Published : 05 May 2016 12:00 PM
Last Updated : 05 May 2016 12:00 PM

தெய்வத்தின் குரல்: அரிய ஆச்சார்யன் ராமானுஜர்

குரு பரம்பரைக் கதைகள் என்று வைஷ்ணவர்கள் போற்றிப் பாராயணம் பண்ணும் விருத்தாந்தங்களில் நம் நெஞ்சைத் தொடுகிற ஏராளமான குருபக்தி சரித்திரங்களைப் பார்க்கிறோம். பெருமாள் கோயில்களிலும் பாருங்கள், ஆழ்வார்கள் சன்னிதி, முக்கியமாக ஆண்டாள் சன்னிதி; தென்கலைக் கோயிலானால் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாசார்யார் முதலியவர்களின் சன்னிதி, வடகலைக் கோயிலானால் வேதாந்த தேசிகரின் சன்னிதி ஆகியவற்றில் எத்தனை பக்தியோடு, விமரிசையோடு ஆராதனை நடத்துகிறார்கள்?

குரு ராமானுஜருடைய ஜன்ம ஸ்தலமான பெரும்பூதூரில் பெருமாளே இரண்டாம் பக்ஷம்தான். ‘உடையவர், உடையவர்' என்று தங்களுடைய ஆசார்ய புருஷருக்கு ஏற்றம் தந்து, அவருக்குத்தான் நித்யப்படி பூஜை, பத்து நாள் உத்சவமெல்லாம் ரொம்பவும் பெரிய ஸ்கேலில் செய்கிறார்கள். உடையவர் சந்நிதிக்கு மேலே தங்கத்திலேயே விமானம் வேய்ந்திருக்கிறார்கள்.

ராமானுஜருக்கு முன்னும் பின்னும் வந்த சம்பிரதாய முக்கியஸ்தர்களான நாதமுனிகள், ஆளவந்தார், மணக்கால் நம்பி, திருகச்சி நம்பி, கூரத்தாழ்வார், பட்டர், நஞ்சீயர் முதலான பலருக்கு விக்ரஹங்கள், பூஜையெல்லாம் அநேக ஆலயங்களில் பார்க்கிறோம்.

ராமானுஜருடைய நேர் சிஷ்யர்கள் அவரிடம் வைத்திருந்த பக்தி அசாத்தியமானது. உயிரையே கொடுப்பது என்பதற்கேற்க, கூரத்தாழ்வார் என்பவர் ராமானுஜருக்காகப் பிராணத் தியாகமும் பண்ணத் தயாராயிருந்திருக்கிறார்.

இவர் காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரியாதை வாசகத்துக்குப் பெயரெடுத்த வைஷ்ணவர்களே பக்தி முதிர்ச்சியில், தாங்கள் ரொம்பவும் பெரியவராக நினைக்கிற வேதாந்த தேசிகரை “தேசிகன்'' என்று ஒருமையில் அழைப்பதாகச் சொன்னேனல்லவா?அதுபோலவே கூரத்தாழ்வாரைக் “கூரத்தாழ்வான்'' என்றுதான் சொல்வார்கள். வெறுமனே ‘ஆழ்வான்' என்று வைஷ்ணவர்கள் சொன்னாலே அது கூரத்தாழ்வார்தான். (‘ஆழ்வார்'என்று 'ர்'போட்டுச் சொன்னால் அது நம்மாழ்வார்தான்)

ராமானுஜர் காலத்தில் ராஜாவாக இருந்த சோழன் தீவிர சிவ பக்தன். ராமானுஜரோ, “விஷ்ணு ஒருத்தருக்குத் தான் “ஏகாந்தி''களாகப் பூஜை பண்ண வேண்டும். சிவனுக்குப் பண்ணக் கூடாது''என்கிற சித்தாந்தத்தைப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அதனால் சோழராஜா, “எந்த ஆதாரத்தைக் கொண்டு விஷ்ணு தவிர சிவன் முதலான தேவதாந்தரங்களை வழிபடக் கூடாது என்று நிர்த்தாரணம் பண்ணுகிறீர்?'' என்று ராமானுஜரைக் கேட்டு வாதம் நடத்துவதற்காக ஒரு வித்வத் சதசைக் கூட்டினான். அப்போது கங்கை கொண்ட சோழபுரம் ராஜ்யத் தலைநகராயிருந்தது. அங்கே அந்த சதஸைக் கூட்ட நிச்சயித்து, ராமாநுஜாசார்யாரை அழைத்துக்கொண்டு வருவதற்காக ஆள் அனுப்பினான். அப்போது அவர் ரங்கத்தில் இருந்தார்.

ராஜ சேவகரைப் பார்த்ததும் கூரத்தாழ்வாருக்கு விசாரம் உண்டாய்விட்டது. ‘ராஜாவோ சைவன். அவனே நிறைய சிவாலயங்கள் கட்டியிருக்கிறான். நம்முடைய குருவானால் சிவாராதனை கூடாது என்கிறார். அதனால் அவருக்கு இவரிடம் துவேஷம் இருக்கும். இப்போது வித்வத் சதஸ் என்று சொல்லி அழைத்துக்கொண்டு போய் இவரை என்ன பண்ணுவானோ? ராஜாவானதால் என்னவும் பண்ணிவிட முடியும். நம்முடைய அருமை ஆசார்யருக்கு அவன் ப்ராணஹானி விளைவித்துவிட்டால் என்ன செய்வது?' என்று ரொம்பவும் பயமும் கவலையும்பட்டார்.

