Published : 22 Dec 2016 09:52 AM
Last Updated : 22 Dec 2016 09:52 AM

குகைக்குள் குடியிருந்த குகன்

தேவர்களால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டு வந்ததாக நம்பப்படும் திருத்தலம், கழுகுமலை கழுகாசல மூர்த்தி ஆலயம்.

கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். முற்காலத்தில் அடர்ந்த வனம் கொண்ட குன்றாகத் திகழ்ந்த கழுகுமலை உவணகிரி என்றழைக்கப்பட்டது. இந்த மலைக்கு தெற்கே இருந்த பழங்கோட்டை என்ற பகுதியை அதிமதுர பாண்டியன் எனும் சிற்றரசன் ஆட்சிசெய்து வந்தான். ஒருசமயம் வேட்டைக்கு வந்த பாண்டியன், களைப்பு மிகுதியால் உவணகிரி வனத்தில் வேங்கை மரத்து நிழலில் சற்றே அயர்ந்து தூங்கிவிட்டான். அந்த நண்பகல் நேரத்தில் அந்த வனத்திற்குள் எங்கோ கோயில் மணி ஓசை கேட்க விழித்தெழுந்தான் மன்னன்.

மயில் மீதமர்ந்த முருகன்

அப்போது, அவனுக்குச் சற்றுத் தொலைவில் காராம்பசு ஒன்று, பாறை ஒன்றின் மீது தானாகப் பாலைச் சுரந்து கொண்டிருந்தது. ஆச்சரியப்பட்டுப்போன மன்னன், ஆர்வத்தில் அந்தப் பாறையைச் சற்றே நகர்த்திப் பார்த்தான். அவ்விடத்தில் ஒரு குகை இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தான். அங்கே மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் சிலையாகக் காட்சி கொடுத்தார் முருகப்பெருமான். இது தேவர்கள் வழிபட்டு வந்த மூர்த்தி என்பதால் தான் காராம்பசு தாமாகவே அவ்விடத்தில் பால் சுரந்தது என்பதைப் பிற்பாடு தெரிந்துகொண்ட அதிமதுர பாண்டியன், அனைவரும் வழிபடும் வகையில் அங்கே கோயில் ஒன்றை எழுப்பினான்.

கழுகு முனிவருக்கு விமோசனம்

ராவணன், சீதாபிராட்டியைக் கவர்ந்து சென்றபோது, அதைத் தடுக்க முற்பட்டது ஜடாயு. ஆனால், றெக்கையை வெட்டி சடாயுவை வீழ்த்திவிட்டு சீதாபிராட்டியைத் தூக்கிச் சென்றுவிட்டான் ராவணன். குற்றுயிராகக் கிடந்த ஜடாயு, ராமபிரமான் வந்து பார்த்தபோது அவரிடம் நடந்த உண்மைகளைச் சொல்லிவிட்டு உயிரைவிட்டது. ஜடாயுவின் இழப்பைத் தாங்க முடியாத ராமபிரான், தானே ஈமச்சடங்குகளைச் செய்து ஜடாயுவை நல்லடக்கம் செய்தான்.

ஜடாயு இறந்த செய்தியைக் கேட்ட அதன் உடன் பிறப்பான சம்பாதி முனிவர் ஓடோடி வந்தார். “உடன்பிறப்புக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களைக்கூட செய்ய முடியாத பாவியானேனே. இந்தப் பாவத்திற்கு நான் எங்கு சென்று பரிகாரம் தேடுவேன்” என்று புலம்பினார் சம்பாதி முனிவர். அவரைத் தேற்றிய ராமபிரான், “தென்னாட்டில் உள்ள உவண கிரியில் குடிகொண்டிருக்கும் முருகப் பெருமானை தரிசித்து உங்கள் பாவத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள்’’ என்று உபாயம் சொன்னார்.

அதன்படியே கழுகு முனிவராகிய சம்பாதி உவண கிரிக்கு வந்து கந்தப்பெருமானை வேண்டி பரிகாரம் தேடிக் கொண்டார். அதற்குப் பிறகு, கழுகு முனிவர் நீண்ட நெடுங்காலம் இங்கேயே தங்கி இருந்ததால் உவணகிரியானது கழுகுமலை எனப் பெயர் விளங்கலானது.

கழுகாசலமூர்த்தி திருவிழாக்கள்

கழுகாசலமூர்த்தி ஒரு முகம், ஆறு கரங்களுடன் மயில்மீது அமர்ந்திருப்பதும் மயிலின் தலைப்பகுதி அய்யனின் இடதுபக்கம் இருப்பதும் இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். வள்ளி, தெய்வானை தேவியர் முருகப்பெருமானுக்கு முன்பு பக்கவாட்டில் இறை வனை நோக்கி இருப்பதும் தனிச்சிறப்பு. பொதிகை மலையில் உறையும் அகத்திய முனிவருக்கு ஞானத்தை அருளும் ஞானகுருவாகவும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் நீக்கி, மங்கள வாழ்வளிக்கும் மூர்த்தியாகவும் விளங்குவதால் இத்திருத்தலம் ‘குருமங்கள ஷேத்திரம்’ என்றும் போற்றப்படுகிறது.

தைப்பூசத்தின் போது கழுகாசல மூர்த்திக்குப் பத்து நாள் திருவிழா. பங்குனி உத்திரத்தின் போது நடக்கும் பதின்மூன்று நாள் திருவிழாவில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இவை இல்லாமல், நரவாரத்திரி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, திருவாதிரை, வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்களும் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x