Published : 27 Oct 2016 09:43 AM
Last Updated : 27 Oct 2016 09:43 AM

தெய்வத்தின் குரல்: பண்பாடு - தமிழகப் பண்பின் பெருமை

உலகத்தில் இருக்கிற கோயில்களில் பாதிக்கு மேல் இந்தியாவில்தான் இருக்கின்றன. இதிலும் பாதிக்கு மேற்பட்ட ஆலயங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.

உலகத்தில் இருக்கிற சாஸ்திரங்களில், பக்தி நூல்களில் பாதிக்குமேல் இந்தியாவில்தான் இருக்கின்றன. இதில் பாதிக்கு மேற்பட்ட நூல்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையே. கும்பகோணத்தைச் சுற்றியுள்ள காவிரிப் பிரதேசத்தில் கிடைத்த ஏட்டுச் சுவடிகள், உலகத்திலுள்ள சாஸ்திரங்களில் பாதிக்கு மேற்பட்டவை என்று அறியும்போது, நமக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.

இதோடுகூடத் தமிழ்நாட்டுக்கு இன்னொரு தனிப் பெருமை உண்டு. சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட மொழியும், ஒரு விசேஷமான கலாச்சாரமும் உள்ள ஒரு பிரதேசத்தில் பிற மொழியினரும், பிற கலாச்சாரத்தினரும் குடியேறினால், நாளடைவில் அவர்கள் தங்கள் தனி வழக்கங்களையும் பாஷைகளையும் இழந்து அந்தப் பிரதேசத்தின் மொழியையே பேச ஆரம்பித்துவிடுவார்கள். அங்குள்ள நாகரிகத்தையே பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். உலக நாடுகளின் சரித்திரத்தைப் பார்க்கும்போது இந்த உண்மை நிதர்சனமாகிறது.

இப்போது உத்யோக நிமித்தம் வடக்கே நம்மவர் போகிறது மட்டுமின்றி, பூர்வத்திலேயே தமிழ்நாட்டு பிராம்மணர் பலர் வடக்கே போயிருக்கிறார்கள். ஆந்திரர்களுக்கும் சோழர்களுக்கும் கல்யாணக் கொள்வினை, கொடுப்பினை இருந்த சமயத்தில், இப்படி பலர் போயிருக்கிறார்கள். வேறு சந்தர்ப்பங்களிலும் போயிருக்கிறார்கள். இப்போது வடநாட்டுக்காரர்கள் பலர் த்ரவிட் (Dravid) என்று குலப்பெயர் போட்டுக் கொள்வதைப் பார்த்திருப்பீர்களே. அவர்களில் பலர், இம்மாதிரி குடியேறியவர்களின் வம்சத்தில் வந்தவர்கள்தான்.

ஆனால், வெளி மாகாணங்களில் உள்ள இந்தத் ‘திராவிடர்'களுக்குத் தமிழ் மொழியே அடியோடு தெரியவில்லை. நீண்ட காலமாக ஒரு பகுதியில் வசிக்கும் பிற சீமையைச் சேர்ந்த மைனாரிட்டிக்காரர்கள் தங்கள் மூல பாஷையைக்கூட மறந்து விடுகிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

இப்படி நான் சொன்னதால் ஆரியர்கள் வடக்கே, திராவிடர்கள் தெற்கே என்று பாகம் பிரிப்பதாக அர்த்தமில்லை. நம் பழைய சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்போது வெள்ளைக்காரர்கள் ஆரியர், திராவிடர் என்று இரண்டு வேறு இனமாக (race) பேதப்படுத்தி சொல்லியிருப்பதற்கே ஆதாரமில்லை.

தேசம் பூராவிலும் இருந்தவர்களை—ஒரே இனத்தவர்களைத்தான்—பஞ்ச கௌடர்கள், பஞ்ச திராவிடர்கள் என்பதாக பாரத தேசத்திலிருக்கிற பத்துப் பிராந்தியங்களில், இப்படி ஐந்து, அப்படி ஐந்து என்று பிரித்திருந்ததாகவே நம் சாஸ்திரங்களிலிருந்து தெரிகிறது. இது பிரதேச ரீதியில் (regional) செய்த பிரிவே தவிர, இன ரீதியில் (racial) செய்தது அல்ல.