அப்போதுதான் அவர் குருவுக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்தது. அதாவது குருவின் காஷாயத்தைத் தாம் உடுத்திக்கொண்டு, தம்மையே ராமானுஜாசார்யார் என்று சொல்லிக்கொண்டு ராஜசபைக்குப் போய்விடுவது என்று தீர்மானித்துவிட்டார். “வருகிற ஆபத்து எனக்கே வரட்டும். தங்களுக்காக இந்த சேவை செய்கிற பாக்யத்தை எனக்கு மறுக்காமல் அருள வேண்டும்'' என்று ராமானுஜரிடம் பிரார்த்தித்து, அவரை சம்மதிக்கப் பண்ணினார். ராமானுஜர் வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு, சோழ ராஜ்யத்தையே விட்டு, கர்நாடகத்திலுள்ள மேல் கோட்டை என்னும் திருநாராயணபுரத்துக்குப் போய்விட்டார். அங்கே இப்போதும் ''வெள்ளை சாத்துப்படி'' என்று அவருக்கு உத்சவம் நடத்துகிறார்கள்.

கூரத்தாழ்வார் காஷாயம் தரித்துக்கொண்டு ராமானுஜராக கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் போனார். அங்கே வித்வத் சதஸ் நடந்தது. இவர் சிவபரத்வத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார். அதனால் இவர் நினைத்தப்படியே ராஜ தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ராஜா கொலைத்தண்டனை தரவில்லை. இவருடைய கண்ணைப் பிடுங்கும்படியாக உத்தரவு போட்டுவிட்டான்.

குருவுக்கு ஏற்பட இருந்த இந்த கொடுமை நமக்கு வாய்த்ததே என்று கூரத்தாழ்வார் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். குருடராக ஆனார். அப்புறம் அந்த ராஜா காலமான பின் ராமானுஜாசாரியார் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார். தமக்காக சிஷ்யர் கண்ணை இழந்துவிட்டாரே என்று துக்கப்பட்டார்.

ராமானுஜர் பிற்காலத்தில் ரங்கத்தில் வாசம் செய்தபோதிலும், ஆரம்பத்தில் காஞ்சீபுரத்தில் வசித்துக்கொண்டு வரதராஜ சுவாமிக்குத்தான் தீர்த்த கைங்கர்யம் செய்துகொண்டு, அவரையே இஷ்ட தெய்வமாக உபாசித்துவந்தார். ரங்கநாதர் ஆலயத்தின் ஆராதனை கிரமங்களை அமைத்துக்கொடுத்து அங்கே இவர் இருந்த காலத்திலும் கூட வரதராஜாவிடம் ஒரு தனியான பற்று வைத்திருந்தார்.

அதனால் இப்போது கூரத்தாழ்வாரிடம், “எனக்காக உன் கண் போயிற்று. அதனால் உனக்காகப் பார்வை மீள வேண்டும் என்று இல்லாவிட்டாலும் என் மனசு ஆறுவதற்காக வரதராஜாவை வேண்டிக்கணும்'' என்றார். கூரத்தாழ்வாரும் அப்படியே காஞ்சீபுரம் பெருமாளிடம் ஸ்தோத்ரம் பண்ணி வேண்டிக்கொண்டார். அவருக்கு த்ருஷ்டி திரும்பணும் என்று நிஜமாகவே ஆசை இல்லை. ‘எல்லா இந்த்ரியங்களையும் அடக்கினால்தான் ஈஸ்வர தரிசனம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. நமக்கோ ராஜசிட்சை ரூபத்தில் கண் போனதில் இந்த ஒரு இந்திரியமாவது கண்டதைப் பார்த்துக் கெட்டுப் போகாமலிருக்கும் அநுக்ரஹம் கிடைத்திருக்கிறது. இதைப் மாற்றப்பண்ணி மறுபடியும் லோகக் காட்சி பார்த்து என்ன ஆக வேண்டும்?' என்றே நினைத்தார்.

ஆனாலும், ‘ஆசார்யன் ஆக்ஞைக்குக் கீழ்படிந்தாகவும் வேண்டுமே! அவர் பச்சாத்தாபம் படும்படியாக விடக் கூடாதே!'என்று யோசித்தார். யோசித்து ஸ்வாமியிடம், “எனக்குப் பார்வையைத் தா. ஆனால் எல்லா விஷயங்களையும் நான் பார்க்க வேண்டியதில்லை. என் ஆசார்யனுடைய திவ்யரூபத்தை தர்சனம் பண்ணுவதற்கும், உன் மங்கள விக்ரஹத்தை தர்சிப்பதற்கும் மட்டுமே கண்ணுக்குச் சக்தி தா'' என்று கேட்டார். வரதராஜாவும் அப்படியே வரம் கொடுத்தாராம்.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x