Published : 18 Feb 2016 12:15 PM
Last Updated : 18 Feb 2016 12:15 PM

தெய்வத்தின் குரல்: ஆனந்த வாழ்வுக்கு வழி

பரோபகாரம் என்பது ஈஸ்வரனின் கட்டளையான கடன் என்று புரிந்துகொண்டு விட்டால் - நாம் எத்தனை கஷ்ட தசையிலிருந்தாலும் பரோபகாரத்தை விட்டுவிடாமல் செய்வோம். “தனக்கு மிஞ்சி தர்மம் என்றுதானே சொல்லியிருக்கு? நீயே சிரம தசையிலிருக்கிறபோது மற்றவர்களுக்காக வேறு ஏன் சிரமப்படுகிறாய்?'' என்று கேட்கத்தான் கேட்பார்கள்.

அப்போது, “நான் சிரம தசையில் இருக்கிறேன் என்றால் பூர்வ ஜன்மாவில் ஈஸ்வராக்ஞைகளை சரியாகப் பண்ணாததற்கு இது தண்டனை என்றே அர்த்தம். போன ஜன்மத்தில் நான் பிறத்தியாருக்கு எந்த உபகாரமும், தொண்டும் பண்ணாததால் இப்போது கஷ்டப்படுகிறேன். அதனாலேயே இப்போதுதான் நிச்சயமாக நான் பரோபகாரம் செய்தாக வேண்டும்.

தனக்கு மிஞ்சிப் போன ஜன்மாவின் (கர்ம) பாக்கியாக, அப்போதைய உடம்பு போன பிறகும் மிஞ்சி, இப்போது வந்து சேர்ந்திருக்கும் இந்தக் கஷ்டம்தான், ‘தனக்கு மிஞ்சி'. இது தீருவதற்காகவே தர்மம் செய்தாக வேண்டும். அதுதான் ‘தனக்கு மிஞ்சி தர்மம்'. நீர் அதற்கு வேறேதோ தப்பர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறீர். இப்போது நான் தன்னையும் மிஞ்சி - அதாவது என் சொந்தக் கஷ்டத்தையும் மிஞ்சி, தர்மம் பண்ணனால்தான் வருங்காலத்திலாவது நன்றாயிருப்பேன்'' என்று பதில் சொல்ல வேண்டும்.

எத்தனையோ கஷ்டத்திலும் இளையான்குடி மாறநாயனாரைப் போலப் பரோபகாரம் பண்ணினவர்களின் ஞாபகம் நமக்குப் போகக் கூடாது. தான் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேம்பட்டு வெளியிலே வருவதுதான் தனக்கு மிஞ்சுவது. இப்படி வந்து லோகத்துக்கு உபகரிப்பதுதான் “தனக்கு மிஞ்சி தர்மம்'' என்று வைத்துக்கொள்ள வேண்டும்.

இது ரொம்ப ஹை லெவலில் (உயர் மட்டத்தில்). லோயர் லெவலில் (அதற்குக் கீழ்ப்பட்ட நிலையில்) பிறருக்கு திரவிய சகாயம் செய்வதற்காகவேதான், மிச்சம் பிடிக்கும் விதத்தில் வரவுக்குள் செலவை அடக்கி, கடன் கஸ்தி இல்லாமல் சிக்கனமாக வாழ வேண்டும்.

சேமிப்புக்கு வழி

சோற்றுச் செலவைவிட ஜாஸ்தியாகும் காபியை நிறுத்துவது. பட்டுத் துணி வேண்டாம் என்று விடுவது. ஸ்வயம்பாக நியமத்தால் (தன் சாப்பாட்டைத் தன் கையாலேயே சமைத்துச் சாப்பிடுவது என்ற நெறியால்) ஹோட்டல் செலவை அடியோடு குறைப்பது. சினிமாவுக்குப் போவதை நிறுத்துவது என்ற இந்த நாலை மட்டும் செய்து விட்டால் போதும். எவனும் கடன் கஸ்திப்படாமலிருப்பதோடு, பிறத்தியாருக்கும் திரவிய ரூபத்தில் ஏதோ கொஞ்சமாவது உபகரிக்க முடியும்.

இதெல்லாம் ஒரு குடும்பத்தில் தினப்படி சமாசாரங்கள். இவற்றோடு சமூக பிரச்னையாகிவிட்ட வரதட்சிணையையும், ஆடம்பரக் கல்யாணத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வரதட்சிணை இல்லை, கல்யாணத்துக்காக ஆயிரம் பதினாயிரம் என்று செலவழிப்பதில்லை என்றால் எந்தக் குடும்பத்திலும் பணமுடை, கடன் உபத்திரவம் ஏற்படவே ஏற்படாது. பொதுப் பணிகளுக்கு உதவ சம்ருத்தியாகக் கிடைக்கும்.

எது இன்றியமையாதது, எதெது இல்லாவிட்டாலும் வாழ்க்கை நடத்த முடியும்; எதெதுகள் இல்லாமலும் நம் அப்பன் பாட்டனெல்லாரும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் என்று ஆலோசித்துப் பார்த்துத் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழ வேண்டும். முதலில் சிரமமாக இருக்கும். சபலங்கள் இழுத்துக்கொண்டுதான் இருக்கும். இருந்தாலும் தாயான அம்பாளை வேண்டிக்கொண்டு, அனுக்கிரக பலத்தில் தெளிந்து ஜயிக்க வேண்டும்.

அப்புறம் தெரியும், அந்த எளிய வாழ்க்கையில்தான் எத்தனை நிம்மதி இருக்கிறதென்று.போக்ய வஸ்துக்களைத் தேவை தேவை என்று சேர்த்துக்கொண்டே போனால் அப்புறம் வீடு பெரிசாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால் வாடகைச் செலவு ஏறுகிறது. இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக நமக்கே வருமானம் போதாமல் ஆக்கிக்கொண்டால் பரோபகாரம் பண்ணி நம் கர்மாவைக் கழுவிக் கொள்வதெப்படி?

அநாவசியங்களை எல்லாம் கழித்துக் கட்டிவிட்டால் நமக்கும் நிம்மதியாக, பிறருக்கும் உதவியாக ஜன்மாவை உயர்த்திக்கொள்ளலாம். அம்பாள் தாயாக, அந்த ஒரே தாயாருக்கு நாம் அத்தனை பேரும் குழந்தைகளாக, ஒரு குடும்பத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் அவை ஒட்டிக்கொண்டு இருக்கிறாற்போல், ஒருத்தருக் கொருத்தர் உபகாரம் பண்ணிக் கொண்டு வாழலாம். இந்த உபகாரம் தான் என்று generalise பண்ணவேண்டியதில்லை; அவாவாள் ஸ்திதியில் எது சாத்தியமோ அந்த உபகாரத்தைச் செய்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x