Published : 09 Nov 2016 05:24 PM
Last Updated : 09 Nov 2016 05:24 PM

தெய்வத்தின் குரல்: ஆயுர்வேதம் - மணி, மந்திரம், ஒளஷதம்

சரீர ரக்‌ஷைக்கு மூன்று வழி சொல்வார்கள், மணி, மந்திரம், ஒளஷதம் என்று. நவரத்தினங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித வியாதிகளைப் போக்கும் குணமுண்டு. நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் நவகிரகங்களில் ஒவ்வொன்றுக்குப் பிரீதியானவையாகும்.

வியாதி என்பது கர்மாவால் ஏற்படுவதே என்றாலும் அந்தக் கர்மா ஒவ்வொரு கிரகக் கோளாறாக ரூபம் எடுத்து உண்டாகிறது. ஆகையால் அதற்கு சாந்தியாக நவரத்தினங்களில் அந்த கிரகத்துக்குரியதை மோதிரமாக, மாலையாகப் பண்ணிப் போட்டுக் கொள்வது, அந்த மணியால் மூர்த்தி பண்ணி அதற்கு அபிஷேகித்த தீர்த்தத்தைப் பானம் பண்ணுவது என்றெல்லாம் ஒரு வழி.

இதுதான் ‘மணி, மந்திர, ஒளஷதம்'. இதில் ‘மணி '. நவரத்தினத்தை நவமணி என்றும் சொல்கிறோமல்லவா? நவமணிகளைப் போலவே ஸ்வர்ணம், ரஜதம் (வெள்ளி), தாம்ரம், பாதரஸம் முதலான உலோகங்களைக் கொண்டும் சிகித்ஸை (சிகிச்சை) செய்து கொள்வதுண்டு.

மந்த்ர ஜபம், ஜூவரஹரேச்வரர், கம்பஹரேச்வரர் என்றெல்லாம் வியாதிகளைப் போக்கவே உள்ள மூர்த்திகளுக்குரிய மந்திரங்களை ஜபிப்பது, சூர்ய நமஸ்காரம், கந்தர் அனுபூதி பாராயணம் முதலியவற்றால் நோயை குணப்படுத்திக்கொள்வது ஆகியனதான் இரண்டாவதான ‘மந்த்ரம்'.

‘ஒளஷதம்' என்பது மருந்து மூலம் குணம் செய்துகொள்ளும் மருத்துவ சாஸ்திரம். வைத்தியம் என்பது இதுதான். ஓஷதி என்றால் மூலிகை. அதன் அடியாகப் பிறந்த சொல்தான் ஒளஷதம். முக்கியமாக மூலிகைகளை அதாவது பச்சிலைகளைக் கொண்டே மருந்துகளைச் செய்வதுதான் ஆயுர்வேதம்.

பவள பஸ்மம், முத்து பஸ்மம், தங்க பஸ்மம். ‘பஸ்பம்' என்றே பொதுவில் சொல்கிறார்கள். மணி, உலோகங்களை எப்போதாவது பிரயோஜனப்படுத்தினாலும் ஆயுர்வேதத்தில் முக்கியமான மூலச்சரக்கு மூலிகைகள்தான்.

சித்த வைத்தியத்தில்தான் மணி, உலோகம், பாஷாணம், மற்ற தாதுப் பொருட்களைக் கொண்ட மருந்துகள் ஜாஸ்தி. சித்த வைத்தியமும் நம் சாஸ்திர ரீதியானதுதான். ஆனால் வீர்யம் ஜாஸ்தி. தப்பினால் ரொம்பக் கெடுதல் உண்டாய்விடும். துளிப்போல சூர்ணம்தான் டோஸேஜ் ஆனாலும் potency (உள் சக்தி) மிகவும் அதிகம்.

அதனால் ஜாக்கிரதையாக சிகிச்சை செய்ய வேண்டும். அகஸ்தியர், தேரையர் முதலான சித்த புருஷர்கள் நமக்குப் புரியாத பரிபாஷையில் சித்த வைத்திய சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். ‘பவர்' ஜாஸ்தி என்பதாலேயே இப்படி எல்லாருக்கும் புரியாதபடி ஜாக்கிரதை பண்ணி எழுதி வைத்திருக்கிறார்கள்.

