில் உயர்ந்தவர்களாக விளங்கியவர்கள் வந்தபோது, அந்தத் தனி மனிதரிடம் ஜனங்களுக்கு உண்டான பிடிப்புக் காரணமாக, அவரது சித்தாந்தம் பரவியது. சமீபத்தில் சாந்தத்தோடும் தன்னலமில்லாத தியாகத்தோடும் ஒரு காந்தி வந்தார்.

உடனே அவர் சொன்னதையே 'காந்தீயம், காந்தீயம்' என்று ஒரு மதமாக கோடாநு கோடி ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள். தத்துவச் சிறப்பால்தான் ஒரு சித்தாந்தம் வளருகிறது என்றால் இன்றைக்கும் அந்தக் காந்தீயம் உச்சத்தில் இருக்க வேண்டும். ஆனால், நடைமுறை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.

நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் பரம உத்தமமான மகான்கள் தோன்றிக்கொண்டு வந்திருப்பதுதான். 'இந்த மகான் இருக்கிற மதத்திலேயே நாமும் இருப்போம்' என்று அதிலேயே ஜனங்கள் எல்லோரும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தத் தத்துவத்தைச் சேர்ந்தவராயினும் அவருக்குத் தன்னல எண்ணமே இருக்கக் கூடாது; துவேஷம் கூடாது. நல்லொழுக்கம் இருக்க வேண்டும்; நல்ல தபஸ் இருக்க வேண்டும்; சாந்தமும் கருணையும் நிரம்பியிருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுடைய குண விசேஷத்தாலேயே அவர்களைத் தேடி வருகிறவர்களின் தோஷங்களும் போய்விட வேண்டும்.

இப்படி ஒருத்தன் சாந்தமும், கருணையும், ஞானமும், தியாகமும் நிரம்பியவனாக நம்மிடையில் வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை உபன்யாசங்களும் பண்ணுகிறேன். உங்களிலேயே ஒருவர் அப்படித் தோன்றிவிட்டால் அதைவிடப் பெரிய பயன் எதுவும் இல்லை.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x