Published : 13 Jul 2017 10:18 AM
Last Updated : 13 Jul 2017 10:18 AM

தெய்வத்தின் குரல்: அதுவேதான் இது

ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மரயானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மரயானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை, “அப்பா யானைகிட்ட போகாதே அது முட்டும்” என்று கத்தியது.

தச்சன் குழந்தையிடம், “இது மரபொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச் சமாதானம் செய்து, குழந்தையையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான்.

குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே தெரிந்தது. அது மரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது, ‘அது யானையாக்கும்’ என்கிற நினைப்பு. அதே சமயத்தில், அது தத்ரூபமாக யானை மாதிரி இருந்தும்கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அவனைப் பொறுத்தமட்டில் அதன் யானைத் தன்மை மறைந்து, அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

மாமத யானை எப்படி வந்தது?

திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில்தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்?

செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர். பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான், இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை.

குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்ம மயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.

அது சரி. இந்தக் கதை எல்லாம் என்னத்துக்கு என்று கேட்கலாம். நமக்கு வேண்டியது லோகத்தில் வசதியான வாழ்க்கை; அதற்குத் தேவை பணம், காசுதான். பரத்தைப் பற்றியும் பாரைப் பற்றியும் நமக்கென்ன கவலை என்று கேட்கலாம்.

சரி, எல்லாரும் பணக்காரராகி விடுவதாகவே வைத்துக்கொள்வோம். நிம்மதியாக, சாந்தமாக, நிர்பயமாக இருக்க அது உதவுமா? பணக்காரர்கள் நிறைந்த தேசங்களைப் பாருங்கள். அங்கே எத்தனை சச்சரவு, நிம்மதியின்மை.

போட்டி மனப்பான்மை ஏன்?

எல்லோருக்கும் நிறையப் பணம் வந்துவிட்டாலும், ஒவ்வொருவனுக்கும் மற்றவனைவிட அதிகம் இருக்க வேண்டும் என்கிற ஆசையும், அதனால் போட்டியும், சச்சரவும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

நமக்கு வேண்டிய சௌகரியம் இருந்தால் மட்டும் போதாது; இன்னொருத்தனைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையே மனித சுபாவம். எல்லோருக்கும் எல்லா சௌகரியங்களும் சமமாய்க் கிடைக்கும் என்றால்கூட, அது தனக்கே முதலில் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொருத்தரும் போட்டி போடுவார்கள்.

உதாரணமாக ஒரு சின்ன விஷயம். இந்த மடத்திலேயே பாருங்கள்! நான் அத்தனை பேருக்கும் தீர்த்தம் தந்து விட்டுத்தான் உள்ளே போவேன் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும், அமைதியாக, வரிசையாக நமக்குக் கிடைக்கிறபோது கிடைக்கட்டும் என்று இருக்க முடிகிறதா? கிடைத்தால் மட்டும் போதாது, முதலில் கிடைக்க வேண்டும் என்று ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு, விழுந்து வாரி, சண்டை போட்டுக்கொண்டுதானே வருகிறீர்கள்?

இம்மாதிரி போட்டி இருக்கிற வரையில் மனநிறைவு யாருக்கும் உண்டாகாது. பொருளாதார வசதி மட்டும் உண்டாவதால் இந்தப் போட்டி குறையாது.

ஞானம் வேண்டும்

போட்டி போக வேண்டுமானால், போட்டி போட இன்னொரு வஸ்துவே இல்லை என்ற ஞானம் வரவேண்டும். அப்போதுதான் சாந்தியோடு நிறைந்து வாழலாம்.

ஆகையால் ஞானமெல்லாம் எதற்கு என்று நினைக்காமல், எப்போதும் சாசுவதமாய்ச் செய்யவேண்டிய காரியம் ஆத்ம விசாரம்தான். உலகத் துன்பங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், இந்த உலகம் என்பது நாம் நினைக்கிறப்படி இல்லை. இதுவே சிவ மயமானது; அது வேறு, இது வேறு அல்ல.

மரமே யானை; பாரே பரம் என்ற நினைப்பு இருந்துகொண்டே இருக்கவேண்டும். இந்த ஞானம் இல்லாவிட்டால் எத்தனை பொருளாதார முன்னனேற்றம் வந்தாலும், லோகம் இருட்டில் அகப்பட்டுக் கொண்டிருப்பதாகவே அர்த்தம்.

இருட்டை விரட்டும் ஞானப்பிரகாசத்தை அடைகிற பிரயாசையை நாம் ஒருபோதும் தளரவிடக் கூடாது. சூரியன் போனால்கூட பாதகமில்லை. இந்த ஞானஒளி நம்மை விட்டு ஒருபோதும் போகவிடக் கூடாது.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x