Published : 07 Jul 2016 12:24 PM
Last Updated : 07 Jul 2016 12:24 PM

தெய்வத்தின் குரல்: அனைவருக்கும் உரியது அஸ்வமேத யாகம்

இந்தக் காலத்தில் இருக்கிற நாமெல்லோரும் அஸ்வமேத யாகம் செய்ய முடியுமா?

‘இதென்ன கேள்வி? ஸ்வாமிகள் சரியாகத்தான் பேசுகிறாரா?' என்று தோன்றும். 'இந்தக் காலத்திலாவது? அஸ்வமேதமாவது? பழைய காலத்திலேயே க்ஷத்ரிய வர்ணத்தில் பிறந்த மகாராஜாக்கள் இரண்டொருத்தர்தான் அஸ்வமேதம் செய்ய முடிந்திருக்கிறது.

ஒரு ராஜ்யத்து அரசனாகப் பட்டாபிஷேகம் ஆன பின், சதுரங்க சேனா பலத்தோடுகூடச் சொந்தமாகவும் வீரதீர பராக்ரமங்கள் படைத்த ஒரு ராஜாதான் அச்வத்தை சகல தேசங்களும் ஓட்டி, அந்தத் தேசங்களையெல்லாம் ஜயித்து, திக்விஜயம் பண்ணிச் சக்ரவர்த்தி என்ற பிருதத்தை அடைந்து அஸ்வமேதம் பண்ண முடியும்.

‘இப்போது நம்மில் யார் அப்படிச் செய்ய முடியும்?' என்று தோன்றும். நம்மில் யாராவது அஸ்வமேதம் செய்ய முடியுமா என்று கேட்காமல் (இப்படிக் கேட்டாலே அஸம்பாவிதம்தான்!) நாம் எல்லோரும் அஸ்வமேத யாகம் செய்ய முடியுமா என்று கேட்கிறேனே என்று ஒரே குழப்பமாகத் தோன்றும்.

முடியுமா, முடியாதா என்பது ஓரு பக்கம் இருக்கட்டும். எதற்காக அஸ்வமேதம் செய்ய வேண்டும்? நம் பதவியையும் பவிஷையும் அது காட்டுகிறதே என்பதற்கா? அஸ்வமேதம் செய்தல் இந்திரலோகம் கிடைக்கும் என்பதற்கா? இதற்காகவெல்லாம் என்றால் அஸ்வமேதம் செய்யவே வேண்டாம். பதவி, பவிஷு, தேவலோக செளக்கியம் எல்லாமே அகங்காரத்தை வளர்த்துக்கொள்கிற காரியங்கள்தாம்! நம்மிடம் கொஞ்சநஞ்ச ஞானம்கூடச் சேரவொட்டாமல் இடைஞ்சல் செய்கிறவைதாம். பின் எதற்காக அஸ்வமேதம் என்றால்,

ஹயமேத ஸமர்ச்சிதா

என்று அம்பாளுக்கு லலிதா த்ரிசதியில் ஒரு நாமா சொல்லியிருக்கிறது.

‘த்ரிசதி' என்பது முந்நூறு பெயர்கள் கொண்ட நாமாவளி. அர்ச்சனையில் பிரயோஜனமாவது ‘ருத்ர த்ரிசதி' என்பது வேதத்திலிருந்தே எடுத்தது. ‘லலிதா த்ரிசதி' வேதத்தில் இல்லாவிட்டாலுங்கூட அதற்கு சமதையான கௌரவம் பெற்றிருக்கிறது.

ஹயக்ரீவரிடமிருந்து ‘லலிதா ஸஹஸ்ரநாம' உபதேசம் பெற்றுங்கூட மனசாந்தி அடையாத அகஸ்தியர் இந்த த்ரிசதியைக் கேட்டுத்தான் தெளிவை அடைந்தார். ஆசார்யாளே பாஷ்யம் பண்ணியிருக்கிற பெருமையும் இந்த த்ரிசதிக்கு இருக்கிறது. லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ர நாமம் இரண்டுமே ரொம்ப மந்தரவத்தானபடியால் இவற்றை உரிய நியமங்களோடு ரஹஸ்யமாகவே ரக்ஷிக்க வேண்டும்.

