Published : 23 Mar 2017 09:59 AM
Last Updated : 23 Mar 2017 09:59 AM

தெய்வத்தின் குரல்: அம்பாள் - வாக்குவன்மை அருளுவாள்

ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப் பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் சிரேஷ்டமானவை. முதலாவது ‘ஸெளந்தரிய லஹரி'. ஸ்ரீ சங்கரர் பகவத் பாதர்கள் கைலாசத்துக்குப் போனபோது சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைப் பற்றி செய்திருந்த சௌந்தர்யலஹரி சுவடிக்கட்டை நம் ஆச்சாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்தார்.

அதில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன. ஆசாரியாள் கைலாசத்திலிருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலிருந்த நந்திகேசுவரர், மகா பெரிய சொத்து கைலாசத்திலிருந்து போகிறதே என்று நினைத்து, ஆசாரியாள் கொண்டு வந்த சுவடியிலிருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டுவிட்டார்.

முதல் 41 ஸ்லோகங்கள் மட்டுமே ஆச்சாரியாள் கையில் நின்றன. பாக்கி 59 சுலோகங்கள் நந்திகேசுவரர் கைக்குப் போய்விட்டன. அப்புறம் ஆச்சாரியாள் தாமே அந்த 59 சுலோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரிப் பாடிப் பூர்த்தி செய்துவிட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள ‘ஸெளந்தரிய லஹரி' உருவாயிற்று.

அதில் முதல் நாற்பத்தி யோரு சுலோகங்கள் மந்திர சாஸ்திர சூக்ஷ்மங்கள், குண்டலினி யோக தத்துவங்கள், ஸ்ரீ வித்யா ரகசியங்கள் முதலியவற்றைச் சொல்கின்றன. அதில் உபாசகர்களுக்கு ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன.

ஆனாலும் பின்னாலுள்ள, ஆசாரியாள் வாக்கிலிருந்து வந்த 59 சுலோகங்கள் அழகே அழகு. இந்த சுலோகங்களில் அம்பாளின் சிரசிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்திருக்கிறார். கம்பீரத்துக்கும் சரி, மாதுர்யத்துக்கும் சரி, இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிறமாதிரி அப்படிப்பட்ட அற்புதமான சுலோகங்கள் இவை.

பழங்காலத்தில் செய்த அதி சுந்தரமான விக்கிரங்களிலும் சிற்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைப்பாட்டோடு செய்து ஒட்டுப் போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆச்சாரியாளின் ஸெளந்தரிய லஹரி சுலோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது.

ஆதி செளந்தரியலஹரியில் 59 சுலோகம் நஷ்டமானதே நம் பாக்கியம்தான். நந்திகேசுவரர் அதை உருவிக்கொண்டிராவிட்டால் ஆச்சாரியாளின் இந்த அற்புத வாக்கு லோகத்துக்குக் கிடைத்திருக்காதல்லவா, என்று தோன்றுகிறது. இப்படிப்பட்ட கவித்துவ பொக்கிஷமாக ஒரு கிரந்தத்தைச் செய்து முடிக்கிறபோது, ஆச்சாரியாள் “இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது? எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உன்னையே துதித்தேன்” என்று விநய சம்பத்தத்துடன் சொல்கிறார். அவளைத் துதிக்கிற கவித்துவமும் அவளது உபாசனையாலேயே அவளருளால் சித்திக்கிறது என்று தெரிவிக்கிறார்.

அம்பாளைப் பற்றிய முக்கியமான மூன்று கிரந்தங்களில் இன்னொன்று ‘மூக பஞ்ச சதீ'. காமாக்ஷி அம்பாளின் பொதுவான மகிமை பற்றி ‘ஆர்யா' என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள். அவளுடைய பாதார விந்தங்களின் அழகைப் பற்றி மட்டும் நூறு சுலோகங்கள், ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள், அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள், அவளுடைய புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர். நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு ‘சதகம்' என்று பெயர்.

நான் மேலே சொன்ன ஐநூறு சுலோகங்களுக்கு முறையே ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்த ஸ்மித சதகம் என்று பெயர். ஐந்து நூறும் சேர்ந்த நூலுக்கு ‘மூக பஞ்ச சதீ' என்று பெயர். ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருதம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது.

கவித்வம், சங்கீதம் முதலிய கலைகள் எல்லாம் அம்பிகையின் அநுக்கிரஹத்தால் உண்டாகின்றன. பொதுவாக இதற்கெல்லாம் சரஸ்வதியை அதி தேவதையாகச் சொல்கிறோம். இப்படிப்பட்ட சரஸ்வதி, அம்பாளின் சந்நிதானத்தில் எப்போதும் வீணையோடு கானம் பண்ணிக் கொண்டிருக்கிறாளாம். என்ன பாட்டுக்கள் பாடுகிறாள்? அம்பாளின் பெருமையைப் பற்றியா? இல்லை. மகாபதிவிரத்தையான அம்பாளுக்கு ஈச்வரனைப் பாடினாலே சந்தோஷம். அதன்படி வாணி ஈசுவரப் பிரபாவத்தைப் பாடிக்கொண்டேயிருக்கிறாள். அம்பாள் அதை ரொம்பவும் ரசித்து ஆனந்தப்படுகிறாள். அம்பாளை வழிபடுவதால் குருபக்தி, பதிபக்தி விசேஷமாக விருத்தியாகும்.

- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x