சித்த வைத்தியம், ஆயுர்வேதம் இரண்டிலுமே மணி சம்பந்தமும் இருக்கிற மாதிரி, மந்திர சம்பந்தத்தையும் சேர்த்து மருந்தை மேலும் effective ஆகப் பண்ணுவதுண்டு. நல்ல சம்பிரதாயத்திலே வந்த வைத்தியர்கள் அநேக மந்திரங்களை ஜபித்தபடியே ஒளஷதங்களைப் பண்ணி ஜபித்துத் தருவார்கள்.

த்ரயம்பக மந்திரம், அச்யுத, அநந்த, கோவிந்த என்ற நாமத்ரயம் (மூன்று திருநாமங்கள்) தன்வந்தரி, அச்வினி தேவர்கள், சூர்யன் முதலான மூர்த்திகளுக்கான மந்திரம், கவசம் முதலியவற்றை மருந்தோடு சேர்த்துக் கொள்வதுண்டு.

அகஸ்தியர் ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு உபதேசித்த “ஆதித்ய ஹ்ருதயம்” பிரசித்தமாயிருக்கிறது. விஷக்கடிகளுக்கு என்ன மூலிகை, சிந்தூரம் - சித்த வைத்திய சூர்ணத்தை சிந்தூரம், செந்தூரம் என்று சொல்வார்கள் - கொடுத்தாலும் மந்திர ஜபம்தான் முக்கியமாயிருக்கிறது. சர்ப்பங்கள் பயந்து நடுங்குகிற கருட பகவானைக் குறித்த மந்திரத்துக்கு விஷம் இறங்குவதில் ஆச்சரியமான சக்தி இருக்கிறது.

நம்முடைய ஆச்சார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி'யில் ஒரு சுலோகத்தில் அம்பாளை சகல அவயங்களிலிருந்தும் அம்ருத ரஸ கிரணங்கள் பெருகுகிற சந்திர காந்த சிலா வர்ண மூர்த்தியாக தியானம் செய்வதால் ஒருத்தன் கருடனைப் போலப் பாம்பு விஷத்தை சமனம் செய்கிற சக்தி பெற்றுவிடுகிறானென்றும், இப்படிப்பட்டவனுக்கு அம்ருத நாடி என்று உண்டாகி அதன் பின் இவனுடைய திருஷ்டி பட்டாலே பிறரின் ஜ்வரதாபம் இறங்கிவிடுமென்றும் சொல்லியிருக்கிறார். இந்த சுலோக ஜபத்தாலேயே விஷம், ஜ்வரம் முதலியவைகளை நிவ்ருத்தி செய்துவிட முடிகிறது.

‘ஸெளந்தர்ய லஹரி'யின் வேறு பல சுலோகங்களை ஜபிப்பதற்கும் இவ்வாறு பலவிதமான வியாதி நிவிருத்தி சக்தி இருக்கிறது. நாராயண பட்டத்திரி ‘நாராயணீயம்' பண்ணியே அவருடைய வயிற்று உபாதை நீங்கியதால் அதையும் நோய் தீருவதற்காகப் பாராயணம் பண்ணுகிறார்கள். “இருமலுரோக முயலகன் வாத” என்று ஒரு திருப்புகழ் உண்டு. அதுவும் சர்வ வியாதி நிவ்ருத்திக்காக ஜபிக்கப்படுகிறது. சம்பந்தமூர்த்தி சுவாமிகள் கூன்பாண்டியனை ஸ்வஸ்தப்படுத்துவதற்காகச் சொன்ன திருநீற்றுப் பதிகத்தையும் பல ஆவிருத்தி ஜபித்து விபூதி இடுவதுதுண்டு.

வியாதியஸ்தரே விபூதியில், ஜலம், தேன், பால் போன்ற ஒன்றில் ஜபித்து அதை இட்டுக் கொள்வதோ பானம் பண்ணுவதோ உண்டு. அல்லது அவருக்கு ரொம்ப அசக்தமானால் அவருக்காக இன்னொருத்தர் பண்ணி, விபூதியானால் இட்டு விட்டு வாயில் போடலாம். தேன், பால் போன்றவற்றை நோயாளி குடிக்கப் பண்ணலாம். ‘மந்த்ர ராஜா' என்கிற காயத்ரியையும் இப்படி வியாதிகள் ஸ்வஸ்தமாவதற்கு ஜபிப்பதுண்டு.

