Published : 07 Jul 2016 12:30 PM
Last Updated : 07 Jul 2016 12:30 PM

திருத்தலம் அறிமுகம்: சிவபெருமான் உருவாக்கிய தேசம்- வேகாக்கொல்லை களப்பாலீஸ்வரர் ஆலயம்

மண்ணை நெருப்பால் சுட்டாலும் வேகாத ஊர் என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வேகாக்கொல்லை ஊரில் குடி கொண்டிருக்கிறார் ஸ்ரீ களப்பாலீஸ்வரர்.

ஒரு காலத்தில் தாருகாட்சன், கமலாட்சன், வித்யன் மாலி என்ற மூன்று அசுரர்கள் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் இருந்ததால் தங்களை யாராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றனர். இந்த வரத்தைப் பெற்றதும் அதர்மச் செயல்களில் ஈடுபட்டு மக்களைத் துன்புறுத்தினார்கள். ஒரு கட்டத்தில் இந்த அட்டூழியங்கள் எல்லை மீறிப்போய் தேவர்களையே சீண்டிப் பார்த்தார்கள்.

குதிரைகள் ஆன நான்கு வேதங்கள்

அசுரர்களின் கொட்டத்தை அடக்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் ஓடினார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்கிய சிவபெருமான், அசுரர்களை அழிக்க பூமியையே தேராகவும் சூரிய சந்திரர்களைத் தேர்க் காலாகவும் நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும் கொண்டு அசுர சம்ஹாரத்துக்குப் புறப்பட்டார்.

மூன்று அசுரர்களும் தாங்கள் ஆட்சி செய்த தங்க, வெள்ளி, இரும்புக் கோட்டைகளை விட்டு வெளியில் வந்து சிவபெருமானை எதிர்த்தார்கள். சிவபெருமானோ ஆயுதங்கள் ஏதுமின்றி கண்ணால் பார்த்த மாத்திரத்தில் அக்கினியால் அவர்கள் மூவரையும் பஸ்மமாக்கினார். அசுரர்கள் தீயில் கருகி அழிந்தபோது ஏற்பட்ட கடும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தேவர்களும் உலக ஜீவராசிகளும் தகித்தனர்.

இதனால் பெரும் தீங்கு ஏதும் வருமோ என அஞ்சிய தேவர்கள் மீண்டும் சிவனிடம் போய் அபயம் வேண்டினர். அவர்களை சாந்தப்படுத்திய சிவபெருமான், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தேவர்களையும் மற்ற ஜீவராசிகளையும் காப்பதற்காக பூலோகத்தில் ஒரு குளிர் பிரதேசத்தை உருவாக்கினார். அந்தப் பிரதேசத்திற்குச் சென்றதும் தேவர்களும் மற்ற ஜீவன்களும் வெப்பத்தின் தாக்கம் அற்று இதமானார்கள்.

களைப்பாறிய சிவன்

அன்று வெப்பம் தணிக்க சிவபெருமான் உருவாக்கிய தேசத்தின் ஒரு பகுதி இப்போது வேகாக்கொல்லை என்ற ஊராக விளங்குகிறது. பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை திருத்தலத்தில் அசுரர்கள் மூவரையும் திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமான், வதம் செய்த களைப்பு நீங்குவதற்காக வேகாக்கொல்லையில் வந்து களைப்பாறினார். அதனால் இந்த ஊரில் அருள் பாலிக்கும் சிவன் களைப்பாளிஸ்வரர் என திருநாமம் பெற்றார்.

மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் முழுமுதற் கடவுளாம் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், சனீஸ்வர பகவான் ஆகியோருக்கு தனித்தனிச் சன்னிதிகள் உள்ளன. கருவறையில் சிவலிங்க வடிவமாகக் காட்சி தருகிறார் களப்பாலீஸ்வரர். இன்னொரு சந்நிதியில் ஸ்ரீ விசாலாட்சி அம்மையாக அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.

தேவர்களுக்கே கலி தீர்த்து, கடாட்சம் கொடுத்த இடம் என்பதால் வேகாக்கொல்லை களப்பாளீஸ்வரரை வழிபட்டால் மலைபோல் வரும் துன்பங்களும் பனி போல் கரைந்து போகும் என்பது நம்பிக்கை.

படங்கள்: ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x