Last Updated : 23 Jun, 2016 12:12 PM

 

Published : 23 Jun 2016 12:12 PM
Last Updated : 23 Jun 2016 12:12 PM

உம்மை விட்டுவிட முடியாதே...

திருவரங்கத்தில், திருப்பணிகளில் ஈடுபட்டு வந்தவர் ராஜ மஹேந்திரப் பெருமாள் அரையர். ஆனால் அரையரின் குமாரர் 'அரங்க மாளிகை' என்பவர் அவரது எண்ணங்களுக்கு மாறாக துஷ்ட சகவாசத்தில் திரிந்துகொண்டிருந்தார்.

சிறந்த வைணவத் தொண்டரான ராஜமஹேந்திரப் பெருமாள் அரையரின் திருமகன் இப்படி தவறான செய்கைகளில் ஈடுபட்டதைக் கண்டு பலரும் வருந்தினர்.

அரையரின் மகனோ தொடர்ந்து தீயோர் சேர்க்கையால் கெட்டு அலைந்தார். இது அரையருக்குத் தலை இறக்கத்தை ஏற்படுத்தியது. அவர் என்ன அறிவுரை கூறியும் மகன் அரங்கமாளிகை செவியில் ஏறவில்லை. அவர் ராமானுஜரிடம் தம் மகனை நல்வழிப்படுத்த விண்ணப்பித்தார். அரையரின் வேண்டுகோளை ஏற்று மைந்தரை தம்மிடம் வரச்சொல்லி நல்ல உபதேசங்களைச் செய்வித்தார்.

ஒரு மாத காலம் சென்ற பிறகு, தீயோர் தூண்டுதலாலும் பழைய சகவாசத்தாலும் அவர் ராமானுஜரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்.

ராமானுஜர் சற்று மனக் கலக்கம் அடைந்தார். தம் உபதேசம் பயன்பெறாமல் விழலுக்கு இரைத்த நீராயிற்றே என்று எண்ணி வருந்தினார். தம் முயற்சியை அவர் விடவில்லை. அவர் மகன் சென்ற இடம் அறிந்து அவ்விடத்துக்கு விரைந்தார். சூதும் குடியும் கும்மாளமுமாக இருக்கும் அவ்விடம் நோக்கி ராமானுஜர் செல்வதைப் பார்த்த மக்கள் வியப்பு அடைந்தனர். ராமானுஜர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

வெளியில் நின்றுகொண்டு தாம் வந்திருப்பதாகச் செய்தி சொல்லியனுப்பினார். அதைக் கேட்ட அரையரின் மகன் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் திரும்பிப் போகும்படியும் ராமானுஜருக்குப் பதில் சொல்லி அனுப்பினார். அதற்கு ராமானுஜர், “என்னை அவர் விட்டுவிடலாம். ஆனால் அவரை என்னால் விட முடியாதே…” என பதில் சொல்லி அந்த இடத்திலேயே நின்றிருந்தார்.

இந்த வார்த்தைகள் அரையரின் மகனான அரங்க மாளிகையின் சிந்தனையைத் தூண்டின. நாடு புகழும் நல்லவர். துறவி, துஷ்டனான என்னை விடமாட்டேன் என்கிறார். தன் நலனில் அவர் காட்டிய உறுதி, அரங்க மாளிகையின் உள்ளத்தைத் தொட்டு அவரின் நல்லுணர்வைத் தட்டி எழுப்பியது.

ஓடோடி வந்து தனக்காகக் காத்து நிற்கும் கருணைக் கடல் ராமானுஜரின் திருவடியில் விழுந்து, தன் அறியாமையை மன்னிக்க வேண்டினார். அன்றுதொட்டு, ராமானுஜரின் உபதேசங்களைக் கேட்டுத் திருந்தி பிறரையும் நல்வழிப்படுத்துபவராக விளங்கினார், ராஜ மஹேந்திரப் பெருமாள் அரையரின் மகன் அரங்க மாளிகை. அரையர் இதனால் மனம் மகிழ்ந்தார்.

இப்படித் தீய வழியில் செல்பவர்களையும் திருத்திப் பணி செய்தார் ராமானுஜர். மனித சமுதாயம், மேடு, பள்ளமற்ற உன்னதமான சமுதாயமாக மாறுவதற்கு மக்களை நல்வழிப்படுத்தி, மக்களை மாசற்ற பாதையில் அழைத்துச் சென்ற மகான் ராமானுஜர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x