Published : 16 Jun 2016 11:55 AM
Last Updated : 16 Jun 2016 11:55 AM

தெய்வத்தின் குரல்: உபந்யாஸமும் திரைப்படமும்

முன்னாளில் தாயார், விடிய நாலு நாழிகைகள் இருக்கும்போதே எழுந்திருந்து வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருக்கும்போதே - சாணி தெளிப்பது, கோலம் போடுவது, தயிர் சிலுப்புவது முதலான காரியங்களைச் செய்யும்போதே - புராணங்களில் வரும் புண்ணியமான கதைகளைப் பாட்டாகப் பாடிக்கொண்டிருப்பாள்.

குழந்தைகள் அதைக் கேட்டுக் கேட்டே புராணக் கதைகளைத் தெரிந்துகொண்டார்கள். தர்மங்களை ஜீவனுள்ள கதாபாத்திரங்களில் குழைத்துக் கொடுப்பதால் அவை இளம் உள்ளங்களில் ஆழப் பதிந்துவிடும். இதையே பிற்பாடு பௌராணிகர்கள் சொல்லக் கேட்டும், தாங்களே மூல நூலைப் படித்தும் விவரமாகத் தெரிந்துகொண்டார்கள். இதெல்லாம் முற்கால சம்பிரதாயங்கள்.

இப்போது இந்த நல்ல வழக்கங்கள் போய்விட்டன. சினிமாப் பாட்டு, பாலிடிக்ஸ், நாவல், பத்திரிக்கைகள் இவைதான் சின்ன வயசிலிருந்தே எல்லாரையும் இழுக்கும்படியாக ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் சினிமா - டிராமாக்களில் புராணக் கதைகளையும் நடிப்பதால் அந்த அளவுக்குக் கொஞ்சம் புராண ஞானம் உண்டாகலாம்.

ஆனால் இது சரியான ஞானமாக இருக்குமா என்பது சந்தேகம். புராணப் படத்தைப் பார்த்தாலுங்கூட நல்லதை விட அதிகமாகக் கெட்டதே வந்து சேரும்படி இருக்கலாம். ஏனென்றால் புராணக் கதையை சினிமாவாகவோ டிராமாவாகவோ ஆக்குகிறபோது அதை எத்தனைக்கெத்தனை ஜன ரஞ்ஜகமாகப் பண்ணலாம் என்றுதான் பார்ப்பார்கள்.

இதனால் வலியுறுத்துவதற்காகவே தரப்பட்ட சுதந்திரத்தைத் தப்பாகப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு மூலக் கதையை ரொம்ப சிதைத்து விடுகிற ஹேது அதிகமிருக்கிறது.

டிராமா, சினிமாவில் இன்னொரு கெடுதல், இவைகளைப் பார்க்கப் போகிறவர்கள் உத்தமமான கதாபாத்திரங்களின் குணங்களை கிரஹித்துக்கொள்வதற்குப் பதில் அந்த வேஷம் போட்டுக்கொள்ளும் நடிகருடைய குணங்களையே கிரஹித்துக்கொள்ளுவது.

நல்ல நடத்தையோடு கூடியவர்களாகவும், புராணம் சொல்கிற தத்துவங்களில் ஈடுபாடு உள்ளவர்களாகவும், அதிலே வரும் உத்தம புருஷர்களின் குணங்களில் தோய்ந்தவர்களாகவும் இருக்கப்பட்ட பெரியவர்கள் செய்கிற புராணப் பிரவசனத்தைக் கேட்டால்தான் கேட்பவர்களுக்கும் அதிலுள்ள தர்மங்கள், அதில் வருபவர்களின் சத்குணங்கள் இவற்றை கிரஹித்துக் கொள்ள முடியும்.

பணம், புகழ் இவற்றையே நினைப்பவர்களாகவும், தாம் சொல்கிற விஷயங்களைத் தாமே அனுஷ்டானத்துக்கு எடுத்துக்கொள்ளாதவராகவும் இருக்கிற பௌராணிகர் பண்ணும் உபந்யாஸமும் டிராமா, சினிமா போலத்தான். நல்ல பலனைத் தராது. சாஸ்திரத்தில் சொன்ன நாடக தர்மப்படி இருந்தால் டிராமாவும், சினிமாவும்கூட நல்லதைச் செய்ய முடியும்.

