Published : 31 Mar 2016 12:09 PM
Last Updated : 31 Mar 2016 12:09 PM

தெய்வத்தின் குரல்: அன்னபூர்ணி - அறிவு பசியையும் தீர்ப்பாள்

நம் தேசத்தில் மட்டும் என்றில்லை; லோகம் முழுக்க துர்ப்பிக்ஷம் அதிகமாகி வருகிறது. மெஷின் கள் நிறையச் செய்து விடலாம். ஃபாக்டரிகள் நிறைய வைத்து விடலாம். ஆனால் பயிர் பச்சைகள் வளர்வது நம் கையில் இல்லாமல் இருக்கிறது.

தானிய சம்ருத்தி (செழிப்பு) இருந்தாலொழிய, வயிறு நிரம்பினால் அன்றி, பாக்கி என்ன சுபிட்க்ஷம் செய்துகொண்டாலும், மொத்தத்தில் துர்பிக்ஷமாகத்தான் இருக்கிறது. பயிர் பச்சை விளைச்சலுக்கு நம்முடைய அகட விகட சாமர்த்தியங்களால் பிரயோஜனமில்லை.

என்ஜினியர் அணை கட்டலாம். ஆனால், மழையை பெய்விக்க அவரால் முடியாது. ஜகன்மாதாவான அன்னபூர்ணேசுவரியை எல்லோரும் மனசாரப் பிரார்த்தித்துக் கொண்டால்தான் விமோசனம் உண்டு. அவளே நாம் செய்கிற மகாபாபங்களை க்ஷமித்துத் தானிய சம்ருத்தியை அநுக்கிரஹிப்பாள். துர்பிக்ஷம் போக அவளே பிச்சை போடுவாள்.

நம்முடைய ஆச்சார்யாள் ஸ்ரீசங்கர பகவத் பாதாள் காசியில் இருந்தபோது, அன்னபூர்ணி மீது ஒரு ஸ்தோத்திரம் பாடியருளினார்.

அதில் சுலோகத்துக்குச் சுலோகம் முடிவிலே, “கருணையின் பற்றுக்கொம்பாக இருக்கிற அம்மாவே, அன்னபூர்ணேசுவரியே பிச்சை போடு” என்று உருக்கமாக வேண்டிக் கொள்கிறார்.

‘பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ

மாதா அன்னபூர்ணேச்வரீ'

‘தேஹி - போடு’ என்றால் அவருக்கில்லை. அவருக்குப் பிக்ஷை ஜாம் ஜாம் என்று நடந்துகொண்டிருந்திருக்கும். தவிரவும் நம் ஆச்சார்யாளுக்குச் சரீராபிமானம், உதரபோஷணம், தான் என்கிற எண்ணம் லவலேசம்கூடக் கிடையாது. கிரகசன் என்ற காபாலிகன் அவரிடம், “ஒரு சக்கரவர்த்தி அல்லது சந்நியாசியின் தலையைப் பலிக் கொடுத்தால் தனக்குக் கபாலியின் தரிசனம் கிடைக்கும்” என்றான்.

உடனே ஆச்சார்யாள், “சக்கரவர்த்தியின் தலைக்கு ஆசைப்பட்டால் உன் தலையே போய்விடும். சந்நியாசியின் தலை வேண்டுமானால் இதோ இந்தத் தலையை எடுத்துக் கொள்” என்று தனது சிரசையே தொட்டுக் காட்டினார். அப்புறம் ஈஸ்வர சங்கல்பத்தால் கதை மாறிப்போயிற்று. அது வேறு விஷயம். இப்போது நான் அந்தக் கதையைச் சொல்ல வரவில்லை. ஆச்சாரியாளுக்குக் கொஞ்சம்கூட அகங்கார மமகாரமே கிடையாது; தேகாபிமானமே கிடையாது என்பதற்காக இதைச் சொன்னேன். அப்படிப்பட்டவர் “பிக்ஷாம் தேஹி - பிச்சை போடு” என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஸ்தோத்திரத்தின் கடைசி சுலோகத்தைப் பார்த்தால் அர்த்தம் புரியும். அதில், ‘எனக்குப் பார்வதியே அம்மா; பரமேசுவரனே அப்பா. சிவபக்தர்கள் எல்லாம் பந்துக்கள்; மூவுலகமும் வீடு' என்கிறார். எனவே தேஹி - பிச்சை போடு என்று இவர் கேட்கிறபோது, திரிலோகங்களுக்கும் பிச்சை போடு என்று பிரார்த்தித்ததாகவே அர்த்தமாகிறது.

அதோடு, தனக்கு என்றே வேண்டிக்கொள்கிற நம் மாதிரி இருக்கப்பட்டவர்கள், பாராயணம் செய்வதற்குப் பொருத்தமாக இப்படிப் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

அன்ன பிட்க்ஷை மட்டும் பிரயோஜனமில்லை. முடிவில் ஞானமில்லாமல் வெறுமே தின்று தின்று ஊனை வளர்த்துப் பிரயோஜனமில்லை. கையில் க்ஷீரான்ன (பால் சோற்று) பாத்திரமும், கரண்டியும் வைத்துக்கொண்டு அன்புருவாக உணவுபோடும் அன்னபூரணி இந்த ஞானத்தையும் விசேஷமாக அநுக்கிரஹிக்கிறாள். ஞான வைராக்கியப் பிச்சையைத்தான் ஆதிசங்கரரும் முடிவாகக் கேட்கிறார்.

காஞ்சி காமாக்ஷியில் அன்னபூர்ணேசுவரியும் அடக்கம். காமாக்ஷி இருநாழி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாள். அதில் அன்னதானம் ஒன்று. காமக்கோட்டத்தில் அன்னபூரணி சந்நிதி இருக்கிறது. காஞ்சியில் ஓண காந்தன் தளியில் இருக்கும் ஸ்வாமியைப் பாடும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், ‘காமக்கோட்டத்தில் அன்னபூரணியே இருக்கும்போது நீர் ஏன் பிக்ஷாண்டியாக அலைகிறீர்?' என்று கேட்கிறார்.

வாரிரும் குழல்வாள் நெடுங்கண்

மலைமகள் மதுவிம்மு கொன்றைத்

தாரிருந் தடமார்பு நீங்காத்

தையலாள் உலகுய்ய வைத்த

காரிரும் பொழில்கச்சி மூதூர்க்

காமகோட்டம் உண்டாக நீர்போய்

ஊரிடும் பிச்சைகொள் வதென்னே

ஒண்காந்தன் றளியுளீரே

சரீரம், ஆத்மா இரண்டுக்கும் உணவூட்டி வளர்க்கிற அன்னபூரணேசுவரியைத் துதித்து சமஸ்த ஜீவர்களுக்கும் துர்பிக்ஷம் நீங்கப் பிரார்த்திப்போம்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x