Published : 14 Jul 2016 11:56 AM
Last Updated : 14 Jul 2016 11:56 AM

தெய்வத்தின் குரல்: சிவ - சக்தியின் ஐக்கிய ஸ்தானம்

அர்ச்சனை செய்யப்போனால் இவருக்கு ஒரு தினுசு புஷ்பத்தால் அர்ச்சனை பண்ண வேண்டும்; அவளுக்கு இன்னொன்றால் பண்ண வேண்டும் என்கிறார்களே, 'இந்தப் பக்கத்துப் பூ அந்தப் பக்கத்தில் விழுந்தால் அபசாரமாகிவிடுமோ?' என்று கலக்கமாயிருக்கிறது. 'கடாக்ஷம் வேண்டும்' என்று கேட்கிறபோதே வலது கண்ணா, இடது கண்ணா என்று குழப்பம்.

“அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்” என்று ஒளவைப் பாட்டி சொல்கிறார் என்றால், அந்தத் தெய்வமே அன்னையும் பிதாவுமாகி - ஒரு பாதி அன்னை, ஒரு பாதி பிதா என்று - அர்த்தநாரீசுவரராக உட்கார்ந்திருக்கிறது.

இது நமக்குப் பரம லாபம் என்று கிட்டே போகிறோம். போனால் அப்புறம் இதனாலேயே சில குளறுபடிகள், சண்டைகள்கூட உண்டாகிவிடுகின்றன. காலில் போய் விழலாம் என்றால், ஒரு கால் ஈஸ்வரனுடையது, மற்றது அம்பாளுடையது என்று இருக்கிறது.

இப்படிக்கு ஒன்றுக்கு மேல் ஆசாமி இருந்தால், உடனே நம்மையறியாமல் இது உசத்தியா அல்லது அது உசத்தியா, என்று ஒப்புப் பார்க்கிற எண்ணம் (Comparison) உண்டாகிவிடும். இது உண்டானால் அனர்த்தம்தான்.

எந்தக் காலில் விழுவது என்றே தெரியாது. அர்ச்சனை செய்யப்போனால் இவருக்கு ஒரு தினுசு புஷ்பத்தால் அர்ச்சனை பண்ண வேண்டும்; அவளுக்கு இன்னொன்றால் பண்ண வேண்டும் என்கிறார்களே, ‘இந்தப் பக்கத்துப் பூ அந்தப் பக்கத்தில் விழுந்தால் அபசாரமாகிவிடுமோ?' என்று கலக்கமாயிருக்கிறது. ‘கடாக்ஷம் வேண்டும்' என்று கேட்கிறபோதே வலது கண்ணா, இடது கண்ணா என்று குழப்பம்.

குழப்பம் போதாதென்று சண்டையே மூட்டிவிடுகிறார் ஒரு கவி. அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் பிறந்து மதுரையில் மந்திரியாகப் பரிபாலனம் செய்த நீலகண்ட தீக்ஷிதர்தான் அவர். “ஆனந்த ஸாகர ஸ்தவம்” என்று மீனாக்ஷியைத் துதிக்க ஆரம்பித்தவர், பார்வதீ பரமேசுவரர்களான தம்பதியருக்குள் கலகம் மூட்டி சந்தோக்ஷப்படுகிறார்.

“அம்மா! இதென்ன உன் பதி அக்கிரமக்காரராக இருக்கிறார்? உன் புகழையெல்லாம் அவர் அல்லவா திருடிக்கொண்டிருக்கிறார்? காமதகனர், மன்மதனை எரித்தவர் என்று பெயர் வாங்கியிருக்கிறாரே, எரித்தது நெற்றியின் நடுவில் இருக்கிற கண் அல்லவா?

அது வலது இடது இரண்டுக்கும் பொது. எனவே உனக்கும் அந்த நெற்றிக் கண்ணில் பாதி உண்டு. வெற்றியிலும் பாதி உன்னுடையதாக இருக்க, அவர் மட்டுமே பேரை அடித்துக்கொண்டு போய்விட்டாரே! போனால் போகிறது. இதிலாவது பாதி உரிமை அவருக்கு இருக்கிறது.

இதைவிட, அநியாயம் அவரைக் ‘காலகாலன்' என்பதுதான். காலனை உதைத்தது எந்தக் கால்? இடது கால் அல்லவா! அது முழுவதும், நூறு பெர்ஸெண்டும் உன்னுடையதல்லவா? நீ செய்த கால சம்ஹாரத்தை, அவர் தமதாகத் தஸ்கரம் பண்ணியிருக்கிறாரே!” என்கிறார்.

ஜனனம், மரணம் இரண்டையும் கடக்க முறையே காமஜயம், காலஜயம் பண்ண வேண்டுமானால், அம்பாள் அருள் இன்றி முடியாது என்கிற பெரிய தத்துவத்தைக் கவித்வ ஸ்வாதந்திரியத்தோடு, ஸ்வாதீனத்தொடு இப்படிச் சொல்கிறார்.

