Published : 03 Mar 2016 11:56 AM
Last Updated : 03 Mar 2016 11:56 AM

திருத்தலம் அறிமுகம்: ஈச்சங்காடு லெட்சுமி நரசிம்மர் ஆலயம் - சுவாதியில் கண்டெடுத்த சாந்த நரசிம்மர்

ஈச்சங்காடு - பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான கொங்கனர் வழிபட்ட லெட்சுமி நரசிம்மர் கோயில் கொண்டிருக்கும் திருத்தலம் இது.

அரியலூர் மாவட்டத்தின் பென்னாடத்திற்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஈச்சங்காடு. இந்த ஊரைத் தழுவிச் செல்லும் வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது லெட்சுமி நரசிம்மர் கோயில். முந்தைய காலத்தில் இப்பகுதி புன்னை மரங்கள் நிறைந்த வனமாக இருந்திருக்கிறது. அப்போது ஒரு சமயம், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கனர் திருப்பதி திருமலை செல்லும் வழியில் சில காலம் இந்த புன்னை வனத்தில் தங்கி லெட்சுமி நரசிம்மரை வைத்து தவம் செய்து வந்தார். தவக்காலம் முடிந்து அங்கிருந்து கிளம்புகையில், தான் வழிபட்டு வந்த லெட்சுமி நரசிம்மர் சிலையை புன்னை வனத்திலேயே விட்டுச் சென்றார் கொங்கனர் சித்தர்.

காலங்கள் கடந்தன. புன்னை வனத்திற்கு அருகிலிருந்த தளவாய் கிராமத்தில் வசித்த மக்களுக்குள் மோதல் ஏற்பட்டு இருபிரிவாகி நின்றார்கள். இனி தளவாய் கிராமத்தில் வசிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த ஒரு பிரிவினர், அங்கிருந்து வெளியேறி புன்னை வனக்காட்டிற்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் வனத்தின் ஒரு பகுதியை அழித்துக் குடிசைகளைப் போட்டு குடியேறினார்கள். அதுதான் பின்னாளில் ஈச்சங்காடு ஆனது. நாட்கள் நகர்ந்தன. கோயில் இல்லாத ஊரில் குடியிருப்பதா? என்று ஈச்சங்காட்டு மக்கள் யோசித்தனர்.

கனவில் காட்சிகொடுத்த நரசிம்மர்

அப்போது ஒருநாள் ஊர் பெரியவர் ஐயன் என்பவர் கனவில் காட்சிகொடுத்த லெட்சுமி நரசிம்மர், கொங்கனரால் வழிபாடு செய்யப்பட்ட தனது உருவம், புன்னைவனக் காட்டுக்குள் புதையுண்டு இருப்பதாகவும் அங்கிருந்து தன்னை எடுத்து வந்து கோயில் கட்டி வழிபடும் படியும் திருவாக்குச் சொன்னாராம். பொழுது விடிந்ததும், தான் கண்ட கனவை ஊர் மக்களிடம் சொன்னார் ஐயன். அப்போதே லெட்சுமி நரசிம்மரைத் தேடி ஐயன் தலைமையில் காட்டுக்குப் புறப்பட்டனர் மக்கள். கனவில் சொன்னபடியே காட்டுக்குள் சிலையாய் புதையுண்டு கிடந்தார் லெட்சுமி நரசிம்மர். அவரை எடுத்து வந்து ஊருக்குள் வைத்து ஆலயம் எழுப்பிக் கொண்டாடினர் மக்கள்.

எதிர்ப்புகள் அகல அகம்பாவம் ஒழிய

சுவாதி நட்சத்திரத்தில் லெட்சுமி நரசிம்மரை காட்டுக்குள் கண்டெடுத்த மக்கள் அதே நட்சத்திரத்தின் போது கோயிலுக்குள் அவரை பிரதிஷ்டை செய்தனர். எனவே, இத்திருத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தின் போது சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. சுவாதி நட்சத்திரத்தின் போது தான் நரசிம்மர் உக்ர நரசிம்மராக அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்தார். இதனால், எதிர்ப்புகள் அகலவும் அகம்பாவத்தை ஒழிக்கவும் இங்கே வந்து பிரார்த்தனை செய்வது நலம் பயக்கும் என்பது நம்பிக்கை.

இங்கே, உக்ர நரசிம்மராக இருந்து சாந்த நரசிம்மராக மாறிய பின் லெட்சுமியை தனது இடது தொடையில் அமரவைத்த நிலையில் காட்சி தருகிறார் நரசிம்மர். சித்திரை அல்லது வைகாசியில் வரும் நரசிம்மர் ஜெயந்தியின் போது பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் இங்கே விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x