Published : 12 Nov 2015 12:30 PM
Last Updated : 12 Nov 2015 12:30 PM

திருத்தலம் அறிமுகம்: அரூபமாய அருளும் அழகர் - சலுப்பை துறவுமேல் அழகர் ஆலயம்

தியானத்தைக் கலைத்த பெண்கள் இருவரை அரூபமாக்கிய துறவி ஒருவர் அரூபமாகவே கோயில் கொண்டிருக்கும் தலம்தான் சலுப்பை துறவுமேல் அழகர் கோயில்.

கங்கைகொண்ட சோழபுரம், முன்பு ராஜேந்திர சோழனின் தலைநகரமாக இருந்தது. இப்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் வடக்கு எல்லையில் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது சலுப்பை கிராமம். சாளுக்கியப் படைகளை சோழப் படைகள் துவம்சம் செய்த இடம் என்பதால் இதற்கு ‘சாளுக்கிய குல நாசனி’ என்பது தான் பழைய பெயர். அது சலுக்கையாக சுருங்கி இப்போது சலுப்பையாக மருவிவிட்டது.

சலுப்பையில் அந்தக் காலத்தில் பிராமணர்கள் அதிகம் வசித்தார்கள். ஊருக்குள் அவர்களுக்கான பொதுக் கிணறு ஒன்றும் இருந்தது. ஒருநாள் சலுப்பைக்கு வந்த யோகி ஒருவர் அந்தக் கிணற்றின் மீது அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இது தெரியாமல், பிராமணப் பெண்கள் இருவர் கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தனர். அவர்கள் தண்ணீரை இழுக்கும்போது யோகியின் மீது நீர்த்துளிகள் பட்டு தியானம் கலைந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த யோகி, அந்தப் பெண்கள் இருவரையும் அரூபமாக்கி சபித்ததுடன் தானும் அந்தக் கிணற்றுக்குள்ளே குதித்து கிணற்றையும் மூடிக்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவர்தான் இப்போது ஊரைக் காக்கும் துறவு மேல் அழகர்.

கரூர் சித்தர்

ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் ஆன்மிக குருவாக இருந்தவர் கரூர் சித்தர். அவர் ஜீவ சமாதி அடைந்த இடம்தான் துறவு மேல் அழகர் கோயில் என்கிறார்கள்.

துறவுமேல் அழகருக்கு இங்கு உருவம் இல்லை. ஒரு கருங்கல் மேடை மட்டுமே இருக்கிறது அரூபமாகத்தான் இருக்கிறார் அழகர். பெண்கள் யோகியின் தவத்தைக் கலைத்தார்கள் என்பதற்காக இப்போதுவரை இந்தக் கோயிலின் உள்பகுதிக்குள் இளம் பெண்கள் அனுமதிக்கப் படுவதில்லை. கருவறையிலிருந்து வெளி முகப்பு வரையும் சூடம் ஏற்றி வைக்கிறார்கள்.

அழகரின் தூதர் வீரனார்

அழகருக்கு அருகிலேயே வீரனார் கோயில். இந்தக் கோயிலுக்கு எதிரே சுதையால் ஆன பிரம்மாண்டமான யானை, குதிரை சிலைகள் நிற்கின்றன. வீரனாரை வேண்டினால் அழகரின் தூதுவராக இருந்து வேண்டியதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இன்னும் நிலவுகிறது. தைப்பொங்கல் கரிநாளில் இங்கே பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் சுபகாரியங்கள் எதுவாக இருந்தாலும் துறவு மேல் அழகரைத் தொழாமல் தொடங்குவதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x