Published : 19 Jan 2017 10:53 AM
Last Updated : 19 Jan 2017 10:53 AM

தெய்வத்தின் குரல்: சிவமயம் - சர்வம் விஷ்ணுமயம் ஜகத்

எல்லா தேவதைகளும் ஒரே பரமாத்மாதான். சிவனும் விஷ்ணுவும் கொஞ்சம்கூட வேறில்லை. ஆனாலும் இரண்டையும் வழிபடுகிறபோது, கொஞ்சம் பிரித்து பக்தி செய்தால் அதிலும் ஒரு ரசம் இருக்கத்தான் செய்கிறது.

பலவாகப் பிரிந்தும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் (Unity in diversity) நம் மதத்தின் சாரம். இப்படியே சிவன், விஷ்ணு என்கிற இரண்டு மூர்த்திகளை வழிபடும்போது சாராம்சத்தில் அவை ஒன்றே என்ற உணர்ச்சி இருந்தாலும், ஒவ்வொரு மூர்த்தியை ஒவ்வொரு தத்துவத்துக்கு ரூபகமாக வைத்துக் கொண்டு பக்தி செய்வதில் ஒரு ருசி இருக்கத்தான் செய்கிறது.

இப்படிச் செய்யும்போது, சிவனை எல்லாவற்றுக்கும் அடிப்படையான, ஏகவஸ்துவான ஞானமாக பாவிக்கலாம்; அந்த ஏக வஸ்துவை நானாவிதமாகக் காட்டி ஜகத்தை நடத்தும் சக்தியாக விஷ்ணுவை பாவிக்கலாம். அதாவது சிவத்தைப் பரப்பிரம்மமாகவும் விஷ்ணுவைப் பராசக்தியாகவும் வைத்துக் கொள்ளலாம். அம்பிகையும் விஷ்ணுவும் சகோதரர்கள் என்று சொன்னாலும், அவர்கள் ஒன்றேதான் என்பது பரம ஞானிகளின் அனுபவம்.

சங்கர நாராயண வடிவத்தையும் அர்த்த நாரீசுவர வடிவத்தையும் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இரண்டிலும் வலப்பக்கம் பரமேசுவரனுடையது. ஒன்றிலே இடப் பக்கம் விஷ்ணு; இன்னொன்றில் அதே இடது புறம் அம்பாளுடையது.

இருக்கிற ஒன்றே ஒன்றை, இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு. அதாவது ஜகத் முழுவதும் விஷ்ணு ஸ்வரூபம். ‘விச்வம் விஷ்ணு:' என்றுதான் சஹஸ்ரநாமம் ஆரம்பிக்கிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்கிற வாக்கும் இருக்கிறது.

உலக பரிபாலனம் விஷ்ணுக்குறியது என்று சொல்கிறோம். உலகத்திலே இருக்கிற ஆனந்தங்களை, உணர்ச்சிகளை எல்லாம் தெய்விகமாக்குகிற பக்தி மார்க்கமும் விஷ்ணு சம்பந்தமாகவே அதிகம் தோன்றுகிறது.

ஹரி கதை, ஹரி நாம சங்கீர்த்தனம் என்றெல்லாம் சொல்வது போல ஹர கதை, ஹர கீர்த்தனம் என்று சொல்வதில்லை. கதை பாட்டு இந்த ஆனந்தமெல்லாம் விஷ்ணுவிடமே அதிகம். ‘பாகவதர்' என்றால் பகவானைச் சேர்ந்தவர் என்றே அர்த்தமாயினும் பொதுவாக, ‘பாகவதர்' ‘பாகவதம்' என்றெல்லாம் சொன்னால் விஷ்ணு பக்தர், விஷ்ணுவின் கதை என்றே எடுத்துக்கொள்கிறோம்.

பிரபஞ்ச சவுந்தரியங்களையெல்லாம் வைத்துப் பூஜை, பக்தி, பஜனை, கதை செய்வதெல்லாம் விஷ்ணு சம்பந்தமாயிருக்கிறது.

ஆனால் இந்தப் பிரபஞ்சத்தை விட்டு, இதற்கு ஆதாரமான சாந்தத்தில் திளைக்கும்போது சிவசம்பந்தம் அதிகம் தோன்றுகிறது. சிவஞானம், சிவயோகம் என்று சொல்கிற மாதிரி விஷ்ணு ஞானம், விஷ்ணு யோகம் என்பன காணப்படவில்லை. பலவாக இருக்கிற உலகனைத்தும் விஷ்ணு என்பதால் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்ற வாக்கு தோன்றியிருக்கிறது.

பலவாகக் காண்கிறது போனால் ‘ஸர்வம்' போய் விடும். ஏகம்தான் இருக்கும். ஏகம் இருக்கும்போது ‘ஸர்வம்' என்ற வார்த்தைக்கு இடம் ஏது? அங்கே அந்த ஏகத்தை அநுபவிக்கிறவனைத் தவிர ஜகம் என்கிற ஒன்றும் தனியாக இல்லை. ஜகத்தும் அடிபட்டுப் போச்சு. சிவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. இதனால்தான் “சிவமயம்” என்றே சொல்கிறார்கள்.

VIBGYOR- என்ற ஏழு நிறங்களில் வெளுப்பும் சேரவில்லை. கறுப்பும் சேரவில்லை. உண்மையில் வெள்ளைச் சிவன், கரிய திருமால் இருவருமே பிரபஞ்ச வர்ணங்களில் (லௌகிகத்தில்) சேராதவர்கள்தான்.

எதை எரித்தாலும் முதலில் அது கறுப்பு ஆகிறது. ஆனால் அப்போதும் எரிபட்ட வஸ்துவுக்கு நிறம் மாறினாலும் ரூபம் அப்படியே இருக்கும்.

நியூஸ் பேப்பரைக்கூடக் கொளுத்திவிட்டு உடனே அணைத்துவிட்டால் அது முழுக்கக் கறுப்பானாலும், அந்தக் கறுப்புக்குள்ளேயே அதைவிடக் கறுப்பாக எழுத்துகளும் தெரியும். துணியும் இப்படியே மடிப்புகூடக் கலையாமல் நெருப்பில் கருகுவதுண்டு. முழுக்க நீற்றுப்போய் உருவம் இழப்பதற்கு முற்பட்ட நிலை இது.

இதுதான் ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்'. இந்த நிலையில் ஜகத் இருப்பதுபோல் இருக்கிறது. ஆனாலும் இந்திரிய சேஷ்டைகள் எரிந்து போய்விட்டன. உணர்ச்சிகள் ஆனந்தம் எல்லாம் இருப்பதுபோல் தோன்றினாலும் லௌகிகமாக இல்லாமல் தெய்விகமாகப் பக்தி ரூபத்தில் இருக்கின்றன.

யோகத்திலும் ஞானத்திலும் மேலும் ஆன்மாவைப் புடம் போட்டால் அதுவும் நீற்றுப் போய் பஸ்பமாகிவிடும். எரிகிற வஸ்துக்கள் முதலில் கறுப்பானாலும், கடைசிவரையில் எரித்தால் எல்லாமே வெள்ளை வெளேரென்று நீராகின்றன. இதுதான் ‘சிவமயம்'.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x