Published : 11 May 2017 10:44 AM
Last Updated : 11 May 2017 10:44 AM

திருத்தலம் அறிமுகம்: தாயார் நால்வருடன் காட்சிதரும் பெருமாள்

அரக்கனின் ஆணவத்தை அடக்கி வேங்கடப் பெருமாள் ஆனந்தக் கூத்தாடிய திருத்தலம் இது.

சாஸ்திரங்கள் அனைத்தும் கற்ற வேதசாரன் என்ற வேதியர் வேங்கடப் பெருமானின் அதிதீவிர பக்தர். இவரது மனைவி குமுதவதி பேரழகு நங்கை. இவர்கள் செய்த தவத்தால் அலமேலு மங்கை நாச்சியாரே இவர்களுக்கு கமலாவதி எனும் மகளாக வந்து பிறந்தாள். ‘அரங்கனுக்கே மாலையிடப் பிறந்தேன்’ என்று சொல்லித் தவமாய் தவமிருந்த ஆண்டாள் நாச்சியாரைப் போல கமலாவதியும் திருவேங்கடப் பெருமானைக் கைப்பிடிக்கத் தவமிருந்து பூஜைகள் செய்துவந்தாள்.

நாராயணனை மணப்பதற்காகப் பெற்றோரும் உற்றாரும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வனத்துக்குள் சென்று தவமிருந்தாள் கமலாவதி. அவளது தவம் கண்டு மெச்சிய நாராயணனும் தைமாத சுக்லப துவாதசியில் கமலாவதியைத் திருமணம் செய்துகொண்டு வேதசாரனுக்குக் காட்சி கொடுத்தார். தனது புதல்வியை இறைவன் தன் திருமார்பில் தரித்திருந்தது கண்டு வேதசாரனும் குமுதவதியும் பேரானந்தம் கொண்டார்கள்.

அரக்கன் தேடிய ஆயிரம் பெண்கள்

அந்தச் சமயத்தில் இமயமலைச் சாரலில் வசித்து வந்த அச்மநாரன் அனும் அரக்கன் ஒரே சமயத்தில் 1000 பெண்களை மணப்பதாக விரதம் மேற்கொண்டான். அதற்காக, 998 பெண்களைக் கவர்ந்து சென்று இமய மலையில் சிறை வைத்தான். அடுத்த பெண்ணைத் தேடி வான் வெளியில் வலம் வந்துகொண்டிருந்த அவனது கண்களில் குமுதவதி தட்டுப்பட, அவளையும் கவர்ந்து சென்று சிறைவைத்தான்.

அடுத்ததாக ஆயிரமாவது பெண்ணைத் தேடிப் புறப்பட்டான். அதே சமயம் மனைவியை இழந்த வேதசாரன் தனது மனைவியை மீட்க இறைவனிடம் போய் முறையிட்டான். அவனது பக்திக்கு இரங்கினார் பரந்தாமன். அந்த வேளையில், இமயமலைக்குப் பறந்து செல்ல வேங்கடவனுக்குத் தனது தயவு வேண்டுமென எண்ணி கருடாழ்வார் செருக்குடன் இருந்தார்.

இதை அறிந்துகொண்ட வேங்கடவன், கருடாழ்வாரைத் தனது கால் இடுக்கில் வைத்துக்கொண்டு மனோ வேகத்தில் பறந்து இமயத்தை அடைந்தார். கருடாழ்வாரின் கர்வம் ஒழிந்தது. அகங்காரம் நீங்கியதால் கருடாழ்வாருக்குத் தனக்கு சமமான இடம் தந்து தன்னருகிலேயே எழுந்தருளச் செய்தார் வேங்கடவன்.

விமோசனம் பெற்ற அசுரன்

அரக்கனால் சிறைபிடிக்கப்பட்டிருந்த குமுதவதியை மீட்ட பெருமான் கருட வாகனத்தில் பறந்து வந்து திருக்குளத்தை அடைந்தார். அச்மநாரனும் அவரைப் பின்தொடர்ந்து வந்தான். வேங்கடனுக்கும் அவனுக்கும் கடும் போர் தொடங்கியது. முடிவில் தாமிரபணி நதிக்கரையில் அரக்கனைக் கீழே வீழ்த்தி அவனது தலை மீது ஏறி நின்று ஆனந்தக் கூத்தாடினார் வேங்கடப் பெருமான்.

திருமால் திருவடி தன் சிரசில் பட்டதும் அரக்கன் சாப விமோசனம் பெற்று கந்தர்வன் ஆனான். திருமால் அப்படி ஆனந்தக் கூத்தாடிய இடம்தான் மாயக்கூத்தர் திருத்தலம். அரக்கன் மீது நாட்டியம் ஆடியதால் சோர நாட்டியன் என்றும் மாயக்கூத்தன் என்றும் பெயர்பெற்றார் இங்குள்ள திருவேங்கடப் பெருமான்.

நம்மாழ்வார் மங்களாசாசனம்

திருவைகுண்டத்திலிருந்து சாயர்புரம் வழியாகத் தூத்துக்குடி செல்லும் சாலையில் திருவைகுண்டத்திலிருந்து பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது மாயக்கூத்தர் திருத்தலம். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருத்தலம் நவதிருப்பதிகளில் நான்காவது திருப்பதியாகவும் 108 திவ்யதேசங்களில் 55-வது திவ்யதேசமாகவும் விளங்குகிறது.

அசுரனுக்கு விமோசனம் கிட்டிய இடம் என்பதால் சனி தோஷம் நீங்கவும் திருமணத் தடைகள் நீங்கவும் மாயக்கூத்தரை தரிசிப்பது நலம். இங்கே நெய் தீபம் ஏற்றி உளுந்து பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பாகும். புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி பங்குனி பிரம்மோற்சவப் பெருவிழா இவை மாயக்கூத்தர் கோயிலில் மக்கள் திரள் கூடும் நாட்கள். இங்கு பெருமாளுக்கு இணையராக தேவி, பூதேவி, நீலாதேவி மற்றும் கமலாதேவி என நான்கு தாயார்கள் இருப்பது தனிச்சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x