Published : 25 May 2017 09:43 AM
Last Updated : 25 May 2017 09:43 AM

தெய்வத்தின் குரல்: பண்பாட்டின் இதயம் இலக்கியம்

கலா என்கிற சமஸ்கிருத வார்த்தை, கல்வி என்கிற தமிழ்ச் சொல், கல்ச்சர் என்ற ஆங்கிலப் பதம், கொலே என்கிற பிரெஞ்சு வார்த்தை எல்லாவற்றுக்கும் மூலம் ஒன்றே. கலை சர்வ தேசத்தையும் தழுவுகிற விஷயமாதலால், வார்த்தையும் ஒன்றாகவே இருக்கிறது.

‘கலா' என்றால் எப்போதும் வளருவது என்று பொருள்—சந்திரகலை என்கிறோமே, அதுபோல். பிறை தினந்தோறும் வளர்வது போல் மன வளர்ச்சியைத் தருவது கலை. முடிவே இல்லாமல் வளர்வது இது. ‘கற்றது கைம்மண்ணளவு' என்று சரஸ்வதியே கற்றபடிதான் இருக்கிறாளாம். கலைச்சிறப்பே ‘கல்ச்சர்'. ‘கலாசாரம்' என்று இதைச் சமீப காலமாகச் சொல்கிறோம். பண்பு பண்பாடு என்பது பழைய வார்த்தை.

உயர்ந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பல கலைகளாக உருவெடுத்திருக்கிறது. உயர்ந்த எண்ணங்கள் ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு விதமாக உருவெடுக்கின்றன. சில்ப ரூபமாக, சித்திர ரூபமாக, நாட்டிய ரூபமாக, சங்கீத ரூபமாக, காவிய ரூபமாக, தியாக ரூபமாக, சேவை ரூபமாக, தான ரூபமாக இப்படிப் பல உருவங்களாக உயர்ந்த எண்ணம் வெளிப்படுகிறது.

இந்த உயர்ந்த எண்ணம் மிகவும் உயர்ந்து விரிந்து எடுத்துக்கொள்கிற உருவமே, எல்லா உயிர்களிடமும் அன்பு. உலகம் முழுக்க ஒன்றாகிவிட வேண்டும் என்று எண்ணுகிற அன்பில் பிறப்பதே மிகப் பெரிய பண்பாடு. இதுவே நமக்கெல்லாம் தலையாய கலை.

ஒரு தேசத்தின் பண்புக்கு அளவுகோல் எது? ஒரு நாடு என்று இருந்தால், அதில் எல்லோரும் பண்பாளர்களாக (culture) இருக்க முடியாது. திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லோரும் இருக்கத்தான் செய்வார்கள். இப்படிப்பட்டவர்கள் இருந்தாலும், ‘இந்தத் தேசத்தில் பண்பு இருக்கிறது. கெடுதலானவர்கள் இருந்தாலும்கூட இந்த நாடு பிழைத்துப் போகும்' என்று தெரிந்துகொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ‘இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லை' என்கிறார் அல்லவா! அதுபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும், அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஓர் இருதய ஸ்தானம் இருக்கிறதா?

இருக்கிறது. ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; அங்கங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்த தேசத்து மகாகவிகளின் (இலக்கிய கர்த்தர்களின்) வாக்கே ஆதாரமாகும். ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது, அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்.

இலக்கிய கர்த்தர்களில் உயர்ந்தவர்கள், மட்டமானவர்கள் எல்லோரும் இருப்பார்கள். இவர்களில் அசுத்தமே இல்லாதவனின் வார்த்தைதான், அழுக்கின் கனம் இல்லாததால் காலப் பிரவாகத்தில் அமுங்காமல், என்றென்றும் மேலேயே விளங்கிக் கொண்டிருக்கும்.அப்படிப்பட்டவனின் வாக்கே நமக்குக் கலாசார விஷயங்களில் பிரமாணமாகும்.

மத ஸ்தாபகர்களின் கருத்துக்கு நிரம்ப முக்கியத்துவம் உண்டு என்பது வாஸ்தவம். ஆனாலும், ஒரு மதத்தை ஸ்தாபிப்பது என்று வரும்போது பிற மதங்களுடைய கொள்கைகளைக் கண்டனம் செய்து, தங்கள் சித்தாந்தத்தையே உறுதிப்படுத்த வேண்டும் என்று ஏற்பட்டுவிடுகிறது.

தையல்காரர் மாதிரி, தங்கள் கொள்கையை மட்டும் இறுக்கிப் பிடித்து வைத்துக்கொண்டு, மற்றதை எல்லாம் வெட்டி, தங்கள் கருத்தில் கொஞ்சம் பலவீனமானதற்குக்கூட ஒட்டுக்கொடுத்து தைத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது. வெறுமே இலக்கிய சிருஷ்டியில் ஈடுபட்டிருப்பவனுக்கு இந்தப் பட்ச பாதமான வேலை கிடையாது. மனத்தில் தோன்றியது, கண்ணில் பட்டது, அழகான காட்சி, அழகிய பண்பு இவற்றை விருப்பு வெறுப்பில்லாமல் அவன் சொல்லிக்கொண்டே போவான்.

‘தனது' என்று எதையும் பிடித்துக் கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து (objective -ஆக) பேதமில்லாமல், நடுநிலை கருத்தோடு (impartial -ஆக) சர்வ சுதந்திரமாக, திறந்த மனசோடு உள்ளதை உள்ளபடி சொல்வான். உலகம் முழுவதையும் இப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுவான். அதை உலகம் எடுத்துக்கொண்டாலும் சரி, தள்ளிவிட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கிய கர்த்தாவுக்குக் கவலை இல்லை. பயனை எதிர்ப்பார்க்காதவன் அவன். முதலில் சொன்னதுபோல் இவன் அழுக்கே இல்லாமல் சுத்தமானவனாக இருந்தால் இவன் மனத்தில் தோன்றுவதே உத்தமமான பண்பு. அதை யாருக்கும் பயப்படாமல் சொல்லிவிடுவான். தன் மனத்தில் உத்தமமாகத் தோன்றாததை இன்னொருத்தருக்கு பயப்பட்டோ பவ்யப்பட்டோ ஒரு கவி சொல்லமாட்டான்.

ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின் இப்படிப்பட்ட மகாகவியின் வாக்குதான்.

இன்று உள்ள இலக்கியம் நாளை நிற்குமா என்று நமக்குத் தெரியாது. எனவே, பல காலமாக உரைத்து உரைத்து மக்களுடைய ஜீவனைப் போலவே உறைந்து சாசுவதமாக விளங்கி வந்திருக்கிற காவியங்களை இயற்றியவர்களின் வாக்கையே பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குமரிலபட்டர், வேதாந்த தேசிகன் போன்ற மத ஸ்தாபகர்களுங்கூடக் காளிதாசன் மாதிரியான இப்படிப்பட்ட மகாகவிகளின் வாக்கை அதிகார பூர்வமானதாக எடுத்துக் காட்டுகிறார்கள். அதிலிருந்தே அதன் ‘அதாரிடி' தெரிகிறது.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x