ஹயக்ரீவர் உபதேசித்த இந்த த்ரிசதியில் ''ஹயமேத ஸமர்ச்சிதா'' என்று ஒரு நாமா இருக்கிறது. ஹயம் என்றால் அஸ்வம், குதிரை என்று அர்த்தம். கழுத்துக்கு மேலே குதிரை முகம் படைத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமாக இருப்பவரே ஹய-க்ரீவர். ஹயமேதம் என்றாலும் அச்வமேதம் என்றாலும் ஒரே அர்த்தந்தான். ‘ஸமர்ச்சிதா’ என்றால் நன்றாக, பூர்ணமாக ஆராதிக்கப்படுபவள் என்று அர்த்தம். ‘ஹயமேத ஸமர்ச்சிதா'- அஸ்வமேத யாகத்தால் நன்கு ஆராதிக்கப்படுபவள்.

அதாவது ஒருத்தன் அஸ்வமேதம் செய்தால், அதுவே அவன் அம்பாளுக்குச் செய்கிற விசேஷமான ஆராதனையாகிவிடுகிறது. வெறும் யஞ்யம் என்றால் அதற்கென புத்ர ப்ராப்தி, தன லாபம், பதவி, ஸ்வர்க வாசம் மாதிரியான பலன்கள்தான் உண்டு. இந்தப் பலன்களோடு, இவற்றைவிட முக்கியமாக, அநேகக் கட்டுப்பாடுகளோடும், ஐகாக்ரியத்தோடும் ( one- pointed concentration ) ஒரு யாகத்தைச் செய்வதால் “சித்த சுத்தி'' என்கிற மகா பெரிய பலனும் ஏற்படுகிறது. ஒரு யாகம் அம்பாள் ஆராதனையாகிறபோதோ அதற்குச் சின்னச் சின்னப் பலன்களாக இல்லாமல் சகல புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடிய சக்தி உண்டாகிறது. ஸாஷாத் பரதேவதை ப்ரீதி அடைந்தால் எதைத்தான் தர மாட்டாள்? பதவி, பவிஷை, இந்திர லோகம் எல்லாவற்றுக்கும் மேலாக பரம ஞானத்தை, ஸம்ஸார நிவிருத்தியை, மோக்ஷ ஸாம்ராஜ்ய லஷ்மியையே அம்பாள் மனசு குளிர்ந்தால் அநுக்கிரஹித்துவிடுவாள்.

ஆனதால், அம்பாளை அஸ்வமேதம் பண்ணிவிட்டால், அதனால் அம்பாளை ஆராதித்ததாகிவிடுமாதலால், இம்மை மறுமைக்கு வேண்டியதில் பாக்கியில்லாமல் சகல சிரேயஸ்களையும் பெற்றுவிடலாம். எதற்காக அஸ்வமேதம் செய்ய வேண்டும் என்று முதலில் ஒரு கேள்வி போட்டேனே, அதற்கு இது பதில்.

ஆனால் ஒரு சஹஸ்ரநாமம், த்ரிசதி மாதிரியானவற்றுக்கு நியமங்கள் இருக்கின்றன என்றால் அஸ்வமேதம் செய்வதற்கோ ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், ஆயிரம் தினுசான நியமங்கள், கெடுபிடிகள் சொல்லியிருக்கிறது. இந்தக் காலத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

சரி, அப்படியானல் நாம் அஸ்வமேதம் செய்வதற்கே இல்லை என்று விட்டுவிட வேண்டியதுதானா?

இல்லை. நம் அனைவருக்கும் சாத்தியமான ஓர் அஸ்வமேதத்தை சாஸ்திரங்களிலேயே சொல்லியிருக்கிறது. ஜீவகாருண்யத்தின்மேல் செய்ய வேண்டிய அநேக பரோபகாரங்களைச் சொல்லிக்கொண்டே போய், அவற்றுக்கெல்லாம் சிகரம் மாதிரி ஒன்றைச் சொல்லி அதுவே அஸ்வமேதத்தின் பலனை அளிக்கக்கூடியது என்கிறது.

- தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x