ஆனால், அவர் ரொம்பப் பெரியவர். சண்டை மூட்டி விட்டதோடு அவர் நின்றுவிடவில்லை. எல்லாச் சண்டைகளும் (வாழ்க்கைப் போராட்டமே) தீர்த்து போகும்படியான பரமப் பிரேமை, இந்த அர்த்தநாரீசுவரருக்குள் எங்கே ஊற்றெடுக்கிறது என்பதையும், ‘சிவலீலார்ணவ'த்தில் சொல்கிறார்

பரமாத்மாவின் அன்பு ஊற்றெடுக்கும் அந்த இடத்தை நினைத்துவிட்டால் நமக்கு ஒரு குழப்பம், குறைவும் உண்டாகாது. அப்படியே அதில் ஊறிப்போகவே தோன்றும். அவர் இரத்தினச் சுருக்கமாகச் சொல்வதை விவரித்துச் சொன்னால்தான் நமக்குப் புரியும்.

அர்த்தநாரீசுவர ரூபத்திலிருந்து பார்வதி - பரமேசுவரர்களின் எல்லா அங்கங்களையும் பிரித்துப் பிரித்து பாகம் பண்ணுகிறோம். ‘மாதொரு பாகன்', ‘உமையொரு பாகன்' என்றெல்லாம் அவருக்கும், ‘பாகம் பிரியாள்' என்றே அவளுக்கும் பெயர்கள் இருந்தாலும்கூட, இது இவர் கண்- அது அவள் கண்; இது இவர் காது - இது அவள் காது என்று இப்படிப் பாகம் பிரித்துப் பார்க்க முடிகிறது. இந்தக் கூறு இவருடையது; அந்தக் கூறு இவளுடையது என்று மொத்தத்தையும் பப்பாதியாக பிரிக்க முடிகிறது.

இப்படி இரண்டு ஆசாமிகளைக் கொண்டு வந்தவுடனேயே ‘கம்பேர்' பண்ணுகிற அனர்த்தம். ‘அடாடா, அப்படியானால் பிரித்துச் சொல்ல முடியாமல் ஓரிடமும் இவர்களிடம் இல்லையா?' என்று தேடுகிறோம்.

அதை ஸ்மரித்துவிடலாம். ஏனென்றால் ‘இவளுக்கு அவருக்கு' என்று இதை பாகம் போட முடியாது. அது இரண்டு பேருக்கும் சொந்தமாயிருக்கும். ஒப்புவமை, ஒருத்தரை விட்டோம், ஒருத்தருக்கு அபச்சாரம் செய்தோம் என்கிற தோஷங்கள் உண்டாவதற்குகில்லை. அப்படி அணுப் பிரமாணமாக ஒன்று இந்த இரண்டுக்கும் மதயஸ்தானத்தில் இருந்துவிட்டால் போதும். எவ்வித மனக் கலக்கமும் இல்லாமல் அதைப் பிடித்துக்கொண்டு அம்மை அப்பனின் கூட்டு அனுக்கிரகத்தைப் பெற்றுவிடலாமே என்று தேடுகிறோம்.

இது என்ன? மனசு மனசு என்கிறோமே அதுதான். எந்த எக்ஸ் - ரேயிலாவது அதைக் காட்ட முடியுமா? அர்த்தநாரீசுவரர் மட்டும் என்றில்லை. எந்த மூர்த்தியானாலும் அதன் மனசு என்று இருக்கிறதே அதைத் தியானிப்பதுதான் விசேஷம்.

உருவத் தியானம் ரொம்ப ரொம்ப அழகாகத்தான் இருக்கிறது. ஆரம்ப தசையில் அத்தியாவசியமாகத்தான் இருக்கிறது என்றாலும்கூட, இதிலும் நம் மனசு அந்தண்டை இந்தண்டை அசையாமல் ஒருமுகப்படுவதில்லை. ஆடத்தான் செய்கிறது.

பரமேஸ்வர ஸ்வரூபம் என்றால் ஜடை, அதை விட்டு கங்கை, அதை விட்டு சந்திரன், நெற்றிக்கண், நீலகண்டம் இப்படி எண்ணமானது எதில் நிலைத்து நிற்பது என்று தெரியாமல் சலித்துக்கொண்டே இருக்கிறது. பரமாத்மாவின் மனசு என்று எடுத்துக்கொண்டாலோ அது ஒன்றாகவே இருக்கிறது.

நம் மனசிலே நூறு கோடி எண்ணங்கள். அதில் முக்கால்வாசி தேசமயமாகவே இருக்கும். தாயும் தந்தையுமாக இருக்கப்பட்ட அர்த்தநாரீசுவர மனசு இப்படியா இருக்கும்? அதில் பிரேமப் பிரேமை என்கிற ஒரு எண்ணம் தவிர வேறென்ன இருக்கும்? கருணை ஒன்றை நிறைந்த அணு மாத்திரமான மனசு அது. அதைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்கிறார் கவி. அதிலே நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகிறவர்கள்தான் குமாரஸ்வாமி. சிவ சக்திகளின் ஐக்கியத்தில் தோன்றிய அன்புக் குழந்தை.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x