நிஜ வாழ்க்கையில் புருஷன் பெண்டாட்டியாக இருப்பவர்கள் தான் நாடகத்திலும் சதி-பதியாக வரலாம். சிருங்காரக் காட்சியில் இப்படியிப்படியான கட்டுப்பாடுகள் வேண்டும் என்று நாடக சாஸ்திரத்தில் இருக்கிறது.

தினமுமே இப்பொழுதெல்லாம் பட்டணங்களில் நிறைய உபந்யாஸங்கள் நடக்கின்றன. நியூஸ் பேப்பரில் ‘எங்கேஜ்மென்ட் கால' த்தைப் பார்த்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. நான்கூடக் கேள்விப்படாத மத விஷயங்கள், கதை, புராணங்களில் உபந்யாஸங்கள் நடக்கின்றன.

ஜனங்களும் கூட்டம் கூட்டமாக இவற்றுக்குப் போகிறார்கள். ரொம்பவும் நாகரிகமான வழியில் இருக்கப்பட்டவர்கள், படித்த யுவர்கள் யுவதிகள்கூட இவற்றுக்கு வருகிறார்கள் என்று தெரிகிறது. நடுவாந்தரத்தில் இருந்த நிலையோடு பார்க்கும்போது இதை ஒரு ‘ரினைய்ஸான்ஸ்' (மறுமலர்ச்சி) என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இதிலே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, பௌராணிகர்கள் எந்த அளவுக்கு ரசாபாசம் உண்டாக்காமல் கதை சொல்கிறார்கள் என்பதுதான். ஏதோ கொஞ்சம் பாலிடிக்ஸ், ஹாஸ்யம், உபகதைகள் வந்தால் பரவாயில்லைதான். ஆனால் இதுகளே கதையை, அதன் தத்துவார்த்தத்தை அடித்துக்கொண்டு போகிற மாதிரி செய்துவிட்டால் அது ரசாபாசம்.

பகவான் நினைவை உண்டாக்குவதுதான் ரசம். அதையும் அந்தப் புராணத்தில் சொல்லியிருக்கிற பிரகாரம், அதை விட்டு ரொம்பவும் வெளியே ஓடிவிடாமல், மனசில் பதிகிற மாதிரி சொல்ல வேண்டும். இதற்கு முக்கியமாக ஸ்வாநுபூதி இருக்க வேண்டும். கதை சொல்கிறவருக்கே ஆசாரங்கள், தெய்வ பக்தி, தாம் சொல்கிறதில் மனமார்ந்த நம்பிக்கை எல்லாம் இருக்க வேண்டும்.

அவரே விஷயத்தில் (சப்ஜெக்டில்) தோய்ந்தவராக இருந்துவிட்டால், வேண்டாத கதைகள், பாலிடிக்சில் போவதற்கு அவருக்கே மனசு வராது. சினிமா, நாவலுக்குப் பதில் அதே மாதிரி இன்னொரு பொழுதுபோக்கைப் போலப் புராணப் பிரவசனமும் ஆகிவிட்டால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

பட்டணங்களில் உள்ளது போலச் சின்ன ஊர்களிலும் கிராமங்களிலும் இவ்வளவு உபந்யாஸங்கள், பஜனைகள், ஆஸ்திக சங்கங்களைப் பார்க்க முடியவில்லை. ரொம்பவும் நாகரிகம் முற்றிய இடத்திலேயே, ‘ஆக் ஷ'னுக்கு சமமாக ‘ரியாக் ஷ'னும் இருக்கும் என்ற நியூட்டன் Lawபடி அதற்கு மாற்றாக, இம்மாதிரி ஸத் விஷயங்களும் வளர்ந்துவருகின்றன.

எல்லா இடத்திலும், கிராமங்களிலும்கூட, இப்படி நடக்க வேண்டும். எந்த இடமானாலும் ஏகாதசியன்று பக்திக்காகவும் தர்மத்துக்காகவும் என்றே புராண படனமும் (படிப்பதும்) சிரவணமும் (கேட்பதும்) நடக்க வேண்டும்.

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x