Published : 06 Jul 2017 10:28 AM
Last Updated : 06 Jul 2017 10:28 AM

இறைமை இயற்கை 07: இரையாகும் வெப்பம், இறையான வெப்பம்

தீ,நெருப்பு, கனல், தணல், சுடர், தழல் போன்றவை எல்லாம் ஒரே தன்மையைக் கொண்ட வேறு வேறு பெயர்கள்; வெப்பம் என்பது அதன் குணம். எண்ணற்றப் பெயர்களைக்கொண்ட இறைவன், இறைத்தன்மை என்கிற குணத்தைக் கொண்டிருப்பதைப் போன்றது இது.

இறைவன் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறான். அதுவே பிரபஞ்சம் எனப்படுகிறது. பிரபஞ்சம் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவே காலம் (Time) எனப்படுகிறது. காலம் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதுவே வாழ்க்கை.

ஓர் உடம்பானது இந்தப் புவியில் பிறப்பதும், அது வளர்வதும், பிறகு மூப்படைந்து, கடைசியில் இறந்து போவதும் காலத்தின் இயக்கத்தால் விளைகிறது. ஐம்பூதங்களில் நெருப்பும் இப்படியான இயக்கத்தைக் கொண்டதுதான். நேற்றைக்கு இருந்த நெருப்பு இன்றைக்கு இருப்பதில்லை; இன்றைக்கு இருந்த நெருப்பு நாளைக்கு இருக்காது.

நேற்று – இன்று – நாளை என்றுகூட பார்க்கத் தேவையில்லை. கடந்த நொடியில் எரிந்த நெருப்புக்கும், இந்த நொடியில் எரியும் நெருப்புக்குமே வேறுபாடுகள் உண்டு. இரண்டும் வெளிப்படுத்திய வெப்பத்தின் தன்மையில் வேறுபாடுகள் உண்டு. இத்தகைய நொடிக் கணக்குகள் எல்லாமே மனிதர்களுக்கானவை; மனிதர்கள் வகுத்தவை. நெருப்பின் காலக் கணக்கே வேறு. அது இறைவனின் காலக் கணக்கோடு இணைந்தது.

வெப்பமாய், தட்பமாய்

சைவ சித்தாந்தமானது, சிவனை ஒளியின் வடிவமாய், தீயின் வெம்மையாய் அதிகம் உணர்ந்திருக்கிறது.

‘வெய்யாய் தணியாய் இயமான

னாம்விமலா’

(திருவாசகம் – சிவபுராணம்)

என்று வெப்பமாகவும், தட்பமாகவும் விளங்குகிறவன் இறைவன் என்கிறார் மாணிக்கவாசகர். வெப்பம் – தட்பம் இரண்டுமே இறையின் குணம் என்பது அவரது அனுபவம். முந்தைய நொடியில் வெப்பமாய் இருந்தது, அடுத்த நொடியில் தட்பமாய் மாற்றுவதும், அடுத்த நொடியில் தட்பமாய் இருப்பதை இன்னொரு நொடியில் வெப்பமாய் மாற்றுவதும் நெருப்பின் இயல்புகள்.

‘தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ

செல்வமே சிவபெரு மானே

(திருவாசகம் – பிடித்த பத்து)

என்கிற வரிகளின் மூலம், சிவபெருமான் ஒளிதரும் மெல்லிய விளக்காகவும் எரிவான்; சுடர் விட்டெரியும் பெருந் தீயாகவும் வளர்வான் என்கிறார் அவர்.

அழியாத ஆனந்தம்

வீடுபேற்றின் சுகத்தைக் கூறும் அதே ‘பிடித்த பத்து’ எழுசீர் விருத்தத்தில், தன்னுடைய உடம்பை உருக்கி இளைக்க வைத்தவனும், தன்னுடைய உள்ளத்தின் ஒளியைப் பெருக்க வைத்தவனும் சிவனே என்கிறார் மாணிக்கவாசகர்.

‘ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்த மாய’

(திருவாசகம் – பிடித்த பத்து)

என்கிற வரிகள், பன்னடுக்குப் (Multiple Layer) பொருள் பொதிந்தவை.