பிற்பாடு திராவிடம் என்பது தமிழரையும், கௌடர் என்பது வங்காளியரையும் மட்டும் குறிப்பதாக ஆகியிருக்கிறது. ஆதியில் எல்லாம் ஒரே இனம், ஒரே மதம் என்றுதான் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் தமிழ்நாடே திராவிடம் ஆன பிறகும், இங்கிருந்து சிலர் கூட்டமாக வடக்கே போய்க் குடியேறிய பிராம்மணர்களைப் பற்றித்தான் நான் மேலே சொன்னேன்.

அவர்களுக்கெல்லாம் இப்போது பேரில் ‘திராவிட' என்பது ஒட்டிக்கொண்டிருந்தும் கூட, தமிழ் பாஷை அடியோடு தெரியாமல், அந்தந்தப் பிராந்திய பாஷை பழக்கம் இவற்றிலேயே பூரணமாகக் கரைந்துவிட்டிருக்கிறார்கள். இதுதான் லோகம் முழுக்கவே பொது வழக்கு. ஒரு பிரதேசத்துக்கு இன்னொரு பிரதேசத்தவர்கள் வந்து குடியேறினார்கள் என்றால், இப்படிக் குடியேறிகள் தங்கள் கலாச்சாரத்தை நாளாவட்டத்தில் இழந்து அந்தப் பிரதேசக் கலாச்சாரத்தையே தழுவிவிடுகிறார்கள்.

பிறருடைய பாஷையை, பழக்கங்களை வெகு சுலபமாக எடுத்துக்கொள்வதில் தமிழ் ஜனங்களுக்கே ரொம்பவும் திறமை இருக்கிறது. தமிழன் என்றால் இங்கிலீஷ்காரனை விட நன்றாக இங்கிலீஷ் பேசுகிறான். ஹிந்திக்காரனைவிட நன்றாக ஹிந்தியில் பேசுகிறான். பால்ரூம் டான்ஸிலிருந்து, ஹிந்துஸ்தானி சங்கீதம் வரை எல்லாம் இவனுக்கு அநாயாசமாக வந்துவிடுகிறது. இதிலே பாராட்டுவதற்கும் விஷயம் இருக்கிறது; கண்டிப்பதற்கும் விஷயம் இருக்கிறது.

இது அந்நியம், பிறத்தியாருடையது என்று இல்லாமல் எதையும் இவனால் எடுத்துக்கொள்ளமுடிகிறதே என்று பாராட்டலாம். ஆத்ம சிரேயஸுக்காக இல்லாமல் வெறும் இந்திரிய சுகத்துக்காகவோ, புத்திப் பெருமைக்காகவோ மட்டும் இவன் மற்றவர்களின் தப்பான சமாசாரங்களில் மோகித்து விழுந்து, அவற்றையும் தனதாக ஸ்வீகரித்து விடுகிறானே என்கிறபோது கண்டிக்க வேண்டியதாகிறது.

தமிழ்மொழியும் இந்தப் பிரதேசத்துக்கென்றே விசேஷமாக உள்ள சில பண்பாடுகளும் ரொம்பவும் புராதனமானவை, ஜீவசக்தி வாய்ந்தவை. அப்படியானால், இத்தனை தொன்மையும் சக்தியும் இல்லாத கலாச்சாரங்களே புதிதாக வந்தவர்களைத் தங்களில் கரைத்துக்கொள்கின்றன என்றால், அவற்றைவிட வலுவாகத் தமிழ் நாடானது இங்கே வந்து குடியேறியவர்களின் விஷயத்தில் இதைத் செய்திருக்கத்தானே வேண்டும்? இப்படி நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால், நடைமுறையில் பார்த்தால் நேர்மாறாக இருக்கிறது. மற்ற பிரதேசங்கள் தங்கள் பாஷை, பழக்கங்கள் இவற்றிலேயே புதிதாக வந்தவர்களைக் கரைத்துவிடுகின்றனர். ஆனால், தமிழ்நாடு ஒன்று மட்டும் இதற்கு விலக்காக இருக்கிறது. தமிழ்நாட்டில் மஹாராஷ்டிரர்கள், ஆந்திரர்கள், கன்னடியர்கள், குஜராத்திகள், சௌராஷ்டிரர்கள் முதலிய பல சமுதாயத்தினர் எத்தனையோ பரம்பரைகளாக வாழ்ந்துவருகின்றார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பாஷைகளையே பேசிவருகிறார்கள். தங்களது பழக்க வழக்கங்களையே பின்பற்றி வருகிறார்கள்.