விபூதிக்கு இதிலே தனியான சக்தி. நாட்டு ஜனங்களுங்கூட என்ன உடம்பானாலும் “துண்ணூறு” என்று திருநீறு வாங்கி இட்டுக்கொள்வதையும் வாயில் போட்டுக்கொள்வதையும் பார்க்கிறோம். விஷயம் தெரிந்தவர்கள் பஞ்சாக்ஷர, ஷடாக்ஷரங்களைச் சொல்லி தாரணம் பண்ணிக் கொள்வார்கள். திருச்செந்தூர்

விபூதி ஸர்வரோக ஹரணமென்று ஆச்சார்யாளே ஸ்தோத்தரித்திருக்கிறார். “பன்னீர் இலையில் வைத்துத் தரும் அந்த விபூதியை முழுங்கணும், இட்டுக்கணும் என்பதெல்லாம் கூட வேண்டாம். வெறுமே க்ஷணம் பார்த்தாலே போதும் - “விலோக்ய க்ஷணாத்’’- fits, குஷ்டம், துர்வியாதிகள், ஜ்வரம், பைத்தியம், குன்மம், ஆவிசேஷ்டை எல்லாமே ஓடிப்போய்விடும்” என்கிறார்.

பழநியாண்டவரின் மூர்த்தம் மூலிகைச் சாறுகளை இறுக்கிப் பண்ணியதே என்பார்கள். அதனால் அவருக்கு அபிஷேகமாகிற தீர்த்தம் முதலானவற்றையும் வியாதி நிவ்ருத்திக்குக் கொடுப்பதுண்டு. குருவாயூர் தைலம், திருச்சூர் நெய், இன்னம் அநேக க்ஷேத்ரங்களில் இப்படியே மருத்துவ சக்தி உள்ளதாகப் பிரசாதம் கொடுக்கிறார்கள். பிரசாதமென்று ஸ்தூலமாகத் தராமல், ‘நடந்தே மலை ஏறுகிறேன்', ‘அங்கப் பிரதக்ஷிணம் பண்ணுகிறேன்', ‘மாங்கல்யம் சாத்துகிறேன்' என்றெல்லாம் வேண்டிக்கொண்டாலே வேங்கடரமண சுவாமி தீராத வியாதியை எல்லாம் தீர்த்துவைக்கிறார்.

பரமேச்வரனும் பவரோகம் என்னும் சம்சார வியாதியை மட்டுமின்றி, அந்த சம்சாரத்திலே வருகிற அநேக ரோகங்களைத் தீர்ப்பதற்காக ‘வைத்யநாத ஸ்வாமி' என்றே பெயர் வைத்துக்கொண்டு வைத்தீச்வரன் கோயிலில் விளங்குகிறார்

பரமேச்வரனுக்குரிய பில்வ பத்ரம், பெருமாளுக்குரிய துளசி, அம்பாளுக்கு - முக்கியமாக மாரியம்மனுக்கு - விசேஷமான வேம்பு இந்த மூன்று இலைகளை ஒரே அளவு சேர்த்து தினந்தோறும் ஒரு பிடி தின்றுவிட்டால் போதும். எந்த வியாதியும் வராது என்று ஒரு நாட்டு வைத்தியர் எழுதியிருக்கிறார்.

வேப்பங்காற்றே ரத்த சுத்தி உண்டாக்குவதென்றும் அதோடு கர்ப்பக் கோளாறுகளைப் போக்குவதென்றும், அரசமரக் காற்றுக்கும் கர்ப்பப்பை நோய்களை நிவ்ருத்தி செய்கிற சக்தி இருக்கிறதென்றும், அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் பண்ணி வைத்து, புத்ர சந்தானமில்லாதவர்கள் அதைப் பிரதக்ஷிணம் பண்ண வேண்டுமென்றும் வைத்திருப்பதில் இப்படி வைத்ய சாஸ்திரப் பிரகாரமே சந்ததி உண்டாவதற்குக் காரணம் தெரிகிறதென்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

பூஜையில் தூபம் போடுவது, கற்பூரம் கொளுத்துவது ஆகியனகூட disinfectant -ஆக (கிருமி நாசினியாக) அநேக வியாதிகளைத் தடுக்கிறது என்று எழுதியிருக்கிறார்கள். அசையாத நம்பிக்கையாக பக்தி இருந்தால் அதனாலேயே ரோக நிவ்ருத்தி முதலான எதையும் சாதித்துக்கொண்டுவிடலாம் அல்லது ரோகம், ஆரோக்கியம் எதுவானாலும் வித்யாசமில்லை என்கிற உசந்த நிலையை சம்பாதித்துக்கொள்ளலாம்.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x