ஒரு பொருள் உருக வேண்டுமானால், அதில் வெப்பம் பெருக வேண்டும். ஒரு பனிக்கட்டி உருக வேண்டுமானால், அதன் சூழலில் வெப்பம் மிகுந்திருக்க வேண்டும். வெப்பத்தோடு சேரும் வெண்ணெயே உருகி நெய்யாக மாறுகிறது. அதிகரிக்கும் உலக வெப்பம், துருவப் பனியை உருக்குகிறது.

மாணிக்கவாசகர் ‘ஊனினை உருக்கி’ என்கிறார். ஊன் என்றால் உடம்பு. உள்சூடு மிகுந்த உடம்பு இளைக்கவே செய்யும். இறையனுபவம் என்பதே அகத்தில் ஒளிகூட்டி, வெப்பத்தை வளர்க்கும் ஒரு செயல்தான். எனவே மாணிக்கவாசகரின் ஊன் உருகியதில் ஆச்சரியமில்லை தானே. இப்படி உடம்பு இளைக்குமளவுக்கு உள்ளொளியாகிய வெப்பத்தைப் பெருக்குவதே, அழியாத ஆனந்தத்தை தரும் என்பது அவரது திருவாக்கு.

உலகு கடந்தவன்

திருமூலரோ, இன்னும் ஒருபடி மேலே சென்று, எல்லாவிதமான ஒளிகளுக்கும் மேலான ஒளி சிவனே என்று வியக்க வைக்கிறார்.

‘ஒண்சுட ரானை உலப்பிலி நாதனைஒண்சுட ராகி என்னுள்ளத் திருக்கின்ற

கண்சுட ரோன்உல கேழுங் கடந்தஅத்

தண்சுடர் ஓமத் தலைவனு மாமே.’

(திருமந்திரம் – அக்கினி காரியம் – பாடல்: 8)

எல்லா ஒளிகளுக்கும் மேலான ஒளியாய் இருப்பவனும், இறப்பில்லாத முதல்வனுமான இறைவன் என் உள்ளத்தில் இருக்கிறான். அவன் எப்படிப்பட்டவன் என்றால், தனது மூன்று கண்களையும் மூன்று சுடர்களாகக்கொண்டு, ஏழு உலகங்களையும் கடந்து நிற்கின்றான். அத்துடன், சுடர்விட்டு எரியும் பல வேள்விகளுக்கும் தலைவனாக இருக்கிறான் என்கிறார் திருமூலர்.

பாவம் பொசுக்க...

திருப்பாவை பாடிய ஆண்டாளோ, இறைவனை ‘யமுனை நதிக்கரையில் பிறந்த அணி‘விளக்கே’ என்று நகைமுரண் (நீர்+நெருப்பு) காட்டுகிறார்.

ஆயர் குலத்து விளக்காக விளங்கும் தாமோதரனை வாயாரப் பாடி, மனதாரச் சிந்தித்தால், முன் செய்த பாவங்களும், இன்னும் செய்ய இருக்கின்ற பாவங்களும் நெருப்பில் இட்ட பஞ்சுபோல பொசுங்கிப் போகும் என்பது ஆண்டாளின் அருட்சிந்தனை.

அந்த வரிகள்:

‘வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பிலோர் எம்பாவாய்’

(நாலாயிர திவ்யப் பிரபந்தம் - திருப்பாவை – பாடல்: 5)

தீயை ஒரு காதலியாக, உயிர்த் தோழனாக, இறைத் தூதனாக வரித்துக்கொண்டு எழுதி மகிழ்ந்தவர் பாரதியார். நெருப்பு குறித்த தனது கவிதையில்,

‘நீ சுடுகின்றாய்; நீ வருத்தந் தருகின்றாய்; விடாய் தருகின்றாய்; சோர்வு தருகின்றாய்; பசி தருகின்றாய். இவை இனியன.’

(வசனக் கவிதைகள் – ஞாயிறு: 4)

நிச்சயமாக வெப்பம் இல்லாமல் பசியும் இல்லை. வெப்பம் இல்லாமல் செரிமானமும் இல்லை. இவை இரண்டும் இல்லாமல் வாழ்க்கையே இல்லை.

ஏனென்றால் வெப்பமே இரையாகிறது. வெப்பமே இறையுமாகிறது!

கட்டுரையாளர் தொடர்புக்கு
b.kalanidhi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x