ஆதிகாலத்திலிருந்து திராவிட தேசமானது இவ்வாறு அந்நிய தேசங்களிலிருந்தும் பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்தும் வந்தவர்களுக்கெல்லாம் இடம் தந்து அவரவரையும் அவரவரது பாஷை, சம்பிரதாயம் இவைகளிலேயே நிலைப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு ஒரு ‘ரிஃப்ரிஜிரேடர்' (குளிர்பதனப் பெட்டி) போல் எல்லா பாஷைகளையும் எல்லா நாகரிகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத் தந்து வந்திருக்கிறது. குளிர் சாதனப் பெட்டியில் வைத்த பழம்போல் மற்ற பிரதேச பாஷைக்காரர்களான மகான்களின் இலக்கிய சிருஷ்டிகளும் இங்கே உண்டாகி, கெடாமல் ரக்ஷிக்கப்பட்டுவந்திருக்கின்றன.

உதாரணமாக தியாகராஜரின் தெலுங்குக் கிருதிகள் இந்த மண்ணில் பிறந்தவையே. தெலுங்கு தேசத்திலேயே இப்படிப்பட்ட சிருஷ்டி உண்டாகவில்லை. இப்படியே பல பாஷைக் கிரந்தங்கள், பல சித்தாந்தங்கள் இங்கு உருவாயின. மற்றவை அனைத்தோடும் தன்னை இழையவிட்டுக் கொண்டு, தன்னை மற்றவர் மீது திணித்து நிர்ப்பந்திக்காமல் இருக்கிற ஒரு தனிப் பண்பு திராவிட தேசத்துக்கே சிறப்பாக இருந்து வந்திருக்கிறது.

தொன்றுதொட்டு வேத நெறியின் வீடாக இருந்திருப்பது தமிழகமே. மனித குலத்தின் முதல்வரான மநு, வைகை அருகேயுள்ள கிருதமாலா கரையில் வசித்ததாகவே பாகவதம் கூறுகிறது. வேத தர்மம் இங்கேதான் பிறந்தது. உலகத்திலேயே ஈடு இணையில்லாத பக்திச் செல்வத்தையும் நீதி நூல்களையும் தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், பட்டினத்தார், தாயுமானவர், திருவள்ளுவர், சங்கப்புலவர் போன்றவர்களும் எங்கு பார்த்தாலும் திராவிட நாட்டின் வேதத்தின் பெருமையைப் பற்றித் தங்கள் நூல்களில் பேசுகிறார்கள்.

சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வேத பாடசாலைகளுக்கும் வேத வித்துக்களுக்கும் தாங்கள் செய்த சாஸனங்களைக் கல்வெட்டுகளில் பொறித்துப் பூரிப்படைந்திருக்கிறார்கள். சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் புலவரான ஸ்ரீ வேதநாயகம் பிள்ளைகூடத் தமிழ்நாட்டில் தேவாலயங்களோடு ‘பிரம்மாலயங்கள்' (வேத பாடசாலைகள்) நிறைந்திருப்பதையே பெருமையோடு கூறியிருக்கிறார். 'வேதம் நிறைந்த தமிழ்நாடு' என்று பாரதியார் பாடியது உங்களுக்குத் தெரியும்.

இப்படி வேத தர்மமும் சகல கலைகளும் பாரமார்த்திகமும் தோய்ந்து கிடக்கும் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்திலிருந்து அவ்வப்போது அவைதிகமும் நாஸ்திகமும் தலை காட்டி வந்ததும் உண்டு. ஆனால், இத்தகைய நாஸ்திக ஆட்டங்கள் ஏற்பட்ட ஒவ்வொரு சமயத்திலும் மக்கள் விழித்துக்கொண்டு, தங்களது தெய்வ பக்திக்கும், வைதிக நம்பிக்கைக்கும் கூர் தீட்டிக்கொண்டதை சரித்திரம் சொல்கிறது. அதற்கப்புறம் வேத நெறி இரு மடங்காகக் கொழுந்துவிட்டு ஜொலித்திருக்கிறது.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x